Friday, January 1, 2010

மக்கள் சார்ந்த புத்தாண்டு மலருமா?

2010ம் ஆண்டு இன்று தொடங்குகிறது. இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு, உலக அரங்கில் பேசப்படுகிறது. சுற்றுசூழல் பாதிப்புகளால் உலகம் அச்சுறுத்தப்படும் வேளையிலே, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஐ.நா.வின் தலைமையில், ஒரு பருவநிலை மாற்ற பிரச்சனை மீதான மாநாட்டை, டென்மார்க் நாட்டில் கோபன்ஹெகன் நகரில் நடத்தி முடித்தனர். அந்த மாநாடு தனது இலக்கை அடைந்ததா என்றால் இல்லை. அந்த மாநாட்டில் உலக நாடுகள் அனைத்திற்குள்ளும் ஒத்த கருத்து எழுந்ததா என்றால் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் அமுலாக்கப்படுவதற்காக, பருவ நிலை மாற்ற பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கோடு தீட்டப்பட்ட கியோடா பிரகடனம், தங்கு தடையில்லாமல் எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்றால் இல்லை. கியோடா பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய வரைவு திட்டம் உருவாக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. அப்படியானால் அந்த மாநாடு என்னதான் கூறியது? மாநாட்டில் கடைசி நாட்களில் கலந்து கொண்ட, இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், வருகின்ற 2010ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சரியான தீர்வை பருவநிலை மாற்றப்பிரச்சனைக்கு, உலக நாடுகள் அனைத்தின் ஒப்புதலோடு உருவாக்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதாவது இன்று மலர்கின்ற புத்தாண்டை எதிர்பார்த்து, அந்த உலக நாடுகள் மாநாடு தன்னை நிறைவு செய்து கொண்டது.பருவநிலை மாற்றமும், பூமி வெப்பமடைதலும் இந்த உலகின் சுற்றுசூழலை அச்சுறுத்தக்கூடிய பிரம்மாண்டமான நிகழ்வுகள். அவற்றைப்பற்றி திட்டமிடக்கூட, இந்திய நாட்டை எதிர்பார்க்கின்ற நிலைமை, உலகில் இருப்பதை கோபன்ஹெகன் மாநாடு நிரூபித்துக் காட்டியது. ஒரு காலத்தில் இந்தியா அணிசேரா நாடுகளின் ஈர்ப்பு மையமாக மட்டுமே இருந்தது. இன்றைக்கு இந்தியா உலக நாடுகளின் ஈர்ப்பு மையமாக, முக்கியமான உலகப் பிரச்சனையை விவாதிக்கும் போது, மாறியுள்ளது. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? இந்த மாற்றம் இந்தியாவை தொடர்ந்து வலுப்படுத்து வதற்கு உதவுமா? இப்படிப்பட்ட கேள்விகள் புத்தாண்டு தொடங்கும் போது, எழுப்பப் படவேண்டும்.அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ஊடகச் செய்தி ஒன்று, கடந்த பத்தாண்டுகளை ஆய்வு செய்து, உலக பொருளாதாரத்தில் இந்தியா அறுதியிட்ட நிலையை எடுத்துக் கூறியிருந்தது. அதாவது உலகப் பொருளாதாரம் உயர் தொழில் நுட்பங்களை சார்ந்து சென்றிருக்கும் சமீபத்திய சூழலில், 2000ம் ஆண்டு தொடங்கும் போது, எப்படி இருக்குமோ என்ற ஐயமும், விவாதமும் எங்கெனும் எழுந்தது. 1999ம் ஆண்டு இறுதியில் மென்பொருள் வளர்ச்சி எங்கே கொண்டு விடும் என்ற குழப்பத்தில் உலகம் ஆழந்து இருந்தது. அப்போது 2000ம் ஆண்டின் தொடக்கம், மென்பொருள் துறையிலும், இந்தியா என்ற பெயரைப் பொறித்தது. இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும், இந்தியர்கள் மென்பொருள் உற்பத்தியில் பல்வேறு படிக்கட்டுகளை விரைந்து ஏறிக்காட்டினார்கள். அதனால் நிறைவு பெற்ற பத்தாண்டு, இந்தியாவை மென்பொருள் தொழிலில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகவும், தலைமையாகவும் கொண்டு போய் நிறுத்தியது. மேற்கண்ட பத்தாண்டு நிகழ்வுகளை அடித்தளமாகக் கொண்டு, வீழ்ந்து வரும் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஜெர்மனும், அயர்லாந்தும் எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்கு வீழ்த்தப்பட்ட சூழலில், சீனா எழுந்தது; இந்தியாவும் எழுந்தது. இனி வருங்காலத்தில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை அமெரிக்கா தாங்கிப்பிடித்துக் கொண்டு நிற்கும்போது, சீனா முன்செல்லும் என்றும், ஆனால் அதையும் தாண்டி இந்தியா முன்னேறும் என்றும் அந்த அமெரிக்க ஏடு கருத்துக் கூறியிருந்தது. உலகின் தலைமையை ஏற்க, வருகின்ற பத்தாண்டுகளில் இந்தியா தயாராகும் என்பதாக அந்த ஏடு கணிப்புக் கூறியுள்ளது. அப்படிப்பட்ட வாய்ப்புகள் புறநிலையில் நிலவுகிறதா? அகநிலையில் நிலவுகிறதா என்பதுதான் இந்தியாவில் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. உலக மயமாக்கலின் வீழ்ச்சி என்பது இப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியாக காணப்படுகிறது என்று சொன்னால், இது பொருளாதார கொள்கைகள் சம்பந்தப்பட்ட வீழ்ச்சியா அல்லது தனியொரு நாடு தான் செயல்படுத்திய விதத்தில் ஏற்படுத்திக் கொண்ட வீழ்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும். உலகமயமாக்கல் என்பது தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கியது. ஆகவே பொருளாதார உலகமயமாக்கலின் தோல்வி என்பதோ, அதன் தாக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி என்பதோ, தனியார் மயமாக்கலையும், தாராளமயமாக்கலையும் எதிர்த்து கேட்கப்படவேண்டிய கேள்விகளாக நிற்கின்றன. இத்தகைய புரிதலை இந்தியாவை ஆளுகின்ற அரசோ, ஆட்சியாளர்களோ கிரகித்துக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது. ஏனென்றால், உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி சூழலில், அதன் பாதகமான தாக்கங்களால் வீழ்ந்து விடாமல், இந்திய பொருளாதாரம் நிலைத்து நிற்கிறது என்றும், முன்னேறி செல்லும் என்றும் அவ்வப்போது ஒப்பீட்டு அறிக்கைகளை, நமது தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். அப்படியானால் இந்திய பொருளாதாரத்தை வேறு ஒரு பாதையில் அவர் எடுத்துச் செல்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு காரணமான, உலகமயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் பின்பற்றப்படாமல் இருக்கிறதா? அதன் அடித்தளமான தனியார் மயமாக்கல் இந்திய பொருளாதாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதா? அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா? இத்தகைய கேள்விகள் நமக்கு எழுகின்றன.தனியார் மயமாக்கலின் உயர்கட்டமான ஏகபோக முதலாளித்துவத்தை, சட்டத்தின் மூலம் இந்திய அரசு கட்டுப்படுத்த முயன்ற காலமும் ஒன்று உண்டு. அதாவது ஏகபோக மூலதன கட்டுப்பாட்டு சட்டம் என்பதாக ஒரு சட்டத்தை இந்திய அரசு உருவாக்கி, ஒரு காலத்தில் செயல்படுத்த முயற்சித்தது. இப்போது அந்த சட்டத்தை நீக்கிவிட்டு, அதனுடைய இடத்தில் தங்கு தடையின்றி தனியார், அந்நிய நிதிமூலதன உள்நுழைவை ஆதரிப்பது மட்டுமின்றி, அதிகப்படுத்துவது என்ற கொள்கைக்கும் இந்திய அரசு வந்துள்ளது. தனது அரசுத்துறைகளில் ஒவ்வொன்றிலும் அந்நிய நேரடி நிதி மூலதன உள்நுழைவை, நாளுக்கு நாள் மத்திய அரசு அதிகப்படுத்தி வருகிறது. இத்தகைய போக்கு இந்தியாவை உலகின் முதலாவது இடத்திற்கு கொண்டு வர பயன்படுமா? அண்டை நாடான மக்கள் சீன அரசு தன்னுடைய வித்தியாசமான பொருளாதார கட்டுமானத்தில் நின்று கொண்டு, சமரசமின்றி அந்நிய நாட்டு நிதியுதவிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த ஒரு மக்கள் சார்பு அடித்தளக் கட்டுமானத்தையும் கையில் வைத்திருக்காத இந்திய அரசு அந்நிய நிதி மூலதன உள்நுழைவை அதிகப்படுத்தி வருவது எங்கே கொண்டு விடப்போகிறது? உயர் தொடர்பு சாதன துறையில் அரசு சார் நிறுவனங்களுக்கு போட்டியாக பல தனியார் துறையினரை, மத்திய அரசே உற்சாகப்படுத்தி வருவது என்பது எங்கே இழுத்துச் செல்லும்? ஆயுள் காப்பீட்டு துறையில், ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டலில் சிறப்பாக பணியாற்றும் பிரிவை விட்டு விட்டு, தனியார் ஆயுள் காப்பீட்டு கழகங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள், மக்களின் பணத்தையும், மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளையும் கொடுத்து ஊக்குவிப்பது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. பாரம்பரியமாக ஆதிவாசிகளின் பராமரிப்பில் இருந்த கனிம வளங்களை, பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு கொடுத்து புதிய சமூகப் பிரச்சனைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த நிலை தொடருமானால், இந்தியா உலகின் முதன்மை இடத்திற்கு செல்லமுடியுமா? 100 கோடி மக்களின் உழைப்பையும், பயன்படுத்தி இந்த நாட்டின் உற்பத்தியை வளர்க்கின்ற ஒரு பொருளாதாரத்தை, தனதாக்கிக் கொள்ளாமல் இந்த நாடு இந்த புத்தாண்டில் நம்பிக்கை நட்சத்திரமாக வளருமா? இத்தகைய கேள்விகள் பகிரங்கமான விவாதத்திற்கு வரவேண்டும் என்பதே நமது புத்தாண்டு விருப்பம்.