Wednesday, March 31, 2010

எதிர்கட்சியில்லா தேர்தல் ஜனநாயகம் எங்கே இழுத்துச் செல்லும்?

மியான்மர் நாடு தேர்தல் பாதைக்கு திரும்பப் போகிறதாம். அதையொட்டி வருகின்ற தேர்தலில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியிடக் கூடாது என்று ஒரு சட் டம் வந்துள்ளதாம். அதனால் எதிர்கட்சி தலைவியாக அறியப்பட்ட ஆங் சான் சூ கி தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமை எழுந்தது. அதையொட்டி அவரது கட்சியான தேசிய ஜனநாயக லீக் இந்த தேர்லைப் புறக்கணித்துள்ளது. அதன் மூலம் மியான்மர் என்ற பர்மாவில் நடக்கயிருக்கும் தேர்தல் அல்லது அரசியல் பாதை தவறானது என்ற செய்தியை உலக சமூகத்திற்கும், பர்மாவின் மக்களுக்கும் அதேசமயம் அங்கே ஆளுகின்ற ராணுவ ஆட்சியாளர்களுக்கும் அறிவிப்பதாக அது இருக்கிறது. அதேசமயம் இத்தகைய புறக்கணிப்பு தேசிய ஜனநாயக லீக் கட்சியை தனிமைப்படுத்தி விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சி என்று அறியப்படும் அந்த கட்சியை இதை வைத்தே கேள்வி கேட்கும் நிலையும் வரும். அதேசமயம் ராணுவ ஆட்சியாளர்களை யாருமே எதிர் கொள்ள முடியாது என்ற உணர்வும் எழலாம். அனைத்து நாட்டு சமூகத்திற்கு சூ கியும், தேசிய ஜனநாயக லீக்கும் மியான்மரில் ஜனநாயகத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலும், அவர்கள் தான் மக்களின் தேர்வு என்ற புரிதலிலும் இருந்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது அந்த அனைத்து நாட்டு சமூகத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சியானச் செய்தி தான்.
எதிர்கட்சியின் புறக்கணிப்பு தந்திரத்தின் மூலம், மீண்டும் ராணுவ தளபதிகளை ஆட்சியில் அமர்த்தக் கூடிய ஒரு செயல் நிறைவேறி விடும். நூற்றுக்கணக்கான தேசிய ஜனநாயக லீக் ஊழியர்களை சிறையில் அடைத்து, பல ஆண்டுகளாக அவர்களது கட்சி அலுவலகத்தை மூடி வைத்து, இந்த மாதம் அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள ராணுவ தளபதிகள் மீண்டும் அதிகாரத்தில் தொடர்வதற்கு ஏதுவாகப் போய்விட்டது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.
இந்தியாவின் எல்லையோரத்தில் இருக்கும் பர்மா என்ற இந்த மியான்மர் நாட்டில் 1990ம் ஆண்டிற்குப் பிறகு இப்போது 2010ல் தான் தேர்தல் அறிவிக் கப்படுகிறது. 90ம் ஆண்டில் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சூ கி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 59% வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மியான்மர் நாடாளுமன்றத்திற்கான 492 தொகுதிகளில், 394ல் சூ கியின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, ராணுவ தளபதிகளால் சூ கி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அவர் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தார். 1990ம் ஆண் டிலேயே ராப்டோ பரிசு, சகரோ பரிசு ஆகியவற்றை கருத்துரிமைக்காக அவர் பெற்றிருந்தார். 91ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றார். 92ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அனைத்து நாட்டு புரிதலுக்கான ஜவ ஹர்லால் நேரு விருது பெற்றார். இப்போது 64 வயதடைந்துள்ள ஆங் சான் சூ கி, உலக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற்றிருந்தும் கூட, மீண்டும் ஜனநாயக ரீதியாக வெல்ல முடியாத நிலைமை.
1945ம் ஆண்டு ஜுன் 19ம் நாள் ரங்கூனில் பிறந்த சூ கியின் தந்தை நவீன பர்மாவின் ராணுவ நிறுவனராகவும், தளபதியாகவும் இருந்தார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் பர்மாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றவர் அவர். அதே ஆண்டில் எதிர்ப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். சூ கி தனது பட்டப் படிப் புக்குப் பிறகு நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். ஐ.நா.சபையின் பணிகளில் மூன்றாண்டு பணியாற்றினார். 1972ல் டாக்டர் மைக்கேல் அரிஸ் என்பவரை மண முடித்தார். அவருக்கு அலெக்சாண்டர் அரிஸ், கிம் என்ற மகன்கள் பிறந்தனர். 1988ல் பர்மாவுக்கு திரும்பினார். 1999ல் தனது 53வது வயதில் அவரது கணவர் அரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். 1989ல் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்து சூ கியை தனது இறுதி நாட்களில் 5 முறை மட் டுமே அவரது கணவரால் சந்திக்க முடிந்தது. இங்கிலாந்தில் இருக்கும் தனது குழந்தைகளுடனும் தொடர்பறுந்த நிலை யில் சூ கி வீட்டுச் சிறையில் இருந்தார்.
1988ம் ஆண்டிலேயே ராணுவ தளபதி நீவின் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்கான மக்களின் போராட்டம் வெடித்தது. அப்போது சூ கி 5 லட்சம் மக்களுக்கு மத்தியில் ஜனநாயகத்திற்காக உரைநிகழ்த்தியுள்ளார். அதன்பிறகு புதிய ராணுவத் தலைமை ஆட்சியை கைப்பற்றியது. அதையொட்டியே சூ கியை பொதுச்செயலாளராக கொண்டு ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உரு வானது. நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், வீட்டுக் காவலில் இருந்து விடுதலைச் செய்கிறோம் என்பது தான், கடந்த 20 ஆண்டுகளாக சூ கி முன்னால் வைக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை மாற்று வதற்கான முயற்சியை மேற்கொள்ளாத இந்திய அரசும், சீன அரசும் சமீபத்திய ஐ.நா.வின் முயற்சிகளையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் எதிர்க்க முடியவில்லை. மியான்மரின் முன்மாதிரி என்பது, பொதுவாகவே உலக அரங்கில் தேர்தல் ஜனநாயகம் என்ற முன்னேறிய ஒரு வழிமுறை அமுலாகின்ற ஒவ்வொரு நாட்டிலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. சமீபத்தில் அதிபர் தேர்தலை முடித்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்ற இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஒரு குழுவினர், இதேபோலத் தான் நடந்துக் கொள்கிறார்கள். எப்படி எதிர்கட்சிகளை லாவகமாக இல்லாமல் செய்து, எதிர்ப்பாளர்களை சிறைக்குள் தள்ளி தொடர்ந்து ஆளக் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் ஆட்சி முறைகளிலேயே, நாடா ளுமன்ற பாதை தான் சிறந்தது என்பதும், அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது என்பதும் கேலிக்குரியதாக ஆகிக் கொண் டிருக்கிறது என்ற புதிய செய்தியை ஜனநாயக உணர்வாளர்கள் கண்டிப்பாக கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆதரவு பெற்றிருந்தும் கூட, உலக அரங்கில் ஜனநாயகத்திற்கான மியான்மர் இயக்கத்திற்கு ஆதரவு இருந்தும் கூட, ஆங் சான் சூ கியால் தனது நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியவில்லை. மியான்மர் நாட்டில் 14 மாநிலங்கள் இருக்கின்றன. அவை மாவட்டங்களாகவும், நகரங்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போன்ற ஒரு கட்டமைப்பு தான் அங்கே இருந்துக் கொண்டிருக்கிறது. மியான்மர் மீது பொருளாதார தடையை விதித்திருந்த அமெரிக்கா சமீபத்தில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உத்தர வாதத்தில் அதை திரும்பப் பெற்றது. அப்படி மீட்டெடுக்கப்படும் ஜனநாயகம் தான் இந்த தேர்தலை இப்படி நடத்துகிறது. அனைத்துலக சமூகங்களும் ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது என்று காட்டப்பட்டாலும், உள்நாட்டில் எதிர்கட்சி செயல்படுவதற்கே அனுமதிக் கப்படவில்லை என்ற அளவில் தான் அந்த தேர்தலும் நடைபெறுகிறது. மியான்மர் நாட்டிற்கு வெளிநாட்டு மூல தனம் என்பது மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இருந்து வருவதில்லை. சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்த் ஆகிய நாடுகளில் இருந்து தான் மூலதனம் இறக்குமதியாகிறது. நாட்டின் 60% விளைச்சல் நிலத்தில் நெல் உற்பத்தியை செய்கிறார்கள். அப் படிப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியான தேர்தல் முறையை சதிசெய்து உடைப்பது என்பது அங்கே பகிரங்கமாக நடந்துள்ளது. இதேநிலைமை தான் இலங்கைத் தீவில் நடத்தப்படுகின்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில், எதிர்கட்சிகளை உடைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய தந்திரங்களை செயல்படுத்திக்காட்டாத ஆளும் கட்சி களை காண்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்தக் காலகட்டம் ஜனநாயக தேர்தல் முறைகளை, உடைப்பதற்கான காலகட்டமா? மரத்தின் நுனிக்கிளையில் இருந்தே, அடிக்கிளையை வெட்டுகின்ற காலகட்டமா? எதிர்கட்சிகளை இல்லாமல் செய்வது ஆளும் கட்சிக்கு தற்காலிக வெற்றியை அளிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைக்கு நிரந்தரத் தோல்வியை அளிக்காதா? இந்தியாவில் இருக்கும் ஜனநாயக சக்தி கள், இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடினால் நல்லது.

Tuesday, March 30, 2010

அல்கொய்தா தேனீக்கூட்டை கலைக்கிறாரா ஒபாமா?

நேற்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 மனித வெடிகுண்டுகள் வெடித்தன. இரண்டும் பெண் மனிதவெடிகுண்டுகள். முதல் பெண் போராளி தன்னை வெடித்துக் கொண்டு 45 நிமிடங்கள் கழித்து, அடுத்த பெண் போராளி இன்னொரு மெட்ரோ நிலையத்தில் தன்னை வெடித்துக் கொண்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இது
செசன்யா தனிநாடு பிரிவினைக் கோரும் போராளிகளால் நிகழ்த்தப்பட்டது என்று முதலில் சந்தேகம் கொண்டார்கள். அதற்குள் செசன்யா விடுதலைப் போராளிகள், நடந்த சம்பவத்திற்கு உரிமைக் கோரி விட்டார்கள். தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு, அதன் மூலம் தங்கள் நாட்டின் விடுதலைக்கு போராடும் இந்தப் போராளிகள், யாருடைய ஆதரவில், யாருடைய உதவியில் போராடுகிறார்கள் என்ற கேள்வி மேலை நாட்டு வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. 2004ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த தற்கொலை பயங்கரவாதம் என்ற நிகழ்வு ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் செசன்யா விடுதலை போராளிகளுக்கு, அல்கொய்தா பயிற்சிக் கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆப்கான் தாலிபன் போராளிகளும் செசன்யா விடுதலை இயக்கத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், ஆப்கானிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், அமெரிக்கா பிரித்து விளக்குகிறது. அதில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்களை, அல்கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்துச் செயல்படுவதாக அவர் கள் அறிவிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கான்
சென்றுள்ளார். தாலிபன்களுடைய எந்த வகையிலும் ராணுவ ரீதியாக செயல்பட விடமாட்டோம் என்பது ஒபாமாவின் சூளுரை. அல்கொய்தாவை தோற்கடித்தே காட்டுவோம் என்பது அவரது வைராக்கியம். பாகிஸ்தான் அரசினுடைய உதவியுடன், பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஆப்கான் நாட்டிற்குள் தாக்குதலை தொடர்ந்து எடுத்துச் செல் வது அவரது வியூகம். தான் அதிபராக இருக்கும் போதே 2012ம் ஆண்டுக்குள் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் தோற்கடித்து விட வேண்டும் என்ற நோக்கில் அவரது ஆப்கான் வருகை அமைந்துள்ளது.
ஆப்கான் நாட்டில் இருக்கின்ற அமெரிக்க ராணுவத்தையும், நேட்டோ படைகளையும் உற்சாகப்படுத்தி தங்களது இலக்கை அடைய ஒபாமா துடிக்கிறார். அதற்காக ஆப்கானிலுள்ள பக்ரம் பகுதியில் நிற்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவால் தேர்தல் குளறுபடிகள் மூலம், ஆப்கானில் பொம்மையாக நிறுவப் பட்டுள்ள அதிபர் ஹமித் ஹார்சாயை காபூலில் சந்தித்திருக்கிறார். ஆப்கான் பிரச் சனையில் குழம்பிய நீரில் மீன் பிடிக்க இந்திய அரசுக்கும் ஆசைதான். ஆனால் வலியச்சென்று ஆதரவுக் கொடுக்கும் இந்திய அரசை அமெரிக்கா அதே மட்டத் தில் அங்கீகரிக்கத் தயாராயில்லை. தாலிபன்களில் வென்றெடுக்கப்பட முடிந்தவர்களுக்கு, நிதியுதவி செய்ய பல லட்சம் கோடி அமெரிக்க பணத்தை இறக்கி விட தயாராயிருக்கும் அமெரிக்க அரசு, அதற்கான சட்ட முன்வடிவையும் அமெரிக்க செனட் டில் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கைநிறைய பணம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் தாலிபன்களை துரத்துவதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அல்லது பிளவுப்படுத்தி வெல்வதற்கு தனது முழு முயற்சியை, அமெரிக்கா செலவழிக்கிறது. அதனால் இந்தியாவின் அண்டை நாடான ஆப் கானில் தனது போர் தந்திரங்களை செயல்படுத்த, இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானை மட்டுமே அமெரிக்கா சார்ந்திருக்க விரும்புகிறது.
அமெரிக்க அரசுக்கு அல்கொய்தாவின் இருத்தலேக் கூட, அச்சுறுத்தலை ஏற்படுத் துகிறது. அதனால் தான் ஆப்கானிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பேசிய ஒபாமா 9/11 தாக்குதலை அவர்களுக்கு நினை வுப்படுத்தினார். அதை செய்தவர் கள் என்று அல்கொய்தாவை அடையாளப் படுத்தினார். அல்கொய்தாவுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக ஆப்கான் மலைகளும், காடுகளும் இருப்பதை சுட்டிக் காட்டினார். அத்தகைய பாதுகாப்பான இடம் ஒன்றை அல்கொய்தாவிற்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக் கத் தான், அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் இறங்கியிருக்கிறார்கள் என்பதாக அந்த வீரர்களுக்கே எடுத்துச் சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஆப்கான் பற்றிய மாநாட்டில், அமெரிக்கா ஆப்கானில் பலவீனப்பட்டுக் கொண் டிருப்பதாக வெளிப்பட்ட கருத்துக்கள் கெடுவாய்ப்பானவை என்று தனது ராணுவ வீரர்களுக்கு விளக்கினார். அமெரிக்காவும், நேட்டோ படைகளும் கூடுதலாக 30,000 ராணுவ வீரர்களை, ஆப்கானுக்குள் இறக்கி விட முடிவு செய்திருப்பதும், தங்கள் பணியை முடித்து விட்டு தங்கள் ராணுவங்கள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த பணிமுடிப்பு செயலுக்காகத் தான், இப்போது தாக்குதலை துரிதப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆப்கான் அதிபர் கார்சாய்யுடன் புதிய புரிதலின்மை ஏற்பட்டுள்ளதை நீக்க ஒருபுறம் ஒபாமா முயன்றிருக்கிறார். தங்கள் நாட்டு பாதுகாப்பையும், ஆப்கா னிஸ்தான்பாகிஸ்தான் பிராந்திய பாது காப்பையும் இணைத்து பார்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள். அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பே, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பு சக்திகள் நடமாட்டத்தை இல்லாமல் செய்வதில் இருக்கிறது என்ற வேகத்துடன் அவரது செயல்பாடு பளிச்சிடுகிறது. தாங்கள் அல்கொய்தா மற்றும் தாலிபன் தலைமைக்கெதிராக கடும் தாக்குதல்களை நடத்துவதாகவும், அதில் அவர்கள் தலைமை நிலை குலைந்திருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார். அவர்களது நடமாட்டமும், பயிற்சி எடுத்தலும்,
சதி செய்தலும், தாக்குதலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்குகிறார். ஆனால் நடைமுறையில் இதே புரிதலை அல்கொய்தாவினர் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து நாட்டு விதிகளின் படி, தங்கள் சுய பாதுகாப்புக்காக, தாக்கு தல் நடத்த தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது அமெரிக்காவின் வாதம்.
அதேசமயம் பாகிஸ்தான் அரசோ, அமெரிக்க தூதரக ஆதரவுடன், ஆப்கானில் இந்தியாவின் நடமாட்டத்தையே இல்லா மல் செய்வதற்கு உள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒபாமாவின் ஆப்கான் பயணத்தின் மூலம், லஷ்கர் இ தொய்பாவையும் எதிர்த்து இயங்க வேண்டிய அவசியத்தை அவர் உணர் வாரா என்பதை மட்டும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆண்டுபலவாக ஆப்கான் மலைகளிலும், காடுகளிலும் இருந்து ஆதிவாசிகளுடன் இரண்டறக் கலந்து, ஆப்கான் ஆதிவாசிகள் மத்தியில் இருந்தே எழுகின்ற தாலிபனுக்கு உயிர் கொடுத்து, வளர்த்திருக்கின்ற அதன் மூலம் தானும் வளர்ந்திருக்கின்ற அல் கொய்தாவை, அமெரிக்கா முன்வைத்திருக் கும் போர்த் தந்திரங்களால் அழிக்க முடியுமா? அல்கொய்தாவை தாக்கும் போது, அந்த போராளிகள் சிதறி பல் வேறு இடங்களிலும், மாறிச் சென்று விரி வடைந்து விடமாட்டார்களா?
செசன்யா விடுதலை போராளிகளுக்கு அல்கொய்தாவின் தொடர்ந்த ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி ஆகியவை ஏற்கனவே 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலை யத்தில் நடந்த குண்டுவெடிப்பின் மூலம் அம்பலமானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த தற்கொலைப்படை தாக்குதல், நவம்பர் மாதம் நடந்த ரயில் தாக்குதல் ஆகியவை அதை மறுஉறுதி செய்தன. சென்ற ஆண்டு சீனாவில் நடந்த உய்கூர் எழுச்சியிலும், அல்கொய்தாவின் கரங்கள் வெளியே தெரிந்தன. உஸ்பெக்கின் ஆயுத எழுச்சிக்குப் பின்னாலும் அல்கொய்தா இருக்கிறது. மத்திய ஆசிய குடியரசுகளில் அவை பிரபலமாக இருக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அல்கொய்தாவால் பயிற்சிக் கொடுக்கப்பட்டு, உஸ்பெக்ஸ், செசன்யா, உய்கூர் ஆகிய போராளிக் குழுக்களை ஊக்குவித்து ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், கசக்ஸ்தான், தஜிகிஸ் தான் ஆகிய வட்டாரங்களில் இன்று சிதறியும், விரிந்தும், நீண்டும் இருக்கின்ற எதிரொலிகள் இவர்களால் நிறுத்தப்பட முடியுமா? தேனீகூட்டை தாக்கி அது சிதறி, பல இடங்களில் பரவுவதற்கு தான், ஒபாமாவின் தந்திரம் பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.

Monday, March 29, 2010

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும், முடிக்கப்படாத முக்கியப் பிரச்சனைகளும்

வருகிற ஏப்ரல் 8ம் நாள் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப் படயிருக்கிறது. அதிகமானசொல் லாடல்கள் ஆக்கிரமித்துள்ள தேர்தலாகத் தான் இந்த முறையும் அது இருக்கிறது. கடந்த தேர்தல்கள் எல்லாமே இதுபோன்ற தன்மையில் தான் நடைபெற்றன. இந்தியாவில் ஒவ் வொரு பொதுத் தேர்தலிலும் எப்படி வாக்குகள் பெறுவதற்காக வாக்குறுதிகள் கொடுக் கப்படுமோ, அதுபோல சற்றும் குறையாத நிலையில் தான் இலங்கைத் தேர்தல்களும் நடக்கின்றன. ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என் பது 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை. அதை தீர்ப்பதற்கான அணுகு முறைகளை ஒவ் வொரு முறையும், ஒவ்வொரு வடி வில் ஆளும் வர்க்கக் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் வாக்குறுதிக் கொடுப்பார்கள். அது வும் பழகிப்போன செய்தியாகப் போய் விட்டது.
சந்திரிகா குமாரதுங்கா போர் எதிர்ப்பு பேசி ஆட்சிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு தமிழர்கள் மீது போரை ஏவிவிட்டு, இனவாத தன்மையைக் காட் டினார். அதேபோல மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வரும்போது, சிங்கள தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு தேர்தல் பரப்புரைச் செய்தார். ஆட்சிக்கு வந்த வுடன் போரை நடத்தி, இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்கள் வாழ் நிலையையும் ஒழித்து விட்டார். பொன் சேகா அதிபர் தேர்தலில் மகிந்தாவுக்கு எதிராக போட்டியிட்டக் காரணத்தினால், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப்பட இருக்கிறார். அதன் மூலம் போர் வெற்றியை மகிந்தா கையெடுக்கலாம் என்றாலும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கூடுதலாக சிங்கள பவுத்த பிக்கு மாணவர்களை, காவல் துறையில் வைத்து மகிந்தா அரசாங்கம் அடித்து வைக்கிறது. அப்படி இருந்த போதும், சிங்கள மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெறுப்பு, ஆட்சியாளர் மீது உருவானதா என்று தெரியவில்லை. பொன்சேகாவின் கைதும், புத்த பிக்கு மாணவர்களை அடித்து துவைப்பதும் மகிந்தாவின் பெருமைகளை கேள்விக் கேட்கின்றன. அதாவது தமிழர்களை எதிர்த்து போரிட்டு வெல்வது தான் தனது லட்சியம் என்ற சிங்கள இனவாத தன்மையை இனி மேலும் ராஜபக்சே கூறி ஏமாற்ற முடியாது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி பெற்று, பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டோம் என்று வீராப்புக் கூறிக் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமே தன்னுடைய கொள்கை என்று இனியும் மகிந்தா பீற்றிக் கொள்ள முடியுமா? சிங்களர்கள் மீதும் தாக்குதல்களை குறிவைத்துச் செய்யக் கூடிய மகிந்தாவின் ஆட்சி, ஒரு குறிப்பிட்ட கும்பல் தனது அதிகார வெறிக்காக நடத்தப்படும் ஆட்சி தான் என்பது அம்பலமாகி நிற்கிறது.
மகிந்தாவின் இத்தகைய செயல்பாடுகள் அனைத்து நாட்டு சமூகத்தை, அவர் பக்கம் ஈர்க்கவில்லை. மேற்கத்திய நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும், மீண்டும் கூறி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இந்திய அரசும், சீன அரசும் கூட இப்போது எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லை என்று செய்தி வெளிவருகிறது. நேற்று வரை மகிந்தா ஆட்சிக்கு ஆதரவாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் பேசி வந்த இந்திய அரசும், சீன அரசும் இப்போது மௌனம் சாதிப்பதே ஆச்சரி யமான செய்தி தான்.
மனிதஉரிமைகள், கருத்துரிமை, சுதந்திர மான ஊடக உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காத ஒரு அரசாங்கம், தனது அரசியல் தந்திரமாக அவசரகால அரசியலை பயன்படுத்தி வருகிறது என்பதாக இந்திய ராணுவத்தில் உளவு தலைமையாக இருந்த கர்னல் ஹரிஹரன் கூறியுள்ளார். அடிப்படையில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு எந்தவொரு மனோபலமும் இல்லாத ஒரு சிங்கள அரசாங்கம், தங் களுக்குள்ளேயே பிரச்சனைகளை உரு வாக்கிக் கொள்வதும், அதிலேயே மூழ்கி விடுவதும் தான் இன்றைய நிலை.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 196 பேர் நேரடி உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இதில் மகிந்தா தலைமையிலான ஐக்கிய மக்கள் விடு தலை கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கான அனைத்து தந்திரங்களையும் மகிந்தா செய்துள்ளார் என்கிறார்கள். விகிதாச்சார முறைப்படி தேசிய பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, போட்டியிடும் கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகள் விழுக்காடுகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் 29 உறுப்பினர்களையும் சேர்த்து, முழுமை யான எண்ணிக்கையை நாடாளு மன்றத்திற்கு உருவாக்குவார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சவால் களைச் சந்திக்கிறது. இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரது தலைமையை எதிர்த்து, வெளியே
சென்று புதிய அமைப்புகளை உருவாக் கிக் கொண்டவர்கள் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டு சொல் லப்பட வேண்டியவர்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், கஜேந்திரன் போன்றோர் செய்கின்ற பரப்புரைகள், மகிந்தாவை எதிர்த்தோ, டக்ளஸ் தேவானந்தத்தை எதிர்த்தோ இருப்பதை விட சம்பந் தத்தையும், சுரேஷையும் எதிர்த்து அதிக மாக இருக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமான ஈர்ப்பை வைத்திருந்தார்கள். அதனால் தான் அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்ட தற்கிணங்க, தமிழ் மக்கள் பொன்சேகா விற்கு அதிகமான வாக்குகளை அளித் தார்கள் என்பதை மகிந்தா அரசாங்கம் கவனித்துக் கொண்டேயிருந்தது. அதை யொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்ற செல்வாக்கை, எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது மகிந்தா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது. இயல்பாகவே வெளியேறிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வு பூர்வமான விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர்களது வாக்குப் பிரிப்பு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வீனப்படுத்தப்படும். பலவீனப்படுத் தப்படும் இடங்களில், டக்ளஸ் கட்சியும், பிள்ளையான் கட்சியும் அதிக வாக்குகளை பெற முடியும். இவ்வாறு தான் ராஜபக்சே திட்டமிடுகிறார். இத்தகைய திட்டத்தை தமிழ் மக்கள் எந்த அளவுக்கு புரிந்துக் கொண்டு செயல்படுத்த முடியும் என்ற கேள்வியும் விவாதமாக இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட் டது என்பது ஒரு விமர்சனம். ஓஸ்லா மாநாட்டில் புலிகள் முன்வைத்த கருத்துக் கோப்பை ஏற்கவில்லை என்றும், இன் னொரு விமர்சனம். ஆனால் சம்பந்தரோ, சுரேஷோ கூறும்போது, தாங்கள்
சுயநிர்ணய உரிமைக்கான எந்தவொரு லட்சியத்தையும் விட்டு விடவில்லை என்கிறார்கள். எப்படியோ தமிழர் அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட்டால், சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு இன்றைய தேர்தலை சந்திப்பதற்கு அதுவே எளிதாக ஆகிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்ற கொள்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களையும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மட்ட கிளப் மாகாணத்தின் ஐ.தே.கா. வேட்பாளர் பஷீர் சுகதாவுத் கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், சிறுபான்மையினர் உரிமையை பறித்து அரசியல் சட்டம் உருவாகி விடுமோ என அஞ்சுவதாகவும் அவர் கூறி யுள்ளார். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அவர்களுக்கு அதிக நிலங்கள் சொந்தமாக இல்லை என்பதால் அரசு சிங்கள காலணியமயமாக ஆக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. போருக்குப் பிறகு முஸ் லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் கூடி வருகிறது என்றும் கூறுகிறார்கள். இருவரும் இருபெரும் சிறுபான்மை சமூகங்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அமைப்புகளுடன் இந்தத் தேர்தலில் தோழமையை வைத்துக் கொண்டுள்ளது.
மேற்கண்ட செய்திகள் சிங்கள ஆட்சியாளர்களின், பிளவுப்படுத்தி வெல்லும் சதியை முறியடிக்குமா என்ற கேள்வியுடன், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இன்றைய இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கின்ற குறைவான இடத்தில், தமி ழர்கள் எப்படி விவேகமாக காய் நகர்த்தப் போகிறார்கள் என்ற கவலை நமக்கு எழுகிறது.

Sunday, March 28, 2010

படுகொலைகளுக்காக ஒரு முதல்வர் விசாரிக்கப்படலாமா?

குஜராத் மாநிலத்தின் முதலமைச்
சர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு புல னாய்வு குழு முன் தோன்றி பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார் என்று செய்தி வெளியாயின. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் தோற்றுவித்தது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக 8 ஆண்டுகள் கழித்து அந்த மாநிலத்தின் முதல்வர் விசாரிக்கப்படுகிறார். நேற்று மதியம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட மோடியின் வயது 59. அவர் விசாரிக் கப்படுவதற்கு காரணமாக இருந்த படு கொலைகள் எண்ணிக்கை 70. மக்கள் மீதான படுகொலைகளுக்காக, அதாவது குற்றயியல் வழக்குகளுக்காக ஒரு முதல மைச்சர் முக்கியமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றால், அதுவும் அவரும், அவரது நிர்வாகமும், அவரது தலைமையிலான மாநில அரசாங்கமும் படுகொலைகளுக்கு உதவி செய்து, ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டில்
விசாரிக்கப்படுகிறார் என்றால், அது நரேந்திர மோடியாக மட்டும் தான் இருக் கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகம தாபாத்தில் இருக்கும் ஒரு பகுதியில் நடந்த படுகொலைகளைப் பற்றிய விசா ரணையே அது.
2002ம் ஆண்டில் குல்பர்கா சமூகத்தில் நடந்த பெரும் கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரே மற்றும் 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த முன் னாள் எம்.பி.யின் மனைவியான ஷகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் பேரில், 8 ஆண்டுகள் இழுத்தடித்து இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் மோடி முதல் முறையாக விசாரிக்கப்படுகிறார். புகாரில் குறிப்பிட்டுள்ள படி, தனது அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிர்கள் என்று மோடி உத்தரவிட்டார் என்பது முக்கியக் குற்றச்சாட்டு. முதல்வர் நாற் காலியில் அமர்ந்திருக்கும் போதே படுகொலைகளுக்காக விசாரிக்கப்படும் முதல் முதல்வர் நரேந்திர மோடி தான் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே மார்ச் 21ம் நாள் விசா ரணைக்கு மறுத்த மோடி, நேற்று விசா ரணையை சந்தித்திருக்கிறார். அவருடன் 62 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில் மோடி அரசின் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் அடக்கம். இது ஒரு அர சாங்கத்திற்கு கிடைத்த அவமரியாதை என்கிறார் மோடி. பா.ஜ.க.விற்கு மானம் இருக்குமானால், மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கி விட்டு விசா ரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ். பிரபல மதச்சார் பற்றவாதி, மதவெறி எதிர்ப்பு ஆங்கில ஏட்டை நடத்தும் டீஸ்டா செட்டல் வாட் இதை ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்.
படுகொலைகளில் மோடியின் நேர டியான பங்கெடுப்புப் பற்றி, ஒரு ஆங்கில ஏடு புலனாய்வு செய்தது. அதை அவர்கள் 2007ம் ஆண்டு அக்டோபர் 25,27 தேதிகளில் வெளியிட்டார்கள். அவர்கள் பதிவு செய்திருந்த நாடாக் களை தேசிய மனிதஉரிமை ஆணை யத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது. குஜராத் உயர்நீதிமன்றமும், இந்தியாவின் உச்சநீதிமன்றமும் அந்த சாட்சியங்களை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள் ளலாம் என்று உத்தரவிட்டது. அதில் உள்ள ஆதாரங்களை பொதுநலன் கருதி, பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட புலனாய்வு அம்பலப் படுத்தலில் வெளியாகியுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பாபு பஜ்ரங்கி பட்டேல் என்பவர், படுகொலையில் நேரடியாக மோடிக்கு முதன்மைப் பாத் திரம் இருந்தது என்று பேசியிருக்கிறார். மோடியின் கட்டளைகளால், காவல்துறை இயந்திரம் செயல்படாமல் ஆக்கப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நீதித் துறை குழப்பி விடப்பட்டது என்பதாக கூறுகிறார். நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள், கர்னக்கொடூரமான நிகழ்வுகளால் நிரப்பட்டிருந்தது. அதில் கவுசர் பானு என்ற கர்ப்பமாகியிருந்த முஸ்லிம் பெண் மணியின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை யின் கரு வெட்டப்பட்டதை பாபு பஜ்ரங்கி ஒப்புதல் வாக்குமூலமாக அந்த இதழின் காணொளி நாடாவில் கூறியிருந்தார். அதை நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் பயன்படுத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் நிற்கிறது.
அடுத்த சாட்சியாக அரவிந்த் பாண் டியா என்ற அரசு வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தைத் தருகிறார். அதில் குஜராத் மாநிலத்தின் முழுமையான குற்றயியல் நீதித்துறை கட்டமைப்பும், மோடியால் நேரடியாக உடைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் கணக்காயரான திமாந்த் பட் என்பவர், மோடியின் நேரடி பங்கு பற்றி இன்னொரு ஆதாரத்தைக் கூறியுள்ளார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு, கோத்ரா விபத்தையொட்டி நடத்தப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டது பற்றி விளக்கியுள்ளார்.
கோத்ராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட் கூறும்போது, வி.எச்.பி.யின் பந்தில் 3 நாள் எடுத்துக் கொண்டு, அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யும் படி மோடி உத்தரவிட்டதை அம்பலப்படுத்துகிறார்.
அதேபோல அகமதாபாத் நகர வி.எச்.பி. தலைவரான ராஜேந்திர வியாஸ், கோத்ராவில் எரிக்கப்பட்ட எஸ்6 பெட்டி இருந்த சபர்மதி விரைவு வண்டிக்கு, கரசேவகர்களுக்கு பொறுப்பெடுத்திருந்தது தான் தான் என்றும், அந்த வண்டியில் ஏறிய கர சேவகர்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் பகிரங்கமாக அந்த காணொளியில் போட்டு உடைக்கிறார்.
நரோடா பாட்டியா பகுதியைச்
சேர்ந்த சுரேஷ் ரிச்சர்டு சாரா என்பவர், படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர். 2002ம் ஆண்டில் பிப்ரவரி 28ம் நாள், படுகொலைகளையும், பாலியல் வன்புணர்ச்சிகளையும் செய்த கொடுமதியாளர்களை மோடி நேரில் பாட்டியாவில் மாலையில் சந்தித்து, மாலை அணிவித்து நல்ல பணியை முடித்தீர்கள் என பாராட்டினார் என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வி.எச்.பி.சேர்ந்த ரமேஷ் தாவே, கோத்ரா நிகழ்வுக்கு முன்பே அதாவது பிப்ரவரி 27க்கு முன்பே வெடிகுண்டுகளும், திரிசூலங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்று அந்த பதிவில் கூறியுள்ளார். வி.எச்.பி. ஜில்லா சஞ்ஜோயக் சபர்கந்தாவான தாவால் பட்டேல், கோத்ரா ரயில் எரிப்புக்கு முன்பே விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றி விளக்கியுள்ளார். குஜராத் வி.எச்.பி. விபக் பிராமுக்கான அணில் பட்டேல், ஆயுத விநியோகம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே நடந்ததாக உறுதி கூறியுள்ளார்.
வி.எச்.பி. யின் தலைமை மெக்சா னாவான திலிப் திரிவேடி, இன்னொரு புறம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த ஊடகத்தின் கேமரா முன்னால் சில உண்மைகளை பகிரங்கமாக உடைத்துள்ளார். அதில் குஜராத் மாநிலம் முழுவதும் நடந்த 1,800 கலவரம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இல்லாமல் செய்தவர் தான் தான் என பெருமையடித்துக் கொண்டார். அதேபோல 1,700 கலவர வழக்குகளை பொய்யான சாட்சிகளை உருவாக்கி தீர்த்து வைத்ததாகவும், அதில் 12 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுத்ததாகவும், ஆதார பூர்வமாக கூறியுள்ளார்.
மேற்கண்ட சில உண்மைகளே குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கொடுமைகளை எடுத்து வைக்க போதுமானவையாக இருக்கின்றன. இப்போது நரேந்திர மோடி என்ற ஒரு முதலமைச்சர், தனது மாநிலத்திலேயே முன்கூட்டி தயாரிக்கப்பட்ட ஒரு ஆயுதந்தாங்கிய மதவெறித் தாக்குதலை நடத்துவதற்காக, செயற்கையாக ஒரு சூழலை ஏற்படுத்தியதும், திட்டமிட்டு அதையே பயன்படுத்தி மாநிலமெங்கும் மதவெறிக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து,3,000 முஸ்லிம்களை வரை பலிவாங்கியதையும், ஆயிரக்கணக்கான கோடி பெருமான சொத்துக்களை அழித்ததையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நரேந்திர மோடி தான் என்பதை நாம் மறக்க முடியாது. இது இந்தியாவின் நாடாளுமன்ற பாதையை கேள்விக் குறியாக்குமா?

Saturday, March 27, 2010

மோதல் சாவுகள் மனிதஉரிமை மீறல்களா?

கடந்த சில காலமாக மனிதஉரிமைகள் பற்றிய விவாதம், உலகெங்கிலும் முக்கிய மான ஒரு விவாதமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அரசாங்கமும் மனிதஉரிமை பிரச்சனைகளுக்காக தனியான கவனம் செலுத்தி வருவதை, உலகத்திற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அரசாங்கங்களின் மீது மனிதஉரிமை மீறல்கள் செய்வதாக எழுகின்ற குற்றச்சாட்டுகளும் அதிகமாக வந்துக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் சில பிரச்சனைகள் மீது ஒரு நாட்டின் அரசாங்கம், இன்னொரு நாட்டின் அரசாங்கத்தின் மீது மனிதஉரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுவது என்பதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதில் அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று, தங்கள் நாட்டில் உள்ள கலகக்காரர்களுக்கு ஆயுத உதவி செய்ததாக இன்னொரு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த அர சாங்கமும் இப்படிப்பட்ட குற்றச்சாட் டுகளில் இருந்து தப்பித்து நிற்பதாகத் தெரியவில்லை. அரசாங்கங்கள் தங்கள் தலைமையில் வைத்திருக்கும் ராணுவமும், துணை ராணுவமும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் இருப்பதும் இல்லை. அதிலும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் காவல்துறை செய்கின்ற மனிதஉரிமை மீறல்கள் அதிகமாக பட்டியல் போடப்படுகின்றன. ஏனென்றால் நிராயுதப் பாணியாக இருக்கின்ற பொதுமக்கள் மத்தியில் அன்றாடம் தங்களது சட்ட ஒழுங்கு பாது காப்புப் பணியை ஆற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் காவல்துறை யினர். அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள மனிதர்கள் பிழைகள் செய்யும்போது, அத்தகைய தவறுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது இயல்பு தான். அதிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி குடிமக்களாக இருக்கும்போது, அத்தகைய குற்றங்கள் புரிபவர்கள் காவல்துறையாக இருந்தாலும், பொதுவாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் இப்படிப் பட்ட மனிதஉரிமை மீறல்கள் பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. தனிமனித உரிமைகள் அங்கு மனித உரிமைகளாக உயர்த்திப்பிடிக்கப் படுகிறது. கீழ்த்திசை நாடுகளில் அதாவது வளரும் நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீது பாயும்போது அதுவும் ஆயுதந்தாங்கிய அரசாங்கத்தின் காவலர்கள் செயல்களால் பாயும் போது, அழுகுரல் மட்டுமே ஏழைகளின் அடைக்கலமாகயிருக்கிறது.
ஊடகங்களிலும், இன்றைக்கு பெரிய அளவுக்கு ஈர்க்கப்படும் செய்திகள் குறிப்பாக கடத்தல், பாலியல் வன்முறை, காணாமல் போதல், சித்ரவதை, நீதிவிசா ரணையற்ற கொலைகள் ஆகியவையாக இருக்கின்றன. அவையெல்லாம் இந்தி யாவில் இருக்கும் காவல்துறை அதி காரிகளாலும், பாதுகாப்புப் படையாலும் செய்யப்படும் போது அவை பரபரப்பு செய்திகளாக மாறுகின்றன. கடந்த ஒரு மாதக் காலத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ், டைம் ஆகிய பிரபல இதழ்களில் இந்தியாவில் நடக்கும் மோதல் சாவுகள் பற்றி தீவிரமான விவாதம் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 பேர் வரை இந்தியாவில் மோதல் சாவுகளில் காவல் துறையால் கொல்லப்படுகிறார்கள் என்பது அந்த அமெரிக்க ஏடுகளில் குறிப்பு. பயங்கரவாதிகள் தொடங்கி சாதாரண சிறு திருடர்கள் வரை இந்தப் பட்டியலில் கொல்லப்படுகிறார்கள் என்று அந்த ஏடுகள் கூறுகின்றன. அத்தகைய மனித உரிமை மீறல்களை இந்திய காவல்துறையும், ராணுவமும் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அதில் குறைந்த பட்சம் சில வழக்குகளாவது போலி மோதல் சாவுகள் அல்லது போலி துப்பாக்கிச் சண்டை என்பதாக அவர்கள் வருணித்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கின்ற குறைந்தபட்ச தடவியல் புலனாய்வை வைத்து, இரண்டு புறமும் சோதித்து ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவரப்பட முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தி யாவின் ஊடகங்கள் காவல்துறை கொடுக் கும் அனைத்து அறிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன என்று அந்த அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தையும், குற்றங்களையும் கண்டு அச்சப்படக் கூடிய நடுத்தர வர்க்க பார்வையாளர்களில் பலர், இது போன்ற போலி மோதல்
சாவுகளை செய்த காவல்துறையின் நியாயப்படுத்தும் அறிக்கைகளைக் கண்டு அகமகிழ்கிறார்கள் என்பதாகவும் அந்த ஏடுகள் அங்கலாய்த்துள்ளன. அதேநேரத்தில் இந்திய திரைத்துறையும் போலி மோதல் சாவுகளை நடத்துகின்ற, காவல்துறை அதிகாரிகளை சிறப்பு மோதல் சாவு அதிகாரிகள் என்று முடிசூட்டுவதாக எழுதப்பட்டிருப்பது, இங்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற போலி மோதல் சாவுகளை ஏற்படுத்தும் காவல்துறை அதிகாரியை, ஓகோ என புகழ்ந்து கதாநாயகனாக சித்தரித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காகவே அந்த கதாநாயகனை அழைத்து ஒரு பெரிய காவல்துறை அதிகாரி, பாராட்டு தெரிவித்தார். இப்படியாக சூழல், மனித உரிமை மீறல்களை செய்வதை உற்சாகப்படுத்துகிறது. காவல்துறை
சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பக்கூடிய நமது மக்கள் மத்தியில், நீதி விசாரணை இல்லாத மரண தண்டனை வழங்க காவல் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை கேட்பதற்கான மனச்சாட்சி எழவில்லை.
தாங்கள் மோதல் சாவுகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையின்றி நடுரோட்டில் சுட்டுக் கொன்றதை நியா யப்படுத்துவதற்காக, அந்த காவல்துறை அதிகாரிகள், தாங்கள் தற்காப்புக்காகத் தான் சுட்டோம் என்று கூறிவருகிறார்கள். ஆனாலும் அத்தகைய மோதல் சாவு கள் ஒரு மாஜிஸ்டிரேட்டால் விசாரிக் கப்பட வேண்டும். மரணம் சம்பவித்த உடனேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட வேண்டும். அந்த போஸ்ட்மார்ட்டம் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும். பின்னால் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் பொருட்டு இத்தனை ஏற்பாடுகளையும் காவல்துறையே செய்ய வேண்டும். மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டல்களைக் கூட, பலநேரம் பின்பற்றாமல் காவல்துறையே அந்த வழக்கின் மீது விசா ரணையை நடத்தி முடித்து வருகிறார்கள். அதற்கு மேலதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைத்து விடுகிறது.
டெல்லி அருகே நொய்டாவில் 2 பேர் இப்படிக் கொல்லப்பட்டதை அமெரிக்க ஏடான டைம் வெளியிட, சத் திஷ்கர் மாநிலம் சிங்கரம் பகுதியில் 19 ஆதிவாசி கிராமத்தவர்கள் கொல்லப் பட்டதை, அமெரிக்க ஏடான டைம்ஸ் வெளியிட்டது. இவற்றை அங் கொன்றும், இங்கொன்றும் நடக்கும் நிகழ்வுகள் என இந்திய அதிகாரிகள் வருணித்தார்கள். 1980களிலும், 1990 களிலும் அன்றாடம் இந்தியாவில் மோதல் சாவுகள் என்பது நிகழ்ந்ததாக அந்த ஏடுகள் வெளிப்படுத்தின. அதன் எண்ணிக்கையை கூறும்போது, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி 21,000 மோதல் சாவுகள் அந்த பத்தாண்டுகளில் நடந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டு காவல்துறையும் இத் தகைய எண்ணிக்கையை உயர்த்துவதில் குறைவானர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டில் அதற்கென்றே காவல்துறை அதிகாரிகள் ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த ஒரே பாணி கொல்லப்பட்டவர் கையில் ஒரு வீச்சரிவாளையும், ஒரு வெடிகுண்டையும் கொடுத்து விடுகிறது. காவல்துறை பக்கத்தில் 2 அதிகாரிகளை காயக்கட்டுடன், மருத்துவமனையில் சேர்த்து விடுகிறது. இந்த நடைமுறை நேற்றும் கூட நடந்துள்ளது.
தேசிய மனிதஉரிமை ஆணையம், காவல் துறை நடத்தும் ஒவ்வொரு மோதல் சாவுகளையும் கிரிமினல் புல னாய்வு துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்ற அதிகாரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டல் கொடுத்துள்ளது. தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ளப்போகிறோமா? அல்லது சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவது என்ற பெயரில் துப்பாக்கி வைத்திருப்பவர் எந்த உயிரையும் பறிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்போகிறோமா? இன் றைக்கு விட்டு விட்டால், நாளை வரலாறு இதை பதிவு செய்து பழி கூறாதா? மனிதஉயிர்களை மதிப்பது மனித உரிமைகளின் அடிப்படை தேவை என்பதை எப்போது உணரப் போகிறோம்?

Friday, March 26, 2010

பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா உண்மையில் விரும்புகிறதா?

இந்தியாவில் நடந்த மும்பை பயங் கரவாத தாக்குதல், உலக அரங்கில் பிரபலமான ஒரு தாக்குதல். ஏனென்றால் ஆங்கிலப் படங்களில் தொடர் காட்சிகளாக வருவதுபோல, பயங்கரவாதிகள் தாஜ் ஓட்டலில் மற்றும் மும்பையின் ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல்களை, உலகமே காட்சி ஊடகங்களில் கண்டுக் கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் யார் என்பது பற்றி இன்று வரை குழப்பமான செய்திகளைத் தான் இந்திய மக்கள் கேட்டு வருகிறார்கள். நேபாளத்தில் பிடிபட்டு மும்பையில் கிடைத்தது போல காட்டப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது. துப்பாக்கியுடன் கசாப் தாஜ் ஓட்டலுக்குள்ளே இருந்ததை ஊடகங்களில் பார்த்தவர்களும் உண்டு. பிடிபட்ட பின் கசாப், அமெரிக்க உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.யால், மும்பையில்
விசாரணைக்குள்ளாக்கப்படுகிறார். நீதி மன்றத்தில் பல விஷயங்களை கசாப் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும்
கசாப் மறுக்கிறார். கசாப்பிற்காக வாதம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரச்சனைக் குள்ளாக்கப்படுகிறார். கடைசியாக அமெரிக்காவில் மும்பைத் தாக்குதலுக்காக டேவிட் ஹெட்லியும், ராணாவும் பிடிபடுகிறார்கள். ஹெட்லி இந்தியாவிற்கு பலமுறை வந்துப் போனவர் என்று அரசுகள் அறிவித்தன. தன்னை விசாரிக்க வந்த அதிகாரிகளில் ஹெட்லியும் இருந்தார் என்று கசாப் கூறினார். இப்போது ஹெட்லியை அமெரிக்கா சென்று விசா ரிக்க, இந்திய அதிகாரிகளுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்ற விவாதம் நடக்கிறது.
அதிலும் அமெரிக்க நீதித்துறை தலைவர் எரிக் ஹோல்டர், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியானது. அதில் ஹோல்டர் அமெரிக்காவிற்கு சென்று, இந்திய புல னாய்வுத் துறை அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கலாம் என்று கூறியதாக சிதம்பரம் சொன்னார். அதையொட்டி புதிதாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து புலனாய்வுத் துறைகளையும் ஒருங்கிணைத்த அமைப்பான, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம், அமெரிக்கா செல்வதற்கும் ஹெட்லியை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை தயார் செய்யும்படி சிதம்பரம் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் அமெரிக்க தூதர் திமோதி ரோய்மர், இந்திய விசாரணைக்கு அனுமதிக்க இன்னமும் முடிவுசெய் யவில்லை என்று கூறினார். ஏன் இந்த முரண்பாடு என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உள்துறை அமைச் சர் மீது பாய்ந்தார்கள். லண்டனுக்கு பறந்து சென்றிருந்த அமைச்சர் சிதம்பரம் அங்கிருந்தே அதற்கு பதில் கூறினார். அமெரிக்கர்களின் அறிவிப்புகளில் முரண்பாடுகள் இல்லை என்றார். எதற்காக அமெரிக்கர்கள் அடித்த பல்டியை, சிதம்பரம் சமாளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் கேட்டன. அதேசமயம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அமெரிக்கா ஹெட்லி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சகமும் அனுமதிக்காக ஒரு கடிதம் அனுப்புகிறோம் என்று கூறி யுள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி வலுவாக எழுந்துள்ளது. இந்திய காவல்துறையின் பிடியில் இருக்கும் அஜ்மல் கசாபை, இந்திய நாட்டில் நடந்த ஒரு தாக்குதல் பற்றி விசாரணைச் செய்வதற்கு, சம்மந்தமேயில்லாத அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.க்கு இந்திய அரசு அனுமதிக் கொடுத்தது. எதற்காக அப்படிப்பட்ட அனுமதியை கொடுக்க வேண்டும்? ஆனால் அதேசமயம் இந்திய நாட்டிற்குள் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர் என்று அறியப்பட்ட டேவிட் ஹெட்லி, அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருக்கும் போது, இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அங்கே
சென்று விசாரிப்பதற்கு இத்தனைத் தூரம் தயக்கங்களையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவதுள எதனால்? மேற்கண்ட கேள்விகளைக் கேட்காமல் இருந்தோம் என்றால், பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற நோக்கத்திலேயே பிழை இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலும், பெண்டகன் ராணுவத் தளத்திலும் பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அமெரிக்கா அரசு உலக முழுவதிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என அறைகூவி அழைத்தது. அந்த அறைகூவலை சிரமேற்ற இந்திய அரசு, தன்னையும் அத்தகைய உலகு தழுவிய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. இப்போது ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டப்படும் பயங்கரவாதிகளை விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் மாறுபட்ட நிலைகளை எடுப்பதற்கான காரணம் என்ன?
அமெரிக்கா உண்மையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளதா? அல்லது அதைப் பயன்படுத்தி தனது ஆயுத வியாபாரத்தை, உலகெங்கிலும் நடத்துவதற்கு ஏற்ற சூழலை, நிரந்த ரமாக உருவாக்க எண்ணுகிறதா? பயங்கர வாதிகள் தொடர்ந்து உலகில் இருந்தால் தான், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் நடந்து வந்தால் தான், அமெரிக்காவின் சாவு வியாபாரிகள் என அழைக்கப்படும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து வியாபாரமாகும் என்று அமெரிக்கா கருதுகிறதா? அதனாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடிப்படையான விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் கூட, தெரிந்துக் கொள்ள கூடாது என்று கருதுகிறதா? இத்தனைக் கேள்விகள் எழுகின்ற நேரத்தில் 2005ம் ஆண்டு மத்ரித் பிரகடனம் என்பது நினைவுக்கு வருகிறது.
2005ம் ஆண்டு மார்ச் 8 முதல் 11 வரை மத்ரித் நகரில் நடத்தப்பட்ட ஜன நாயகம், பயங்கரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அனைத்து நாட்டு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஐ.நா.சபையின் அன்றைய செயலாளர் நாயகம் கோபி அன்னன் கலந்துக் கொண்டார். உயர்மட்ட கூட்டத்தில் மிரட்டல், சவால்கள், மாற்றம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. உயர்மட்ட குழுவின் ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் என்பதை மத்ரித் நிகழ்ச்சி நிரல் என்பதாக அறிவித்தார்கள். அதில் எந்தவொரு மன்னிப்போ, நியாயப்படுத்தலோ காட்டாமல், முழுமையான தீமை என்பதாக பயங்கரவாதம் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போது, எதிர் பயங்கரவாதம் என்பதே அதற்கான வழியை உருவாக்கி விடக் கூடாது என்று அரசுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து நாட்டு சமூகத்தின் பொறுப்பு என கூறப்பட்டது. மேற்கண்ட எல்லா அறிவிப்புகளுமே, இன்றைய அமெரிக்காவின் அணுகு முறையில் மீறப்பட்டுள்ளது. ஹெட்லி அமெரிக்க அரசிடம் ஒப்புக் கொண் டதற்காக, அவனது தண்டனை குறைக் கப்படும் என்கிறது அமெரிக்கா. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக வடஅமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் கருதப்படுகிறதே தவிர, 1956க்குப் பின்னால் தொடர் தாக்குதல் களைச் சந்திக்கும் இந்தியா அவ்வாறு பட்டியலிடப்படவில்லை.
மத்ரித் பிரகடனத்தில் கூறப்பட்ட, பயங்கரவாதம் என்பது அனைத்து மானுடத்திற்கும் எதிரான ஒரு குற்றம் என்ற கருத்துக் கோப்பை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா செயல்படுவதாக தெரியவில்லை. அந்த பிரகடனத்தை அறி வித்த ஐ.நா.வின் பொதுச் செயலாளர், அரசால் ஏற்படுத்தப்படும் பயங்கரவாதம், பாதிக்கப்படும் அரசுக்கு எதிரான ஒரு மறைமுக ஆக்கிரமிப்பு என்று கூறினார். இங்கே மும்பைத் தாக்குதலை ஒரு மறைமுக ஆக்கிரமிப்பாக நடத்திய அரசப் பயங்கரவாதம், பாகிஸ்தானுடையதா அல்லது அமெரிக்காவினுடையதா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. எப்படியிருந்தாலும் இன்று அமெரிக்கா அரசை ஒவ்வொரு விஷயத்திலும் சார்ந் திருக்கும் இந்திய அரசு, இந்த உண் மையை விவாதிக்க தயாராயிருக்குமா என் பதே நமது கேள்வி.

Thursday, March 25, 2010

கனுசன்யால் மரணம் எழுப்பும் விவாதம்

நேற்று 82 வயதைக் கடந்த கனுசன்யால் இறுதி அஞ்சலி மேற்குவங் கத்தில் நடந்தது. அதில் ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டார்கள். அவர்களில் கூர்காலாந்து தனி மாநிலத்திற்காக போராடக் கூடியவர்களும் இருந்தார்கள். விவசாயப் பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதபடியே, கனுசன்யாலை எடுத்துச் சென்ற வாகனத்துடன் ஓடிவந்தார்கள். இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆழமான பதிவை ஏற்படுத்தியுள்ள அந்த முதியவரின் வரலாறு பல படிப்பினைகளை பதியவைக்கிறது.
43 ஆண்டுகளுக்கு முன்னால் 1967ம் ஆண்டு மார்ச் 25ம் நாள், மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஆயுதக்கல வரத்தில் இறங்கிய விவசாயிகளுக் கும், காவல்துறைக்கும் மோதல் நடந்தது. அந்த விவசாயிகளின் ஆயுதப் பேரெழுச்சியைத் தயார் செய்து, அதற்காக 8 ஆவணங்களை வழிகாட்டும் கருத்தி யலாக வெளியிட்டு தலைமை தாங்கியவர் சா ருமஜும்தார். அவருடன் அந்த வட்டாரத்தில் விவசாயிகள் மத்தியில் முன்னோ டியாக செயல்பட்ட களப்பணியாளர்கள் 2பேர். அந்த 2 தலைவர் களில் ஒருவர் ஜங்கல் சந்தல். இன்னொருவர் கனுசன்யால். மேற்கண்ட ஆயுத எழுச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணியுடன், வங்காள காங்கிரஸ் நடத்திய ஆட்சிக் காலத்தில் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தார். நக்சல்பாரி விவசாய எழுச்சியை, சாரு மஜும்தார் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளே இருந்து கொண்டே திட்டமிட்டார். டார்ஜிலிங் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சி, சாருமஜும்தாரின் செல்வாக்கின் கீழ் அன்று இருந்தது. அதனால் புரட்சிகரப் பாதையை தேர்வு செய்த, புரட்சியாளர்கள் சி.பி.எம்.கட்சிக்குள் இருந்து கொண்டே தங்களது தலைமையில் கீழ் உள்ள விவசாய சங்கத்தினரையும், மாணவர் சங்கத்தினரையும் ஈடுபடுத்தி, அத்தகைய ஆயுத எழுச்சியை நடைமுறைப்படுத்த முடிந்தது. ஜோதிபாசுவின் ஏற்பாட்டில், மத்திய அரசின் ஒத்துழைப்பில் கிழக்கு பிராந்திய துப்பாக்கிப்படை என்ற துணை ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கி, புரட்சியாளர்களின் கரங்களுக்குள் சென் றுவிட்ட நக்சல்பாரி மற்றும் அண்டைக் கிராமங்களை துப்பாக்கி முனையில் சி.பி.எம். கூட்டணி மீட்டெடுத்தது. அதையொட்டி மூன்று தலைவர் களான சாருமஜும்தார், ஜங்கல் சந்தல், கனுசன் யால் ஆகியோர் பல தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்கள். அதன்பிறகு ஜங்கல் சந்தல் விடுதலையான பிற்பாடு, தனது களப்பணிகளில் பின்வாங்கினார். 1981ல் ஜங்கல் சந்தல் மறைந்தார். ஆனால் விடுதலைக்குப் பிறகு, சாருமஜும்தார் தலைமையில் கனு சன்யால், புரட்சிகர இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.
1968ம் ஆண்டு சாரு மஜும்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழுவில், கனு சன்யாலும் இணைந்துச் செயல்பட்டார். கருத்தியல் வழிகாட்டலுக்கும், புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைமைத்துவத்திற்கும்
சாருமஜும்தார் தலைமைக் கொடுத்ததால், அவரது தலைமை டார்ஜிலிங் மாவட்டத்திலிருந்து, மேற்கு வங்கத்திற்கும், மேற்கு வங்கத்திலிருந்து இந்தியா முழுமைக்குமாக விரிவடைந்து வளர்ந்தது. அதேசமயம் கனுசன்யால் சிலிகுரி பகுதியில் விவசா யிகள் மத்தியில் ஆழமான பிடிப்புக் கொண்ட முன்னோடித் தலைவராக எழுந்து வந்ததால், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் கூர்க்கா இன மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவராக தொடர்ந்து விளங்கினார். 1968ம் ஆண்டு தொடங்கிய அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு, இந்தியா முழுமைக்கும் ஒரு போராட்ட வேலைத் திட்டத்தை முன்வைத்தது. அதில் அடுத்த அறுவடை நமக்கு என்ற முழக்கம் உயர்த் திப் பிடிக்கப்பட்டது. இத்தகைய விவசாயிகள் சார்ந்த, நிலமற்ற விவசாயிகளின் நிலத் தாகத்தை நிறைவு செய்வதற் கான போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக, பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலங்களில் பசுமையை உருவாக்குவதற்கு, உழைப்பையும், வியர்வையையும் சிந்திய நிலமற்ற விவசாயிகளின் போர் முழக்கமாக அது மாறியது. இவ்வாறு விவசாயிகளின் அடுத்தக் கட்ட போராட்டத்தை உணர்ந்து ஈடுபடுத்துவதில் கனுசன்யாலுக்கும் நல்லதொரு பங்கு இருந்தது. பீகார் மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் அடுத்த அறுவடை நமக்கே என்ற முழக்கத்துடன் திரண்ட நிலமற்ற, ஏழை விவசா யிகள் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன் அணி திரண்டனர். அப்படி அணிதிரண்டவர்கள் தங்களுக்கு தடையாக இருப்பவர்களாக அந்த வட்டாரத்தின் ஆதிக்கத்தை வைத்திருக்கும் பண்ணை யார்களைக் கருதினார்கள். அதனால் முதலில் அந்த வட்டாரங்களில் திரண்ட விவசாயப் போராளிகள், ஆதிக்கம் செலுத்தும் பண்ணையார்களை அழித்து விட்டு, பிறகு அவர்களது விளை நிலங்களுக்குள் இறங்கி அறுவடையை கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட அறுவடையை நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் பிரித்துக் கொடுத்தனர். இவ்வாறு கிராமப்புறங்களில், புரட்சியாளர்கள் தலைமை யிலான கிராமப்புற மக்கள் அதிகாரம் என்பதைப் படைப்பதற் கான, போ ராட்டம் தொடங்கியது.
மேற்கண்ட புரட்சிகர போராட்டங்கள் மாசேதுங்கின் தத்துவ வழிகாட்டலில் எடுத்துச் செல்லப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் அதற்கு முழுமையாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீ கரிக்காமல், மேற்கண்ட புரட்சியாளர்களை அங்கீகரித்தது. அதனால் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியோர் திரிவுவாதிகள் என முத்திரைக் குத்தப் பட்டனர். மார்க்சியத்தை திரித்து தேர்தல் பாதைக்கு சென்று விட்டவர்கள் என்று அவர்களை குற்றம் சாட்டினார்கள்.
1969ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் மேற் கூறிய புரட்சியாளர்கள், புதியதொரு கம் யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி னார்கள். லெனினது பிறந்த நாளான அந்த நாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அதற்கு பெயரிட்டார்கள். சாருமஜும்தார் அந்த புதிய கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கனுசன்யால் அந்த கட்சியில் இறங்கி களப் பணியில் ஈடுபட்டார். புதிய கட்சியின் துவக்கத்தை உலகிற்கு அறிவிப்பதற் காக, 1969ம் ஆண்டு மே தினத்தன்று, கொல்கத்தா நகரில் ஒரு மாபெரும் சிவப்புப் பேரணியை, நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்கள் நடத்தினார்கள். புதிய கட்சி தன்னை தலைமறைவு கட்சியாக அறிவித்துக் கொள்ள திட்டமிட்டிருந் ததால், கட்சியின் பொதுச் செயலாளர் சாரு மஜும்தார் தலைமறை வானார். அத்தகைய சூழலில் கட்சியை பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தில் கல்கத் தாவில் அறிவிப்பதற்கு பொருத்தமானவராக கனுசன்யால் தேர்வு செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. (எம்எல்) கல்கத்தாவில் அந்த மாபெரும் பேரணியில், கனுசன்யாலால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரில்லாப் போராட்டத்தை, அதிலும் குறிப்பாக வர்க்க எதிரி களை அழித்தொழிக்கும் போராட்டத்தை தொடக்கப் புள்ளியாக அந்த கட்சி ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியது. காலப்போக்கில் கட்சிக்குள் வளர்ந்த பிளவுகளில், சாருமஜும்தாரின் கொரில்லாப் போராட் டப் பாதையை ஏற்றுக் கொள்ளாத கனுசன்யால் தனியாக வெளியே வந்து தனிக்கட்சியாக செயல் படத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பல்வேறு நக்சல்பாரி குழுக்களை கனுசன்யால் ஒன்றுதிரட்டி செயல்படுத்த முயன்றார். அதில் 1972ம் ஆண்டு சாருமஜும்தார் மேற்குவங்க சிறையில், அடக்குமுறையின் கீழ் மரணமடைந்த பிற்பாடு, இயக்கத்தில் ஏற்பட்ட தொய்வினால் பல குழுக்கள் வெளியேறினர். அதுபோல தான் 1977க்குப் பின் வெளியேறிய கனு
சன்யால் குழுவினரும் கருதப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட் ணசியின் இடது கூட்டணியுடன் 90களில், சன்யால் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டார். அதி லும் மனம் வெதும்பி வெளியேறினார். 2003ல் தானே தலைமை தாங்கிய ஒரு எம்.எல். கட்சியை அறிவித்துக் கொண்டார்.
இப்போது கனு
சன்யாலின் மறைவுக்கு சி.பி.ஐ.யும், சி.பி.எம்.மும் அஞ்சலி செலுத்தியு ணள்ளன. அவரை ஒரு மகத்தான கம்யூனிஸ்ட் தலை வராக அறிவித் துள்ளனர். அவரது மரணம் உடல்நிலை மோசமடைந் ததால், தானே உருவாக்கிக் கொண்ட ஒன்று என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் கூர்காலாந்தின் தனி மாநில கோரிக்கைப் போ ராட்டத்தில், கனுசன்யால் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இன்றைக்கு இந்தியாவில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வரும் மாவோயிஸ்ட் இயக்கம் பல வலுவான முன்னேற்றத்தை காட்டியிருப்பது கூட, கனுசன்யாலால் செரிக்க முடியாத ஒரு செய்தியாக இருக்கக்கூடும். தனது மரணம் வரை அந்த மனிதன் மக்களுக்காகச் சிந்தித்தார். தான் உயிர் வாழும் வரை சன்னியால் போராட்டப் பாதைகளைத் தேடினார். அவரது வாழ்க்கை வருங்கால இளைஞர்களுக்கு, விடுதலைக்கான பாதையைத் தேடவும், அதற்காக தன்னுயிரை அற்பணிக்கவும் தயாராயிருப்பதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அறிவுறுத்துகிறது.

Wednesday, March 24, 2010

பகத்சிங் நினைவுகளும், சமரசமற்ற போராட்டங்களின் தேவைகளும்

நேற்று மார்ச் 23ம் நாள். மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். பகத் சிங்குடன், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். அவர்கள் மீது ஆங்கிலேய அர
சாங்கம் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டியது. ஆங்கிலேயர்களுடைய அடிமை அவையாக இருந்த இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது வெடிகுண்டு வீசினார் என்பது பகத்சிங் மீதான ஒரு குற்றச்சாட்டு. ஆயுதந்தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டார் என்பதும், இந்திய விடுதலைக்காக அப்படிப்பட்ட ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார் என்பதும் அவர் மீது ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட கோபம். அதே நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக என்ற ஒரு முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு, மகாத்மா காந்தியின் வழிகாட்டல் இருந்து வந்தது. மகாத்மா என்று அழைக்கப்பட்ட, பிறகு தேசத் தந்தை என்று வருணிக்கப்பட்ட கரம்சந்த் காந்தி, அகிம்சை வழியில் அத்தகைய சுதந் திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவித்துச் செயல்பட்டவர். அந்த செயல்பாடுகளில் இருந்து பார்க்கும் போது, ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான செயல்பாடுகளில் இருந்த பகத்சிங்கும் தோழர்களும் பயங்கரவாதிகள் என்று தான் சித்தரிக்கப்படுவார்கள் என்பது புரிய முடிகிறது. அந்த நேரத்தில் காங் கிரஸ் கட்சியின் பெரியதொரு மாநாடு நடப்பதாகயிருந்தது. காந்திஇர்வின் ஒப்பந்தம் போடப்படுவதற்கான சூழல் கணிந்திருந்தது.
நடக்கயிருக்கும் மாநாட்டில் ஒட்டு மொத்த காங்கிரஸ் பிரதிநிதிகள், பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டால், அதன்பிறகு தனது அகிம்சை வழி தோற் கடிக்கப்பட்டு விடுமே என்று காந்தியார் கருதியிருக்கலாம். அதனால் பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக, இர்வின் பிரபுவிடம் காந்தி பேச வேண் டும் என்ற மற்றத் தலைவர்களது கோரிக்கையை மகாத்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறைப் பாதை என்ற தவறான பாதையில் செல் பவர்களை ஆதரிக்க முடியாது என்ற கருத்தை காந்தியார் கொண்டிருந்தார்.
அப்போது காந்தியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த ஜவ ஹர்லால் நேரு, பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக இர்வின் பிரபுவிடம் பேசக் கோரி வேண்டினார். அமைதியாக ராட்டிணத்தை காந்தியார் சுற்றிக் கொண்டிருந்தாராம். உடனடியாக கோபம் மேலோங்க ஜவஹர்லால் நேரு, நமது நாட்டின் மலர்கள் எரிந்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புத்தரைப் போல ராட்டிணத்தை மவுனமாக சுற்றிக் கொண்டிருக்கலாமா என்று கேட்டாராம். இது ஆங்கில ஏடுகளில் அன்றைய காலத்தில் அம்பலப்படுத்தப்பட்ட செய்தி. அதனால் பகத்சிங்கின் நினைவு நாள், 2 செய்திகளை நமக்கு சொல்கிறது. ஒன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய நாட்டை காலனியாக அடிமைப்படுத்தி வைத்திருக்கும் காலத்தில், புரட்சியா ளர்களை கொடுமையான முறையில் தூக்கிலிட்டார்கள் என்பது ஆங்கிலே யனின் கொடூரத்தைப் பற்றி பதிவு செய்யப்பட்ட செய்தி. இரண்டாவதாக வாய்ப்பிருந்தும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இல்லாமல், ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான கருத்தை சுதந்திரப் போராட் டத்தின் குரலெழுப்பியவர்களும் செயல்படுத்தினார்கள் என்ற செய்தி. இப்படியாக எதிரிகளையும், துரோகி களையும் அடையாளம் காட்டிய ஒரு நிகழ்வாக பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சி நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இப்படித் தான் ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியின் குணமும், துரோகம் இழைத்தவரது பண்பும் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த விடுதலைப் போரில், ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அவ்வாறு துப்பாக்கித் தூக்கிய வாஞ்சிநாதன், தன்னைத் தானே சுட்டுக் கொண்டும் இறந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய
சுதந்திரப் போரில் எண்ணற்ற வீரர்கள் இதுபோல, தங்கள் உயிரை துச்சம் என மதித்து தியாகம் செய்துள்ளனர்.
வெள்ளையர்கள் நடத்திய கிழக் கிந்திய கம்பெனியின் கப்பல் போக்கு வரத்தை எதிர்த்து, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பலத்த அடி கொடுப்பதற்காக, தூத்துக்குடியில் சொந் தமாக கப்பல் ஒன்றை வாங்கி அதை கடலிலே அனுப்பி போட்டிப் போட்டு போராடியவர் வ.உ.சிதம்பரனார். அவரை அதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று அழைத்தார்கள். அதற்காகவே வெள்ளை ஏகாதிபத்தியம், வ.உ.சிக்கு சிறை வாழ்க்கை என்பதை உருவாக்கியது. சிறையில் அடைக்கப்பட்ட கரம்சந்த் காந்தியோ, ஜவஹர்லால் நேருவோ இன்னபிற தலைவர்களோ, புத்தகம் படித்தார்கள்; புதிய புத்தகங்களை எழுதினார்கள். ஆனால் வ.உ.சி மட்டும் ஆங்கிலேயர்களால் சிறைக்குள்ளேயே, செக்கிழுக்க வைக்கப்பட்டார். அவர் தமிழர் என்பதால், சமரசத்திற்கு சரியவில்லை என்பதால், சமரிலே சரியாக நின்றார் என்பதால் அப்படிப்பட்ட தண்டனையை ஆங்கிலேயர்கள் அளித்தார்கள். ஆதிக்கவாதி எப்போதுமே போர்க் களத்தில் நிற்பவர்களில் யார், யார் எப்படிப்பட்ட மனோபலம் உள்ள வர்கள் என்று அறிந்து செயல்படும் ஆற்றல் உள்ளவன். அதனால் தான் வடஇந்திய தலைவர்களுக்கு ஒருநீதி; தமிழின தலைவர்களுக்கு மறுநீதி என அமுலாக்கப்பட்டுள்ளது போலும்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம், வீர பாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போராடியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. அந்தப் போராட்டத்தில் கடைசி யாக, வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஆங்கிலேயர்களால் கயத்தாறில் தூக்கி லிடப்படுகிறார் என்பது வரலாறு. புரட்சி கரப் பாதையை ஏந்திச் சென்ற மாவீரன் பகத்சிங் எப்படி தூக்கிலிடப்பட்டாரோ, அதேபோல ஆயுதந்தாங்கிய தன்னுடைய படைவரிசை மூலம், வெள்ளையர்களின் படையை எதிர்த்து போர்க்களம் கண்ட கட்டபொம்மனும் தூக்கிலிடப்பட்டார். முன்னவர் வடஇந்தியரானாலும் புரட்சிகரப் பாதையை கையாண்டதால், அவருக்கு பயங்கரவாதி என்ற முத்திரை விழுந்தது; அதற்காகவே அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனாலும் இன்றைய இந்திய அரசு பகத்சிங்கும் மற்றும் தோழர்களும் நினைவை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் படைவரிசையில் தளபதியாகவும், ஒற்றர்படை தலைவராகவும் பணி யாற்றியவர் மாவீரன் சுந்தரலிங்கம். போர்க்களத்தில் நெருக்கடியான கட்டத்தில், ஆங்கிலேயனின் ஆயுதத் தளவாட குவிப்பை, அழிப்பதற்காக தன் உடலில் மட்டுமின்றி, தன் காதலியின் உடலிலும் சேர்த்து வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு, எதிரியின் தளவாட சேமிப்பிற்குள் குதித்து, அனைத்தையும் வெடிவைத்து தகர்த்து தன்னுயிரை, தன் காதலியுடன் இணைந்தே கொடுத்தவர் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்து சென்றிருக்கிறார். உலக புரட்சிகர வரலாற்றில், அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, தன்னைத் தானே மனித வெடி குண்டாக மாற்றிக் கொண்டு தியாகம் செய்து எதிரிக்கு சேதங்களை விளை வித்த முதல் வீரன் அந்த சுந்தரலிங்கம். அவரையும் தமிழ்நாட்டு மண் தான் வரலாற்றில் சந்தித்திருக்கிறது.
இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழ் இளைஞர்கள் மட்டுமின்றி, தமிழ் யுவதிகளும் தங் களை மனிதவெடிகுண்டுகளாக மாற்றிக் கொண்டு, கரும்புலிகளாக புறப் பட்டிருப்பதால் தான், ஈழப்போரும், வன்னிப்போரும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே தமிழீழம் காண ஒரு அரசியல் போராட்டம் உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதான் பகத்சிங் நினைவுநாள் நமக்குக் காட்டும் சமரசமற்ற விடுதலைப் பாதை.

Tuesday, March 23, 2010

கொய்ராலா மறைவால் யாருக்கு இழப்பு?

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மரணம் அடைந்தார். இரண்டு நாட்களாக அந்த இழப்பு எப்படிப்பட்ட சமாதான பேச்சு வார்த்தைகளை பலவீனப்படுத்தும் என்பது பற்றி ஊடகங்களும், அரசியல் அவதானிகளும் அலசிவருகிறார்கள். நேபாள காங்கிரஸ் தலைவர் ஜி.பி.கொய் ராலா தனது மகளது இல்லத்தில் மார்ச் 20ம் நாள் சனிக்கிழமை நண்பகல் தாண்டி மரணமடைந்தார். அவர் தனது கடைசி மூச்சுவரை நேபாள அரசியலில் தொடர்பு வைத்திருந்தார். அவரை கவனித்து வந்த மருத்துவர் அர்ஜுன் கார்க்கியிடம், நாட்டு நலனுக்காக ஒற்றுமை யுடன் செயல்படுங்கள் என்றும், எல்லா பிரிவினரையும் இணைத்துக் கொண்டு முன்செல்லுங்கள் என்றும் கூறினாராம். அந்த செய்தி நேபாள நாடு முழுவதும் பரவி வருகிறது. நேபாள அரசியலை ஒரு காலத்தில் இவரது அண்ணனான பீ.பி.கொய்ராலா
செல்வாக்கு செலுத்தினார். அவரது நிழலில் ஜி.பி.கொய்ராலா வளர்ந்தார். அண்ணன் மற்றவர்களை வளர விடாமல், அரசியலை ஆக்கிரமித்தார் என்று பெயர் பெற்றார். தம்பியோ 1990ல் இயக்கத்திற்குப் பிறகு தானாகவே மேலே உயர்ந்த ஒரு அரசியல்வாதி. நடைமுறையில் அனைவரையும் அணைத்துச் செல்ல முற்பட்டவர். தொடர்ந்து வந்த நோபாள ஆட்சிகளில், மாவோயிஸ்ட் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2004ம் ஆண்டு ஜி.பி.கொய்ராலா, மாவோயிஸ்ட் புரட்சியை அடக்க முடியாமல் ராஜினாமா செய்தார். ஜி.பி.கொய்ராலாவின் கனவு என்பது நேபாள நாட்டில் சமாதானத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவது என்பதாக அறியப்பட்டது. நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு மத்தியில் நேபாள காங்கிரஸ் ஒரு ஒன்றுப்பட்ட அடை யாளத்தை காட்டுமாஎன்ற கேள்வி தான் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. கொய்ராலாவின் மரணம் நேபாள காங் கிரசுக்கு, பிரபலமான தலைமை ஒன்று இல்லாமல் செய்து விட்டது.
நேபாள காங்கிரசுக்கு சரியான தலைமை இல்லாமல் இருப்பது, நேபாளத்தை விட இந்திய அரசை அதிகமான வருத்தத்தில் தள்ளியிருக்கிறது. நேபாள காங்கிர சுக்கு இளம் தலைவர்களை வளர்த்து விடுவ தற்கு ஜி.பி.கொய்ராலாவும் தடையாக இருந்திருக்கிறார் என்ற செய்தி இப்போது தெரிகிறது. அதிகமான அளவில் இளைய தலைமுறை தலைவர்கள் அந்த கட்சிக்கு இருந்தா லும் கூட, அவர்களால் கட்சியின் அரசியலை மற்றும் நேபாள நாட்டை வழிகாட்டிச் செல்ல முடியுமா என்ற கேள் வியை அனைவரும் கேட்கிறார்கள்.
தலைவர்களில், அனைவரையும் அணைத்து போவதற்கு முதிர்ச்சியுள்ள ஒருவர் என்பதாகவும் கூட நம்பப்பட் டது. அவரது மறைவினால் மாவோயிஸ்ட் களுக்கும், நேபாள காங்கிரசுக்கும் இடை யேயுள்ள சமாதானப் பேச்சுவார்த்தை பலவீனப்படும் என்பதாக அரசியல் ஆரூடம் கூறுகிறார்கள். கொய்ராலாவின் மறைவினால் நேபாள காங்கிரசுக்கு இருக்கின்ற அறுதியிடலை விட, ஒன்று பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஜே.என்.கனல் உடன், மாவோயிஸ்ட்கள் இணைந்து ஒரு புதிய அறுதியிடலை ஏற்படுத்தி விடுவார் கள் என்று கூறுவோரும் உண்டு. அதே சமயம் மாவோயிஸ்ட்களுடன் சமரசமாக செல்வதற்கு கொய்ராலாவிற்கு இருந்த முதிர்ச்சி வேறு நேபாள காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் சமாதான வழியில் அதிகாரத்தில் பங்கு கொள் வதற்கு மாவோயிஸ்ட்களுக்கு வாய்ப் புக்கள் குறையும் என்றும் சிலர் மதிப்பிடு கிறார்கள்.
அதேசமயம் இந்திய அரசு தனது செல்வாக்கை நேபாள அரசியலில் என்றைக்குமே குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. நேபாளத்தில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, நேபாளம் ஒரு இந்து நாடு என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மன்னர் ஆட்சியுடன் அப்போது இந்திய அரசு நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயக பாதையை நேபாளத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது இந்திய அரசு மன்னர் ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்தது. முடியாட்சியை மாற்றி, குடியாட்சியைக் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சியில், புதிய அரசியல் நிர்ணய சபை ஒன்றை அதற்காக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. அத்தகைய கோரிக்கையை முன்வைத்து சமரசமற்றுப் போராடக் கூடிய ஒரே அமைப்பாக நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே இருந்தது. அதனால் பொது மக்களுடைய ஆதரவும் முடியாட்சிக்கு எதிராக, மாவோயிஸ்ட்களுக்கே போய்ச் சேர்ந் தது. மாவோயிஸ்ட்கள் தங்களுடைய பாதையாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்திருந்தார்கள். அதற்காக கொரிலாப் படைகளைக் கட்டி போரா டினார்கள். கிராமப்புறங்களை விடுதலை செய்து தங்கள் தலைமையில் மக்கள் அதிகாரங்களை அங்கே நிறுவினார்கள். தங்களது கொரிலாப் படைக் குழுக்களை எல்லாம் இணைத்து, மக்கள் விடுதலைப் படை ஒன்றை உருவாக்கினார்கள். அதன் பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், தேர்தல் மூலம் மாவோயிஸ்ட்கள் பெரு வாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். இது இந்திய அரசை கடுமையாக யோசிக்க வைத்தது. ஒருபுறத்தில் மாவோயிஸ்ட்களுடன் பேசவும் செய்தது. இன்னொரு புறம் சி.பி.எம். தலைவர் சீத்தாராம் யெச்சுரியை அனுப்பி, மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இந்திய அரசு துணையாக இருந்தது. மீண்டும் முழு நேபாளமும் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கிற்குள் சென்றுவிடக் கூடாது என்பதில், இந்திய அரசு கவனமாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைக் காணும்போது, இந்தப் போட்டி விளங்கிக் கொள்ள முடியும். 2006ம் ஆண்டு ஜுன் 16ம் நாள் ஒரு ஏழு கட்சி கூட்டணியை இணைத்துக் கொண்டு, நேபாளம் மாவோயிஸ்ட் கட்சி 12 கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது. அதையொட்டி மூன்று மாதங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு ஜனவரி 14ல் 330 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 83 மாவோயிஸ்ட்கள் வெற்றி பெற்று உள்ளே நுழைந்து, ஒரு இடைக்கால சட் டத்தை அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்று, ஆட்சியில் அமர்ந்தார்கள். 2007ம் ஆண்டு மார்ச் 21ல் மாதேசி மக்க ளின் உரிமை மன்றத்திற்கும், மாதேசி ராஷ்டிரிய விடுதலை முன்னணிக்கும் மோதல் நடந்தது. இதில் முதல் அமைப்பு இந்திய அரசின் ஆதரவு என்றும், இரண்டாவது மாவோயிஸ்ட் ஆதரவு என்றும் கூறப்பட்டது. மாதேசி மக்கள் இந்தியா விலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பது அதன் அடிப்படைப் பிரச் சனை. 2007ம் ஆண்டு ஏப்ரல் 1ல் புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்தது. அதில் 5 மாவோயிஸ்ட் அமைச்சர் கள் மற்றும் ஒரு துணை அமைச்சர் இருந் தார்கள். 2007ம் செப்டம்பர் 18ல் தங்களது கோரிக்கையான விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற தேர்தல் முறை யையும், அரசியல் சாசன தேர்தலுக்கு முன்பே, குடியரசாக அறிவிக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்படாததால், மாவோயிஸ்ட் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். 2007ம் ஆண்டு டிசம்பர் 31ல் விகிதாச்சார பிரதிநித்துவம் முறை ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டதும், முடியாட்சி ஒழிக்கப்பட்டதும், மீண்டும் ஐந்து மாவோயிஸ்ட்களை அமைச் சர் பொறுப்பெடுக்க ஒத்துழைத்தது. 2008ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் அரசியல்
சாசன தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி 30% வாக்குகள் பெற்று 575 தொகுதி களில், 220ல் வெற்றி பெற்றது. மொத்த உறுப்பினர்களான 601ல் மாவோ யிஸ்ட்களுக்கு கூடுதலாக கிடைத்த 9 நியமனங்களைச் சேர்த்து 229 மாவோ யிஸ்ட்கள் இடம் பெற்றனர்.
இதற்கிடையே சுதந்திரமான தெராய் மாநிலத்தை கோருகின்ற இயக்கமும் தொடங்கியது. 2009ம் ஆண்டு ஒன்றுபட்ட மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து, ஒரு பிரிவு தெராய் பகுதிக்கான கட்சியாக வெளிவந்தது. இன்றுவரை இந்திய அரசுக்கும், நேபாள அரசியலுக்கும் உடன்படாத பகுதிகள் தீர்க்கப்படாவிட்டாலும், நேபாள அரசியலுக்குள் ஒரு ஒன்றுபட்ட முயற்சி என்ற கொய்ராலாவின் கனவு நிறைவு பெறாமலேயே நிற்கிறது. இது வெளிநாட்டுச் சுட்டிகளுக்கு அதிகமாக பலன் தரக்கூடியதா என்ற கேள்வியும் நேபாள மக்களிடம் எழுந்துள்ளது. நேபாள மாவோஸ்ட்கள் எடுத்து வைக்கின்ற புதிய சமாதான செயல்தந்திரங்கள் மட்டுமே, அவர்களது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

Monday, March 22, 2010

விரும்பவும், வெறுக்கவும் அரசுகள் கட்டளையிடுவதா?

இரண்டு நாட்கள் முன்பு சென்னையில் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தானில் நெருக்கடியான காலத்தில் 4 ஆண்டுகள் பிரபல ஆங்கில நாளேட்டிற்காக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் நிரூபமா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு செய்திகளை பரிமாறிக்கொண்டார். பாகிஸ் தான் அரசு பற்றியும், மக்கள் பற்றியும், அங்கே நிலவும் சூழல் பற்றியும் நமக்கு ஒரு விதமான பார்வையை இந்திய அர
சும், இந்திய ஊடகங்களும் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளன. நேரடியாக சென்னை யைச் சேர்ந்த ஒரு பெண் ஊடகவியலாளர் தனது அனுபவங்களைக் கூறும்போது, இதமாக இருந்தது. இந்தியாபாகிஸ்தான் இடையே உள்ள மக்களுக்கு மத்தியில் அமைதிக்கான ஒரு முயற்சி முடுக்கி விடப்படவேண்டும் என்ற அந்தக் கூட்டத் தின் செய்தி, பல ஆண்டுகளாக இதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை கணக்குப் பார்க்க வைத்தது.
பிரபல ஊடகவியலாளர் குல்தீப் நய்யார் இதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டது, பல்வேறு கேள்விகளை ஏற்கனவே எழுப்பியிருந்தது. 55 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சீயால்காட் என்ற தனது சொந்த ஊரைவிட்டு தான் வெளியேறி வந்ததாக குல்தீப் நய்யார் கூறுகிறார். ஏற்கனவே இந்தியாவில் இப்போது எதிர்கட்சியின் முக்கியமான தலைவராக இருப்பவரும், ஒரு முறை உள்துறை அமைச்சராக இருந்தவருமான எல்.கே.அத்வானி, இன்றைய பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு கலவர நேரத்தில் வந்தவர் தான். பலபத்தாண்டுகளாக இரண்டு நாடு களுக்குமான நல்லுறவுக்காக பாடுபாட்டு வரும் ஒரு ஊடகவியலாளர் குல்தீப் நய்யார். இந்த துணைக் கண்டத்தில் இருநாடுகளிலும் உள்ள மக்களிலிருந்து, மக்களுக்கு என்ற தொடர்பு ஒரு பொது உணர்வை ஏற்படுத்தி வருகிறது. அரசுகள் சண்டையிட்டுக் கொண்டாலும், மக்களுக் கிடையே இருக்கும் பரிமாற்றம் அரசுகளை நிர்ப்பந்தித்து அமைதியை நோக்கிய காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நேரத்தில் துணைக் கண்டமெங் கும் பிரபலமான திரைத்துறை நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப் பதிவில் எழுதி உள்ள செய்தி, பரபரப்பாக பேசப்படுகிறது. அவர்கள் ஊடகமும், நமது ஊடகமும், ஒரு ஊடக முன்முயற்சி மூலம் கைகோர்ப்பதற்கான முயற்சிகளை, எல்லை கடந்து செய்ய வேண்டும் என்றும், தங்களுக்குள் புரிதலைக் கொண்டுவருவதற் கான பாலத்தைக் கட்டுவதற்கு, தேவையான பார்வைகளையும், கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மேலும் கூறும்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு நாடுகள்; ஆனால் அவற்றி னுடைய பண்பாடும், உணவுகளும், வாழும் பழக்கமும், மொழிகளும் ஒத்து இருக்கும் போது, இரு புறத்திலும் இருப் பவர்களது நம்பிக்கையை உருவாக்கு வதற்கான முயற்சி யை ஊடகங்கள் செய்வது சிறப்பானது என அமிதாப்பச் சன் கூறியிருக்கிறார்.
குல்தீப் நய்யார் 2002ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான்(விடிகாலை) இதழில், மக்கள் மத்தியில் உள்ள தொடர்பு நிறுத்தப்பட்டது பற்றி எழுதுகிறார். எதற்காக இந்தியாவில் நாளேடு களும், புத்தகங்களும் தடை செய்யப் பட்டன? பயணிகள் எல்லையைத் தாண்டி ஏன் அனுமதிக்கப்படவில்லை? ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் ஏன் நிறுத்தப் பட்டன? அதையும் தாண்டி இஸ்லாமாபாத் தில் இந்திய காட்சி ஊடகங்கள் காட்டப் படாமல் ஏன் தடுக்கப்பட்டன? இது போன்ற கேள்விகளை குல்தீப் நய்யார் எழுப்புகிறார்.
32 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ் பாய் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போது, இந்திய, பாகிஸ்தான் எல்லையை மென்மை யாக்குவது என்று குரல் கொடுத்தார். அப்போது தலைமை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை எதிர்த்தார். ஆனால் வாஜ்பாய் பிரதமராக வந்த பிறகு, ஒரு கட்டத்தில் பேருந்து அனுப்பி, சமாதானம் பேசினார். இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்த பிறகு அனைத்தையும் ரத்து செய்தார். தான் வெளிவுறவுத் துறை அமைச்சராக இருந்த போதுதான் வற் புறுத்தி யதை, பிரதமராக வந்த பிறகு தானே மறுத்தார். ஆனாலும் ஆகஸ்டு மாதம் 1415 தேதிகளில், இரு நாடுகளும் பிறந்த நேரத்தில் 2002ம் ஆண்டில் பாகிஸ்தான் எல்லையில் 45,000 பேரும், இந்திய எல்லையில் 20,000 பேரும் கூடி சமாதான முழக்கமிட்டார்கள். இருபுறமும் இருக்கும் மக்கள் மத்தியில் அன்பும், பாசமும் பொங்கி வழிவது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டது. பயங்கரவாதி களின் தாக்குதல்களைத் தடுக்க, ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டு மக்களை சந்திப்பதை நிறுத்துவதனால் சாதிக்க முடியுமா?
வெறுப்பதும், பகைமை ஏற்படுத் துவதும் பயங்கரவாதிகளின் குறிக்கோள் தானே? அதையே அரசுகள் செய்தால் அதற்கு என்ன பெயர்? எல்லைகளை மூடுவதால், அடிப்படைவாதிகளின் நோக்கம்தானே நிறைவேறும்? இரு நாடுகளுக்குள்ளும் பகை வளருவது மட்டும்தானே அடிப்படை வாதிகளின் விருப்பம்?
2005ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் புதுடெல்லியிலிருந்து ஒரு சமாதான பேரணி புறப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள முல்டனுக்கு மே 11ம் நாள் சென்றடைய திட்டமிட்டார்கள். சமா தானம் மற்றும் ஜனநாயகத்திற்கான பாகிஸ்தான் இந்தியா மன்றம் இதை ஏற்பாடு செய்தார்கள். 6 வாரங்களில் இந்த சமாதான பேரணி இலக்கை எட்டியது. இந்தியா, பாகிஸ்தான் நட்புறவு கிளப் என்ற பெயரில் ஒரு குழு 150 பேருடன் இது போன்ற இன்னொரு முயற்சியில் ஈடுபட்டது. இந்திய, பாகிஸ்தான் உறவு களில் மாற்றம் கொண்டு வர இவர் களும் செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் 2006ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் மட்டைப் பந்து ஆட்டத்தின் மூலம் 200 இந்தியர்களையும், பாகிஸ்தானி யர்களையும் ஒன்று சேர்த்தார்கள். தோஸ்தி என்ற அமைப்பு அதைச் செய்தது. இப்போது 4 ஆண்டுகள் பாகிஸ் தானிலேயே இருந்து, முக்கிய அரசியல் நெருக்கடிகளை நேரில் கண்டு, ஊடகத்தில் எழுதிய நிரூபமா, இதே செய்தியை பேசுகிறார். சமாதான முயற்சி மேட்டுக்குடி களுக்கு இருந்தாலோ, ஊடக அளவில் இருந்தாலோ போதாது என்கிறார். அது ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும் என்பது அவரது வாதம்.
பாகிஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்த வழக்கறிஞர் போராட்டத்தில், செய்தி எடுக்கச் சென்ற போது, கிடைத்த அனுபவங்களைக் கூறுகிறார். இந்தி யாவின் சட்டம், இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை பாகிஸ் தான் வழக்கறிஞர்கள், வாதங்களில் மேற்கோள் காட்டுவதாக கூறுகிறார். தங்கள் போராட்டத்திற்கு இந்திய ஆதரவு வேண்டு மென வழக்கறிஞர்கள் கோரியதையும் குறிப்பிட்டார். இந்திய பொருட்களான டைட்டன் வாட்ச், பிரிட்டானியா பிஸ்கட் போன்றவை, இந்திய தயாரிப்பு என்ற முத்திரை இல்லாமல் அங்கே சந்தையில் அதிகம் விற்கப்படுவதை சுட்டிக்காட்டினார். இந்திய அரசு காஷ்மீர் தவிர்த்த, சீயாச்சல் போன்ற சிறு விஷயங்களிலும், விட்டுக் கொடுக்காமல் இருப்பது பாக்.மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.
இஸ்லாமாபாத்தில் எங்கு திரும்பினா லும் பயங்கரவாதிகள் இருப்பது போல ஒரு கருத்து இந்தியாவில் உள்ள மக்கள் இடையே பரப்பப்பட்டுள்ளது என்றார். பலூசிஸ்தானில் இந்திய அரசு ஆயுதம் கொடுத்து கலகத்தை ஊக்கு விப்பதாக பாகிஸ்தானில் பெரும் பாலும் நம்புகிறார்கள் என்றார். அது உண்மை யில்லை என்றால், அது பற்றி பகிரங்கமாகப் பேச இந்திய அரசு தயங்குவ தேன் என்று கேட்டார். இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் மத்தியில் ஒரு விசித்திரமான ஒப்பந்தம் இருக்கிறது என்றும், அதன் மூலம் ஊடகவியலாளர்கள் அங்கும், இங்கும் இரண்டு நகரங்களுக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மை யைப் போட்டு உடைத்தார்.
அரசுகள் இரண்டும் ஒருவரையொருவர் விருப்புக் கொள்ளச் சொல்லி மக்களுக்கு கூறுகிறார்கள். மறுநாளே ஒரு வரையொருவர் வெறுக்கச் சொல்லி அதே மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார்கள். இது எத்தகைய வகையைச் சேர்ந்தது என்று நிரூபமா கேள்வி எழுப்பினார். கீறல் விழுந்த இசைத்தட்டு போல, பாகிஸ் தானை வெறுக்கச் சொல்லி பரப்புரை செய்வது, இந்திய மக்களை நச்சுச் சிந்தனைக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் நீதி. இருநாட்டு மக்கள் இடையேயும், நேரடி உறவுகளை பலப்படுத்தலாம். அதுவே அரசுகளை நிர்ப்பந்திக்கலாம்.

Sunday, March 21, 2010

ஹெட்லியை வைத்து, இந்தியாவை சுற்றிவிடுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவில் மும்பைத் தாக்குதல் குற்றவாளி என்பதாக கைது செய்யப் பட்ட வர் டேவிட் ஹெட்லி. மும்பை மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் நடந்தது. அதில் பிடிப்பட்ட அஜ்மல் கசாப் தனது வாக்குமூலத்தில், இந்த டேவிட் கொலிமன் ஹெட்லி தன்னை விசாரணை செய்த அதிகாரிகளில் ஒருவராக வந்ததாகக் கூறினார். அதுவே அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. இந்த ஹெட்லி பிடிபட்டதிலிருந்தே, இந்திய அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே எதிரெதிர் கருத்துக்கள்தான் வெளிப்பட்டன. அதாவது மும்பை மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும், எந்த நாட்டில் பிடிபட்டிருந்தாலும், அவர்களை விசா ரிக்க அல்லது நேரடியாக கொண்டு வந்து விசாரிக்க, இந்திய புலனாய்வுத் துறைக்கு உரிமை உண்டு என்ற பார்வையில் இந்திய அரசின் கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முறையும் அமெரிக்க அரசு அதை மறுத்தே வந்தது.
ஹெட்லி ஒரு பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர். அவரை விசாரிக்க இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த படி, டெல்லியிலிருந்து அதிகாரிகள் அமெரிக்க சென்றனர். அவரை கைது செய்து இந்தியா கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையுடன் சென்றனர். ஹெட்லியின் கைதையொட்டி 2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் பற்றிய வழக்கு வெளிவந்தவு டனே, இத்தகைய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. கைதி பரிமாற்றம் என்ற ரீதியில் அது நடத்தப்படும் என்று இந்திய அரசு தனது நம்பிக்கையை ஊடகங்களுக்கு தெரிவித்தது. ஆனால் ஹெட்லியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியாது என அமெரிக்க அரசு மறுத்து விட்டது.
ஹெட்லி சிகாகோ நகரில் அமெரிக்கா வில் வாழ்ந்து வந்தார் என்பதும், அவர் பலமுறை இந்தியாவிற்கும், பாகிஸ் தானிற்கும் மும்பைத் தாக்குதலுக்கு முன்னால், பயணம் செய்தார் என்றும் அமெரிக்கா வெளியிட்டது. பாகிஸ் தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் ஹெட்லி தொடர்பு வைத்திருந் ததையும், மும்பை தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் ஹெட்லியும் ஒருவர் என்பதும், சொல்லப் பட்டது. சமீபத்தில் புனேயில் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு என்பதும், அருகே இருக்கும் ஓஷோ ஆசிரமத்திற்கு இரண்டு முறை ஹெட்லி வருகை தந்ததாக நிரூபிக்கப்பட்டதும் இணைத்துப் பார்க்கப் பட்டது. அந்த அளவு க்கு ஹெட்லியின் நடமாட்டம் அதிகமாகவே சலசலப்பை ஏற்படுத்தியது. ஹெட்லி யும் தன்மீது சுமத்தப்பட்ட 12 குற்றங்களை யும், ஜனவரி மாதம் மறுத்து விட்டு, இப்போது ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அமெரிக்கா செய்தி வெளியிடுகிறது. இதே மும்பை தாக்குதல் வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத் தில் எப்படி நடந்து வருகிறதோ, அதே போல பாகிஸ்தான் நீதிமன்றத்திலும், லஷ்கர் அமைப்பின் மீது விசாரணை நடந்து வருகிறது. இப்போது அமெரிக்க நீதிமன்றத்தி லும் இன்னொரு விசா ரணை நடக்கத் தொடங்கியுள்ளது. இவையெல்லாமே உண்மைக் குற்ற வாளி களை கண்டு பிடிப்பதற்கா? அல்லது வழக்கை குழப்பி விடுவதற்கா? என்ற கேள்வி எழுகிறது.
மும்பைத் தாக்குதலில் 6 அமெரிக்கர் கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக் கர்கள் மீதும், இஸ்ரேலியர்கள் மீதும் அந்தத் தாக்கு தல் குறி வைக்கப் பட்டுள்ளது. ஊடகங் கள் மூலமாக, இந்திய நாட்டை மட்டுமின்றி, உலகத் தையே 2 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நிமிடமும் உலுக்கிவிட்ட சம்பவமாக அந்தத் தாக்குதல் இருக்கிறது. அப்படியானால் அது பெரிய அளவில், பெரிய இடத்தில் திட்டமிடப்பட்ட ஒரு
சதி என்பது புரிய முடிகிறது. அந்தப் பெரிய இடம் எது என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது. எதற்காக அமெரிக்கா இதன் விசாரணையில் இந்த அளவுக்கு தலையிடவேண்டும்? இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு ஏன் இத்தனை தடங்கல்களை ஏற்படுத்தவேண்டும்?
சமீபத்தில் ஹெட்லியின் ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்கா ஊடகங் களுக்கு கூறியது. உடனடியாக இந்திய அதிகாரிகள் அங்கே போய் விசாரிப்பார்கள் என இந்திய உள்துறை அறிவித்தது. அதற்கும் கூட இப்போது அனுமதியில்லை என்பது போல அமெரிக்கா மறுத்து விட்டது. ஏன் இந்த அளவுக்கு இந்தியாவை, அமெரிக்கா அரசு குழப்பவேண்டும்? மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு, அமெரிக்காவை ஜார்ஜ் புஷ் ஆளும் போதும், ஆதரித்துத்தானே செயல்பட்டது? புஷ் உடன் இந்திய அரசு, இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்யும் எந்த ஒரு கப்பலையும் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சோதிக்கலாம் என்றும், பேரழிவு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றதா என்று ஆய்வு செய்யலாம் என்றும் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதே? அப்படி இருந்தும் இந்திய அரசுக்கு, அமெரிக்க அரசு ஒத்துழைக்க தடங்கல் செய்வது ஏன்?
இந்திய நாடே எதிர்த்தாலும், அமெரிக்க அரசுடன், அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இந்திய அரசு கையெழுத்திட்டதே? ஆனாலும் அமெரிக்க அரசு முழுமையாக இந்திய அரசின் தேவைகளுக்கு ஒத்துழைக்க தயங்குவது ஏன்? கோபன்ஹெகனில் நடந்த புவி வெப்பமடைதல் பற்றிய மாநாட்டில், மாறுபாடுகள் இருந்தாலும் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா நீட்டிய தாளிலே கையெழுத்துப் போடவில்லையா? அப்படி இருந்தும் அமெரிக்க அரசின் முழு ஒத்துழைப்பு இந்தியாவிற்கு இந்த வழக்கில் ஏன் கிடைக்கவில்லை?
2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் முன்னாள் ராணுவ உளவு அதிகாரிகள் பக்கத்திலிருந்து வெளியான தகவல்களில் சில செய்திகள் கிடைத்தன. அமெரிக்க ஊடகங்களின் செய்திப்படி 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள், அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.பி.ஐ. கொடுத்த அறிக்கையில், ஹெட்லி மீது கிரிமினல் செய்தி அறிக்கை என்பதாகத் தான் குற்றம் சாட்டியுள் ளார்கள். அதாவது ஹெட்லியுடன் ஏற்கனவே பேசி முடித்தபடி சில குற்றங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பரஸ்பரம் முடிவு செய்ததையொட்டி, பிற குற்றச்
சாட்டுகளை அழுத்தம் கொடுக்காமல் உருவாக்கப்பட்ட அறிக்கை தான் அது என்பதாக இந்தியாவின் முன்னாள் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதுவே ஹெட்லியை அவரது பாகிஸ்தான் தொடர்பு களுடன்
சேர்ந்து ஆப்கானிஸ்தான் பாகிஸ் தான் பகுதியில் செய்த குற்றங்களை விசாரிக்க விடாமல் செய்து விடும். அதனால் இந்திய அதிகாரிகள் ஹெட்லியை கைது செய்து கொண்டு செல்வதற்கோ, சுதந் திரமாக விசாரணை செய்வதற்கோ அனுமதிக்க அமெரிக்க அரசு தயாராக இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளும், எஃப்.பி.ஐ.யின் அதிகாரிகளும் நெருக்கமான கண் காணிப்பை ஹெட்லி மீது வைத்திருக் கிறார்கள். அதிபர் ஒபாமாவும் ஒருபுறம் பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் கூட்டு வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட பயங்கரவாத செயலில் ஈடுபட்டவரை விசாரிக்கும் போது, அதை நேரடிப் பார்வையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, ஒரு அமெரிக்க புலனாய்வுத்துறையின் ஒற்றன் என்ற செய்தி அம்பலமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான், இந்த திரைமறைவு வேலைகள் என்று முன்னாள் இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அவர்களுடைய தொகுப்பில் இந்த ஹெட்லி 4 அமைப்புகளில் பணியாற்றிய வன் என்கிறார்கள். இதை முன்னாள் அதிகாரி ராமன் எழுதியுள்ளார். அதாவது அமெரிக்கா வின் போதைத் தடுப்பு நிர்வாகத்தில் பணியாற்றினான். எஃப்.பி.ஐ.யில் செயல் பட்டான். அமெரிக்க வெளிவிவகார புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வில் இருந்தான். இதுதவிர பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவில் தொடர்பில் இருந்தான். இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதியை, வாக்குமூலம் கொடுத்த காரணத்திற்காக, அமெரிககா தண்டனைக் குறைப்பு கொடுக்கப் போகிறது. இதுவே இந்திய உள்துறைக்கு பெரும் அதிர்ச்சித் தாக்குதல். இப்போது மும்பை தாக்குதலை நடத்தியதில் அமெரிக்காவின் பங்கும் தெரிந்து விட்டது. இப்படி ஒரு தாக்குதலை நடத்தி, இந்தியாவை பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளிவிட்டு, அதன் மூலம் அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்களை வரிசையாக கையெழுத்திட வைக்கிறார்களா? என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. இல்லையென்று மறுப்பதற்கு நம்மிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

Saturday, March 20, 2010

நானாவதி கமிஷன், காலாவதி ஆனதா?

2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் குஜராத் மாநிலத்தில் கோத்ரா நகரில் அந்த விபத்து நடந்தது. சபர்மதி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ரயில் வண்டியில் பயணமாகி வந்த கரசேவகர்கள், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பரப்புரை ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, திரும்பி வரும்போது ரயில் பெட்டி எரிந்து, 59 பேர் தீயில் கருகிச் செத்தார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ரயில் வண்டி 11 பெட்டிகளைக் கொண்டது. 1100 பேர் வரை இருக்கைகள் கொண்டது. அதில் அன்று 2000 பேர் பயணம் செய்தார்கள். அவர் களில் 1700 பேர் கரசேவகர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்து ஒரு திட்டமிட்ட சதி என்பதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். உடனடியாக வி.எச்.பி.யிலிருந்து பந்த் அறிவிக்கப்பட்டது. அதில் மாநிலம் எங்கும் 1167பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதில் பெருவாரி யான வர்கள் முஸ்லிம்கள். அந்த தொடர் வன்முறை மாநிலத்தில் 993 கிராமங்களில் நடத்தப்பட்டது. 151 நகரங்களிலும் வன்முறை தாண்டவமாடியது. குஜராத் மாநிலத்திலிருக்கின்ற 464 காவல் நிலை யங்களில், 284 நிலையங்கள் உள்ள பகுதிகளில் அந்த வன்முறைத் தீ பற்றியெரிந்தது. அந்த மாநிலத்தில் மொத்தம் இருக்கின்ற 182 தொகுதிகளில், 153ல் இந்த முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையை, அரசு ஆதரவுடன் இந்துத்துவா அமைப்புகள் நடத்தின. அதுபற்றி ஆய்வறிக்கையைக் கொடுத்த பெண்கள் நாடாளுமன்றக் குழு 1லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் வன்முறையால் இடம்பெயர்ந்ததாக கூறுகிறது. அவர்களுக்கான 121 அகதிகள் முகாம்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே ஏற்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக் கான வீடுகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் வசித்து வந்தவை, நொறுக்கப்பட்டது. அதை கணக்கிட்டதில் நகர்ப்புறங்களில் 2023 என்றும், கிராமப்புறங்களில் 2931 என்றும், ஆகமொத்தம் 4953 என்றும் ஒரு பட்டியல் வெளியானது. இது முழுமையாக உடைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை. பாதியளவு உடைக்கப்பட்ட வீடுகள் என்பதாக 2002ம் ஆண்டு ஜூன் மாதம் வரை எடுத்த கணக்கெடுப்பு, நகர்ப்புறத்தில் 11,199 வீடுகளையும், கிராமங்களில் 7,095 வீடுகளையும் சேர்த்து 18,942 என்று கூறப்பட்டது. ஜுன் மாதத்திற்குப் பிறகு நகர்ப்புறங்களில் 5,000 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,000 வீடுகளும் சேதமாக்கப்பட்டன. பா.ஜ.க. ஆட்சியாளர்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டாகள் என்பதாக, எல்லாத் திசையிலிருந்தும் கூக்குரல் கிளம்பியது.
2002ம் ஆண்டு மார்ச் 6ம் நாள், குஜராத் மாநில அரசு 1952ம் ஆண்டின் சட்டப்படி ஒரு மனிதர் ஆய்வு ஆணையம் ஒன்றை ஓய்வு பெற்ற நீதியரசர் கே.ஜி.ஷா தலைமையில் நிறுவியது. இந்த ஷா தான் ஏற்கனவே 1985ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த மதவாத வன்முறை வழக்கில் சிக்கலுக்குள்ளான நீதியை வழங்கினார் என்பது இன்னொரு கதை. ஆணையம் கோத்ரா வன்முறையையும், பிறகு நடந்தவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது வழிகாட்டலாகக் கொடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய எதிர்ப்புக் குரலுக்கு இணங்க 2002ம் ஆண்டு மார்ச் 21ம் நாள், நீதியரசர் நானாவதியை ஆணையத்திற்குத் தலைவராகப் போட்டு மாநில அரசு உத்தரவுப் பிறப்பித்தது. 1984ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான வன் முறையைப் பற்றிய ஆய்விற்கான ஆணையத்திற்கு இதே நானாவதி தலைமைத் தாங்கியிருந்தார். நானாவதி ஆணையத்தின் நோக்கத்தில், நடந்த வன்முறைகளில் முதல்வர், அமைச்சர் கள், மற்றவர்கள், அமைப்புகள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் நடந்து கொண்ட விதங்கள் பற்றியும் ஆய்வு செய்ய இணைக்கப்பட்டிருந்தது. பெரிய அளவில் குஜராத் மாநில ஆட்சி யாளர்கள், நடந்து முடிந்த முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகளுக்கு குற்றம் சாட் டப்பட்ட ஒரு நிலைமை அப்போதே உருவாகிவிட்டது. அதையொட்டி 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு, குஜராத் முதல்வர் பற்றியும், அவரது சங்பரிவார் பற்றியும் எழுந்துள்ள வன்முறைக் குற்றச்
சாட்டுகளை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை போடுவதாக இருந்தது. அதையொட்டியே முந்திக் கொண்ட குஜராத் மாநில அரசு 2004ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, அதே அம்சங்களை நானாவதி ஆணையத்திற்கு உள்ளேயும் இணைத்துக் கொண்டு உத்தரவிட்டது. அதன்பிறகு நானாவதி ஆணையம் 13 முறை நீட்டிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் இந்த ஆணையத்தின் அறிக்கை தயார் செய்வதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு மார்ச் மாதமே நீதியரசர் ஷா மறைந்து விட்டார். அவர் இடத்தில் நீதியரசர் அக்ஷாய் மெர்தா நியமிக்கப்பட்டார்.
நானாவதி ஆணையம் 2002ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியே பொது மக்களை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. அதில் 46,494 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. 1,106 சாட்சிகள் கிடைத்தனர். சபர்மதி விரைவு வண்டியில் எரிந்து போன எஸ்6 என்ற எண்ணுள்ள பெட்டியை, பல முறை இந்த ஆணையம் நேரில் பார்த்தது. 2008ம் ஆண்டு செப்டம்பர் 18ல், இந்த இரு உறுப்பினர் ஆணையம் தனது முதல் பகுதி அறிக்கையை, முதல்வரிடம் கொடுத்தது. அதை 2008ம் ஆண்டு செப்டம்பர் 25ம் நாள் சட்டமன்றம் முன்னால் அரசு வைத் தது. ஆணைய அறிக்கையின் இரண் டாவது பகுதி 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வைக்கப்படும் என்று அப்போது கூறினார்கள்.
மத்திய அரசு 2004ம் ஆண்டு செப்டம்பரில், யூ.சி பேனர்ஜி ஆணை யம் என்ற ஒன்றை நிறுவி, அதன் மூலம் எஸ்6 ரயில் பெட்டியில் தீ எரிந்தது எப்படி என்பதாக ஆய்வு செய்யக் கூறியது. ஆனால் அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு குஜராத் உயர்நீதிமன்றம் தடைபோட்டு விட்டது. நானாவதி ஆணையத்தின் முதல் அறிக்கைப்படி எஸ்6 ரயில்பெட்டி விபத்தால் எரிய வில்லை என்றும், பெட்ரோல் ஊற்றி நெருப்பிட்டதால் எரிந்தது என்றும் கூறுகிறது. வெளியே நின்ற கும்பல் தீயணைப்பு வண்டிகளையும், ரயில் பக்கத்தில் வரவிடாமல் தடுத்ததாகவும், அந்த கும்பலை ஹாஜி பிலால், அப்துல் ரகுமான் மற்றும் சிலர் தூண்டி விட்டதாகவும் அது கூறியது. காவல் துறை 140 லிட்டர் பெட்ரோலை ஊற்றியதாக கூறிய விளக்கத்தை சார்ந்தே அந்த முதல் அறிக்கை இருந்தது. சிலர் பெட்டிக்குள் ஏறியும் பெட்ரோல் ஊற்றியிருக்கலாம் என்பது அதன் சந்தேகம். அதேசமயம் மோடி மற்றும் அமைச்சர்கள் மீது சந்தேகம் இல்லை எனவும் அந்த முதல் அறிக்கை கூறியது.
மத்திய அரசு நிறுவிய பேனர்ஜி ஆணைய அறிக்கை, வெளியில் இருந்து யாருமே தீ வைக்கவில்லை என்றது. மின்சார காரணங்களாலோ, சமையல் காரணங்களாலோ நெருப்புப் பிடித்து, காற்றில்லாத சூழலில் மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அது கூறுகிறது. ரயில்வே நிலையத்தில் அந்நேரம் எந்தக் கூட்டமும் இல்லை என்பதாக பேனர்ஜி அறிக்கை கூறுகிறது. அன்றைய மத்திய அரசான, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக அரசாங்கத்தின் ரயில்வே அமைச்சர் கோத்ராவிற்கு வந்து பார்க்கவில்லை என்றும் அது கூறியுள்ளது. நானாவதி ஆணையத்தை தேசிய மனிதஉரிமை ஆணையமும் சாடுகிறது. நானாவதியின் முதல் அறிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட, நோக்கத்துடன் கூடிய ஒன்று என அதன் சாடல் தெரிவிக்கிறது. அது உண்மைக்கு மாறானது என்றும் தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதியரசர் ஜே.எஸ்.பெர்மா கூறியிருந்தார். அகதிகள் முகாம்களைக் கூட அரசியல் தலைவர்களோ, பெரிய அதிகாரிகளோ சென்று பார்க்கவில்லை என்பது இவரது குற்றச்சாட்டு. பதிவான செய்திகளின் படி கோத்ராவில் 1925, 28,46, 48, 50, 53, 80, 81, 85, 86, 88, 89, 90, 91, 92, ஆகிய ஆண்டுகளில் மதக்கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வரலாற்றை நானாவதி கண்டு கொண்டதாக தெரியவில்லை. கரசேவகர்களை ஏற்றிக் கொண்டு பல ரயில்கள் வந்தாலும், ஏன் சபர்மதி எக்ஸ்பிரசை, பிப்ரவரி 27ல் அதிலும் எஸ்6 பெட்டியை நெருப்பிட தேர்வு செய்தார்கள் என்று விளக்க நானாவதி தயாராயில்லை. காயம்பட்ட பயணிகளிடம் விசாரித்த பேனர்ஜி ஆணையம், வெளியில் இருந்து எறியப்பட்ட எரிபொருள் என்ற காரணத்தை மறுத்துள்ளார். கோத்ராவில் 59 கரசேவகர்கள் மரணத்திற்கு உண்மைக்காரணம் என்ன என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் நானாவதி தனது முழு அறிக்கையை வைப்பதாக இருந்தது. இதுவரை 13 நீட்டிப்புகளை பெற்ற அந்த ஆணையம், எந்தவொரு அறிக்கையையும் இந்நாள் வரை முன்வைக்கவில்லை. காலாவதியான அறிக்கையாக நானாவதி அறிக்கை மாறி விட்டதா? பா.ஜ.க.போல காங்கிரஸ் கட்சியும், ஏதாவது ஒரு வடிவத்தில் இந்துத்துவாவை வழி மொழிவதால், தாமதத்தை தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்களா? இதுவே பொதுமக்களின் சந்தேகம்.

Friday, March 19, 2010

ஆதிவாசி நிலங்களை, வளைத்துப் போடும் வணிகக் குழுமங்கள்

சத்திஸ்கர் மாநிலம் என்றாலே மாவோ யிஸ்டுகளுக்கும், மத்திய அரசு துணை ராணுவப்படையினருக்கும் இடையி லான மோதல் பகுதி என்பதாக ஒரு புரிதல் இருக்கிறது. அந்த மாநிலத்தின் காவல்துறை சல்வாஜுடும் என்ற கூலிப் படையை உருவாக்கி, அதன் மூலம் மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதிகளில், அவர்களுக்கு ஆதரவாக சென்று விட்ட அல்லது செல்லக் கூடிய ஆதிவாசிகளை மிரட்டுவதற்கும், அடிப்பதற்கும், கொல்லு வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்திகள் பல நமக்கு வந்துள்ளன. காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆதிவாசி மக்களுடைய வாழ் வாதாரங்களாக இருக்கக் கூடிய நிலத்தையும், நிலத்தடி கனிமப் பொருட்களையும் களவாடுவதற்காக, பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் உள்ளே நுழைவதால் ஏற்படுகின்ற மோதல்களில் தான், அரசுப் படைகள் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதாகவும் பல செய்திகளைக் கேள்விப்பட்டோம். அந்தப் பகுதிகளில் ஆதிவாசி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட மாவோ யிஸ்ட்டுகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதாகவும் அரசுத் தரப்பிலிருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. அதுபோல அனைத்து மலைவாழ் மக்களின் பகுதிகளிலும், மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்களா? மாவோயிஸ்ட் வன்முறை நடக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் இப்போது எழுந்துள்ளன.
மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டமோ அல்லது மாவோயிஸ்ட் வன்முறைகளோ சிறிதும் இல்லாத பகுதிகளிலும், ஆதிவாசி களுக்கு பாரம்பரியமாக சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் என்று அழைக்கப் படும் வணிகக் குழுமங்கள், வளைத்துப் போட்டு வருகின்றன என்பதாக செய்தி கள் இப்போது வரத்தொடங்கி யுள்ளன. அவ்வாறு ஆதிவாசி பகுதிகளில் அவர் களது பாரம்பரிய நிலங்களை, வணிகக் குழுமங்கள் ஆக்கிரமிக்கின்றன என்று தெரிகிறது. பணம் அதிகமுள்ள வணிகக்குழுமங்கள், ஏழ்மையிலிருக்கும் ஆதிவாசிகளது நிலங்களை அதிகப்பணம் கொடுத்து வாங்குவது எப்படித் தவறு என்றும் கேட்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் வேறு ஒரு சட்டவிரோத நடைமுறை அமுலாகி வருகிறது என்பதுதான் முக்கியப் பிரச்சினை. அதாவது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு ஒரு தீர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலங்களை, எந்த ஒரு ஆதிவாசி அல்லாதவர்களுக்கும் சுரங்க ஒப்பந்தம் என்ற பெயரில் கூட, மாற்றிக் கொடுப்பது என்பது தடைசெய் யப்படுகிறது என்பதாக தெளிவாக உத்தர விடப்பட்டது. இந்த வழக்கை சமதா என்ற ஒரு அரசு சாரா நிறுவனம், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் மீதும், மற்றவர்கள் மீதும் தொடுத்திருந்தது. இது 1997ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆல் இந்தியா ரிப்போர்ட்டர் என்ற உச்சநீதிமன்ற வழக்குகளைப் பற்றி வெளியிடும் 1997ம் ஆண்டின் அறிக்கையில், 3297ம் பக்கத்தில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் சுரங்கத் தொழிலுக்கு ஒப்பந்தத்திற்கு விடப்படும் ஆதிவாசிகளுடைய பகுதி நிலத்தில் வருகின்ற லாபத்தில் 20 விழுக்காடு ஆதிவாசிகள் சமூகத்தின் உறுப்பினர்களுக்காக என்று ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான நிலையை உறுதிப்படுத்துவ தற்காக, மத்திய அரசு ஆதிவாசிகள் பகுதிகளில்
சுரங்கத் தொழில் செய்வதற்கான, கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட தீர்ப்பு ஆந்திரப்பிரதேசத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் ஏற்புடையது. ஏனென்றால் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைந்துள் ளது. அரசியல் சட்டத்தின் 5வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி , பாரம்பரியமிக்க ஆதிவாசிகளுக்கு, அவர் களது உடைமைகளுக்கும், அவர்களை சுரண்டவும், மிரட்டல் வருவதை எதிர்த்து சிறப்பு பாதுகாப்பு கொடுப்பதற்காக, ஆதிவாசிகளது நிலங்களின் பாரம்பரிய உரிமைகளை பட்டியல் போட்டு உத்தரவாதம் செய்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கோ, தொழிற்
சாலைகளுக்கோ ஆதிவாசி பகுதி நிலங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றால், அங்குள்ள கிராமக் கவுன்சில்களை அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்ற சட்டமும் 1996ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டியே 1997ல் உச்சநீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சல்வாஜூடும் என்ற கூலிப்படை மூலம் பலாத்காரமாக காலி செய்யப்பட்ட 644 ஆதிவாசிகள் வாழும் கிராமங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினை இப்போது வந்துள்ளது. அது டாடா ஸ்டீல் கம்பெனி ஒரு ஆலை உருவாக்குவதற்காக அறிவித்த திட்டம் சம்பந்தப்பட்டது. டாடாக்கள் அவ்வாறு அறிவித்த பிற்பாடும், 5 ஆண்டுகளாக அந்த வட்டார ஆதிவாசி ஆண்களும், பெண்களும் தங்களது பாரம்பரிய நிலத்தில் உழுது வருகிறார்கள். 5,000 ஏக்கர் நிலம் டாடாவிற்கு தேவைப்படுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது. வடக்கு பஸ் ஸ்டார் என அழைக்கப்படும் அந்த வட்டாரத்தில் உள்ள ஜக்தால்பூரில் மாவோயிஸ்ட்டுகளோ, சல்வாஜûடுமோ இல்லை. அதே போல தெற்கு பஸ் ஸ்டார் பகுதியிலும் கூட, எஸ்ஸார் நிறுவனம் நில ஆக்கிரமிப்பு செய்ய முயலும் இடத்திலும் மாவோயிஸ்டுகளோ, சல்வாஜூடுமோ இல்லை. இந்த பகுதிகள் சட்டவிரோதமாக ஆதிவாசி நிலங்களைக் கைப்பற்ற முயலும் வணிகக் குழுமங்களுக்கு, கையூட்டு பெறும் அதிகாரிகள் செய்து கொடுக்கின்ற அக்கிரமங்கள்தான். இவை எல்லாமே பலாத்காரமாக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
முதலில் நில அளவையர் வந்தார்கள். பிறகு டாடா நிறுவனம் பெரியதொரு ஸ்டீல் ஆலையை நிறுவப் போகிறது என்ற வதந்தியை கிராமங்களில் பரப்பினார்கள். கடைசியாக அரசாங்க அதிகாரிகள் லோகண்டிகுடா பகுதியிலுள்ள கிராமவாசி களிடம், குறிப்பாக கோண்ட் ஆதிவாசிகள் மத்தியிலுள்ள கல்வி கற்காத விவசாயி களிடம் பணம், வேலை மற்றும் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்து, அவர்களது நிலங்களை விட்டு வெளியேறச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். பணத்தை வைத்துக் கொண்டு தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றும், தங்கள் குழந்தை களுக்கு உணவூட்ட விவசாயம் செய்ய வேண்டும் எனவும் பதில் கூறிய விவசாயி பங்காராம் கைது செய்யப்பட்டார். 13 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மகன்கள் நிர்ப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டனர். அருகே சிந்தகாவோம் கிராமத்தில் உள்ள சுந்தர்காஷியாப், அரசாங்க மாட்டாஸ் பத்திரியில் ரூ.10,000 சம்பளம் வாங்கி வந்தார். அவரது பெரிய அதிகாரிகள் மிரட்டியதால், தனது தம்பிகளின் நிலத்தை நிர்ப்பந்தமாக விற்கவேண்டி வந்தது. கிராமத்து விவசாயிகள் தங்கள் நிலங்களை டாடாவிற்கு விற்பதற்கு சிறிதளவு கூட தயாராக இல்லை. இந்தியா முழுவதும் நடக்கின்ற நிர்ப்பந்தமான நிலப்பறிப்பு, இங்கும் கூட நடந்து வருகிறது. இந்தியாவின் ஆதிவாசிகள் பகுதிகளில் மட்டும்தான், அவை சட்ட ரீதியாக போராடப்படுகின்றன. இந்த இடத்தில் டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், வேதாந்தா, தேசிய கனிமவள வளர்ச்சி வாரியம் ஆகியவை கனிம வளங்களை களவாடுவதற்காக செய்து வரும், சட்ட விரோத நிலப்பறிப்பு ஆதிவாசி மக்களால் சட்டப்படி எதிர்க்கப்படுகிறது. இதில் வேதாந்தா என்ற நிறுவனம், தூத்துக்குடி நகரை மாசுபடுத்தும் ஸ்டெர் லைட் ஆலையின் தாய் அமைப்பு. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், 8.4 விழுக்காடு ஆதிவாசிகள் என அறிவிக்கப் பட்டுள்ளனர். அரசாங்க உதவிகள் எட்டாத, கல்வி அறிவும் கிட்டாத உள்கிடைக் கிராமங்களில் ஏழ்மையில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பையும், பறிக்கின்ற வேலையை பணக்கார வணிகக் குழுமங்களுக்கு சட்டவிரோதமாக செய்து கொடுக்கும் ஊழல் அதிகாரிகளை என்ன செய்யப்போகிறோம்?

Thursday, March 18, 2010

ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு பாதுகாப்பான நாடு: இந்தியர்களுக்கு இல்லையா?

ஆஸ்திரேலிய நாட்டில் படிக்கச்சென்ற இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாகச் செய்திகள் கூறப்படுகின்றன. இது இனவெறித் தாக்குதல் என்பதாகவும் வருணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. இந்திய மாணவர்கள் மீது நடந்த வன்முறை தாக்குதல்களில் சில இனவெறித் தாக்குதல்களும் நடந்துள்ளன என்றும், ஆனால் எல்லாத் தாக்குதல்களும் இனவெறித் தாக்குதல் அல்ல என்றும், ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் கூறி வருகிறது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் பீட்டர் வர்கீஸ், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கின்ற வன்முறைகள் பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதிலும் முக்கியமாக இலங்கைத் தமிழர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, ஆஸ்திரேலிய தூதர் நமது முதல்வரிடம் பேசியிருக்கிறார் என்பது தான். தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு, அனைத்து நாட்டு விதிகள் படி ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தருவதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும், அவர் அப்போது எடுத்துச் சொன்னார் என்பது ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. சட்டவிரோத நுழைவுகளைத் தான் தாங்கள் உற்சாகப்படுத்த முடியாதே தவிர, நியாயமான அகதிகளை சட்டப்பூர்வமாக அதிகமாக எடுத்துக்கொள்ள ஆஸ்திரேலியா தயார் என்பதையும் அப்போது கூறியுள்ளார். இது முக்கியமாக கவனிக்கத்தக்க ஒரு செய்தி. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்புக்கு மத்தியில் உழன்றுக் கொண்டிருக்கும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை கொடுக்கலாமா என்பது பற்றி ஒரு விவாதம் இங்கே அரசியல் அரங்கில் எழுந்தது. அவர்கள் வேண்டுவது பத்தாண்டுகளுக்கான நிரந்தர பாஸ்போர்ட் தான் என்பதையும் கூட, எடுத்துச்சொல்லியிருந்தார்கள். இத்தகையச் சூழலில் ஆஸ்திரேலிய அரசே நேரில் வந்து இதுபோன்ற அடைக் கலம் கொடுப்பதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது என்பது, உலகத்தமிழர்கள் மத்தியில் ஆறுதலான ஒரு சொல்தான். அதனால் தமிழர்கள் அனைவரும் இந்த நேரத்தில், ஆஸ்திரேலியாவில் நடப்பதாகக் கூறப்படும் இனவெறி தாக்குதல் பற்றி அதாவது இந்திய எதிர்ப்பு தாக்குதல் பற்றி உண்மையான நிலவரங்களைத் தெரிந்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களில், தென்னிந்திய மாணவர்கள் மீது குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடந்ததில்லை. அப்படியானால் அங்கே என்னதான் நடக்கிறது. கிட்டத்தட்ட 1991ம் ஆண்டிலிருந்து இந்திய மாணவர்களுக்கு, கல்விக் கற்க ஆஸ்திரேலிய விசா கொடுக்கப்படுகிறது. வணிகம் பற்றிய உயர்க் கல்வி படிப்பிற்காக இங்கிருந்து
செல்லும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ, உயர்கல்வி முடித்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. அதன்பிறகு 2001ம் ஆண்டிற்குப் பின் கல்விக்கான விசா நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. பட்டப்படிப்பு படிப்பதற்கே இங்கிருந்து மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 2004ம் ஆண்டையொட்டி அதுவும் கூட தளர்த்தப்பட்டது. சாதாரணமான படிப்புகளாக இருக்கும் சமையல்கலை, பீங்கான் சாமான் செய்தல், வெல்டிங், கணினி வேர்டு டாக்குமென்ட், தாள் கலைகள் போன்ற குடிசைத் தொழில் மட்டத்திலான கல்விகள் கற்க செல்லும் மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 12ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் பல மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட கல்வி கற்றுக் கொடுக்க, வீட்டிலேயே அலுவலகம் மற்றும் கல்விக் கூடத்தை உருவாக்கியுள்ள போலி கல்வி தாளாளர்கள் அதிகமாகத் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவும், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த பட்டேல்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய கல்விக்கான விசா கொடுப்பத்தில் அரசு அறிவித்த தளர்வு தான், ஆஸ்திரேலிய அரசு செய்தத் தவறு. அதிகமாக பணம் வரும் என்பதனால் இத்தகைய தளர்வுகளை அனுமதித்திருந்தார்கள். அதன் விளைவு பல்லாயிரக்கணக்கில் அங்கே சென்ற வடஇந்திய மாணவர்கள், அரசு அனுமதித்த வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை என்பதையும் செய்துவிட்டு, சட்டவிரோதமாக மேலும் 20 மணி நேர வேலையை ஒவ்வொரு வாரமும் செய்து, பொருள் ஈட்டினார்கள். ஒரு மணி நேரத்திற்கு வேலைச் செய்தால், 15 ஆஸ்திரேலிய டாலர் சம்பளம் கிடைக்கும். அது இந்திய பணம் ரூ.41க்கு சமம். பல்கலைக்கழகங்களில் படிக்கச் சென்றால் ரூ.15 லட்சம் செலவாகும். போலி நிறுவனங்களான சிறிய வேலைகளுக்கு படிக்கச் சென்றால் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகும். ஆங்கிலம் தெரியாத, இந்தி மட்டுமே பேசத் தெரிந்த வடஇந்திய மாணவர்கள், இரண்டே வருடங்களில் சம்பாதித்து, சேமிக்கத் தொடங்கினார்கள். ஒரு அறையில் சட்டப்படி ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்ற அந்த நாட்டு விதியை மீறி நாலு பேர் வரை தங்கினார்கள். இரண்டு பேர் தங்கும் அறைகளில் 10 பேர் தங்கினார்கள். வடஇந்திய கிராமப்புறத்து இளைஞர்கள் தாங்கள் வளர்ந்து வந்த இந்திய பண்பாட்டுப் படி, அந்த நாட்டு பண்பாட்டைப் புரியாமல் குழு, குழுவாக அலைந்தார்கள். 10,000 பேருக்குப் பதில், 1,00,000 பேர் வந்ததால், ஆஸ்திரேலியாவிற்கு அதிக பணம் கிடைத்தது. ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள் புதிய குழப்பத்தையும், முத்திரையையும் கொடுத்து விட்டது.
இந்தியர்கள் தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் அங்கே விலைக்கூடிய கைப்பேசி, ஷûக்கள், வாட்ச்கள், கார்கள், லேப்டேப்புகள் ஆகியவற்றுடன் பவனி வந்தார்கள். வெள்ளைக்கார பெண்களையும், ஆண்களையும் பார்த்து முறைத்துப் பார்த்தார்கள். இதுவே தனிநபர் உரிமைகள் சமூகத்தைப் பாதிக்கக் கூடாது என கருதும் ஆஸ்திரேலியர்களுக்கு எரிச்சலை உருவாக்கும். வெயில் காலத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அங்கே கொளுத்தும் வெயிலைப் பார்க்கலாம். அப்போது வெள்ளைக்காரர்கள் கடற்கரைக்கு அரைக்கால்
சட்டையுடனோ, ஜட்டியுடனோ, பாதி உடையிலோ வருவது வழக்கம். இதற்கு நேர்மாறாக வடஇந்திய இளைஞர்கள் ஜீன்ஸ், முழுக்கைச் சட்டை, ஷûக்கள்
சகிதம் 10 பேராக நடமாடுவார்கள். இந்தி மொழி மட்டுமே சத்தமாகப் பேசுவார்கள். இதுவே அங்குள்ள பொதுச் சூழலை அதிரவைக்கும்.
நடந்த வன்முறைகளின் பட்டியலை ஆய்வுச் செய்தால், நள்ளிரவில் வேலை முடித்து தனியாக வந்த இந்திய இளைஞனை காசுக்காக அடித்த பொறுக்கிகளின் செயல் என்ற ஒரு வகை குற்றம் புரியப்படும். பச்சிளம் குழந்தையை கொலை செய்ததாக வந்த சமீபத்திய குற்றச்சாட்டு, இந்திய வாடகைக் கார் ஓட்டுனரே செய்தார் என்றும் அம்பலமாகியுள்ளது. தனது காருக்கு காப்பீடாக 10,000 டாலர் கிடைக்கும் என்பதற்காக, வடஇந்திய மாணவர் தீ வைத்த சம்பவமும் அம்பலமானது. லெபனான் நாட்டு இளைஞர்களுக்கும், வடஇந்திய இளைஞர்களுக்கும் பலமுறை போதையில் சண்டை நடந்துள்ளது.
தமிழ்மொழி அனைத்து ஆஸ்திரேலிய பள்ளிகளிலும், 2வது மொழியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அது ஈழத் தமிழர்கள் எழுப்பிய உரிமைக் குரலால் கிடைத்த பரிசு. முருகன் கோவில், வெங்கடேச பெருமாள் கோவில், துர்காதேவி கோவில் ஆகியவை அரசு நிதியிலேயே கட்டப்பட்டுள்ளன. பாலஸ்தீனர்களுக்காக மசூதிகளையும் அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அங்கு காவல்துறை ஒரு பைசாக் கூட லஞ்சம் வாங்குவது இல்லை.
இத்தனை வன்முறைகள் நடந்ததாக வருணிக்கப்பட்டாலும், எந்த இந்திய மாணவனும் இந்தியாவிற்கு திரும்பி வரவில்லை. இப்போது ஆஸ்திரேலியா அரசு கல்வி விசாவில் உள்ள தளர்வுகளை நிறுத்தி விட்டது. பட்டதாரிகளை மட்டும் உயர் கல்விக்காக எடுப்பது என முடிவு செய்துள்ளது. போலி இந்திய கல்வி வியாபாரிகளது கூடங்களை மூடிவிட்டது. அதனால் வடஇந்திய போலி வியாபாரிகள் பாதிக்கப்படுவதால், அவர்கள் இந்திய ஊடகங்களில் பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். அதற்கு இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் பலியாகயிருக்கலாம்.
இதே நேரத்தில் ஈழத் தமிழர்கள் அங்கே ஜனநாயக உரிமைகளுடன் செயல்பட முடிகிறது. சிட்னியிலும், மெல்போர்னிலும், கேன்பராவிலும் 10,000 பேர் கலந்துக் கொள்ளும் பேரணிகளை, ஈழத்திற்காக நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் 2,000 பேர் வரை வெள்ளைக்காரர்களே, தோழமைக் காட்டி கலந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதில் இரண்டாவது கருத்து உருவாக வழியில்லை. வடஇந்திய இளைஞர்களின் பண்பாட்டு செழிப்பையும், மொழி கற்றலையும் மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசிடம் இருக்கிறது.

Wednesday, March 17, 2010

நாடாளுமன்றத்தில் இழுபறியாகும் சட்டமுன்வடிவுகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றோடு நிறைவுற்றது. மீண்டும் ஏப்ரல் 12ம் நாள் கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறை நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமான சட்டமுன் வடிவுகள் தாக்கல் செய்யப்படும் புதிய சூழல் உருவானது. 14 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த, பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு, தனது மாநிலங்களவை தாக்கலிலேயே பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதற்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, என்றும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் எதிர்த்து முழக்கமிட வும், வெளிநடப்பு செய்யவும் என்பதாக புதிய கலகலப்பு, அந்த கட்டிடத்தில் எதிரொலித்தது. அதை விட அதிகமான தாக்கத்தை, பெண்கள் இடஒதுக்கீட்டின் சட்டமுன்வடிவு ஏற்படுத்தியது. மாநிலங்க ளவையில் அந்த முன்வடிவை தாக்கல் செய்வதையே எதிர்த்து சில எதிர்கட்சிகள் கிளர்ச்சி செய்தன. குடியரசு துணைத் தலைவர் அன்சாரியின் மைக் பறிக்கப் பட்டது. பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவு பறிக்கப்பட்டு, கிழிக்கப் பட்டது. இந்த முறையில் போராடினால் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டமாவதை தடுத்துவிடலாம் என சில நாடாளுமன்ற கட்சிகள் நினைத்தார்கள் என்றால் அது ஒரு ஆச்சரியமான செய்திதான். அதற்காக சில உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டார்கள். மன்னிப்புக் கேட்டால் மீண்டும் அவைக்கு வரலாம் என்ற குடியரசு துணைத் தலைவரின் அறிவிப்பைக் கூட ஏற்பதற்கு சிலர் தயாராக இல்லை. இந்த அளவுக்கு ஆண் உறுப்பினர்களிடமிருந்து, பெண் இடஒதுக் கீட்டிற்கு எதிர்ப்பு என்பது எந்த ஒரு தாக்கத்தையும், இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நாடாளுமன்ற அவை விவகாரங் கள், நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
மாநிலங்களவையில் வாக்குக்கு விடப் பட்ட சட் டமுன்வடிவு, ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கை மட்டும்தான் பதிவு செய்தது என்பது இன்னொரு செய்தி. இத்தகைய செய்தி எந்தவொரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு, மக்களவையில் எதிர்ப்புக் கொடுப்போம் என்ற செய்தியை எதிர்ப்பவர் கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில எதிர்கட்சிகள் விவாதம் இல்லாமல் எப்படி நிறைவேற்ற முடியும் என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதையொட்டி அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விவாதம் நடத்திவிட்டு, மக்களவைக்கு கொண்டு வருவோம் என அமைச்சர் உறுதி கூறியுள்ளார். அதன் பிறகு பல எதிர்ப்பாளர்கள் உடன்பட்டிருக்கிறார் கள். இப்போது தள்ளிவைக்கப்படும் நாடாளு மன்ற அவை, ஏப்ரல் 12ம் நாள் கூடும் என்கிறார்கள். அப்போதுதான் இந்த பெண்கள் இடஒதுக்கீடுப் பற்றிய அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் படும். அதற்குள் ஆளும் கூட்டணி, அனைத்து கட்சிகளையும் இணங்க வைத்து அமைதியான முறையில் அதை நிறைவேற வைத்தால், அதுவே பெரும்பாடு.
இந்த சூழ்நிலையில் நவம்பர் 20ம் நாள் மத்திய அமைச்சரவையின் எதிர்ப்பற்ற ஒப்புதலைப் பெற்றுக் கொண்ட, அணு உலை விபத்துகளுக்கான இழப்பீட்டை, பொதுமக்கள் மேல் சுமத்தக்கூடிய இன்னொரு சட்டமுன்வடிவு எதிர்பார்க்கப்படு கிறது. ஊடகங்களில் மற்றும் எதிர்க்கட்சி களில் எதிர்ப்பு முழக்கம் வந்தால், திங்கட்கிழமை அதைக் கொண்டு வராமல், ஆளுங்கட்சி சுதாரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடுத்த மாதம் அமெரிக்க செல்ல இருக்கும் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றிய கையோடு சென்றால் மட்டும்தான் மரியாதை என்று எழுதுகிறார்கள். யாருக்கு யாரிட மிருந்து மரியாதை என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங் களிடமிருந்து, மன்மோகன் சிங்கிற்கு கிடைக் கும் மரியாதைதான் இந்த நாட்டிற்கான பெருமையா? அமெரிக்காவிடமிருந்து 10,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளை வாங்கிக் கொள்வதாக, வாஷிங்டன்னுக்கு இந்திய அரசு வாக்குறுதி கொடுத்ததால், இத்தனை அவசரம் காட்டப்படுகிறது என்று சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறுகிறார். ரஷ்யாவுடனும், பிரான்சுடனும் அணு உலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும், அந்த நாடுகள் அமெரிக்கா கேட்பது போல, அணு உலைகளை விலைக்கு வாங்குவதற்கு முன்பே, இழப்பீட்டுத் தொகையை பொது மக்கள் பொறுப்பேற்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்க வில்லை என்பது காரத்தின் வாதம். கடந்த ஆண்டே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார உதவிச் செயலாளர் ராபர்ட் பிளேக், இதுபோன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என மத்திய வெளிவிவகாரக் குழுவிடம் கூறிவிட்டார் என்ற செய்தி, மேலும் மத்திய அரசு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இப்போது இடதுசாரி கட்சிகள் மற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவை, இந்த சட்டமுன்வடிவுக்கு எதிராகத் திரட்டி வருகின்றனர். இந்த சட்டமுன்வடிவு நாட்டினுடைய இறையாண் மையையே கேள்விக்குறியாக ஆக்கக் கூடியது. அடுத்து ஒரு சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப் படுவதற்காகத் தயாராக இருக்கிறது. அதுவும் பெண்கள் சம்பந்தப் பட்ட ஒரு சட்டத்திருத்தம்தான். கற்பழிப்பு என்ற சொல்லை, பாலியல் தாக்குதல் என்பதாக மாற்ற வேண்டும் என்று கூறக்கூடிய சட்டம் முன்வடிவு. இதையும் பெண்களுக்கு ஆதரவான ஒன்று என்ற எண்ணத்தில், லாலுவும், முலாயமும் எதிர்ப்பார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கற்பழிப்பு என்ற சொல், பல ஆண்டுகளாக இருந்து வரக்கூடியது என்றும், அதை மாற்றக் கூடாது என்றும் அவர்கள் வாதிடலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எப்படி பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன் வடிவு பொதுவான ஆதரவைப் பெற்றதோ, அதே போல இந்த சொல் மாற்றும் திருத்தமும் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நடைமுறையில் தேர்தல்க ளிலும், நிறுத்தும் வேட்பாளர்களிலும் செயல்பட்டு வருவதால், உள்ஒதுக்கீட்டிற் கான மாபெரும் கிளர்ச்சி எழவில்லை. அதுபோல கற்பு என்ற சொல்லை, இருபாலருக்கும் பொதுவென வைப்போம் என்று கூறிய பாரதியும், கற்பு என்ற சொல் பெண்களை அடிமைப்படுத்துவதற்கான சொல் என்று கூறிய பெரியாரும் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதால், இங்கே பெரும் எதிர்ப்பு எழ வாய்ப்பில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டின் பிரபல ஊடகங்கள் பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல், பாலியல் வன்புணர்ச்சி ஆகிய சொற்களைப் பயன் படுத்தி வருவதாலும், இங்கே எதிர்ப்பு க்கு அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால் கிரிமினல் புரொசீஜர் கோடு என அழைக்கப் படும் குற்றயியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது என்பதற்கான சட்டமுன்வடிவு வர இருக்கிறது. அதில் 7 ஆண்டு தண்டனைப் பெறக்கூடிய குற்றங்களுக்கான புகார்களின் மீது, ஒருவர் கைது செய்யப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற திருத்தமும், கைது செய்யப்பட்டாலும், கைது செய்யப்படா விட்டாலும் அதற்கான காரணத்தை குறிப்பிட்ட அதிகாரி விளக்க வேண்டும் என்ற திருத்தமும் முக்கியமானவை. மாலிமத் குழுவின் இந்தப்பரிந்துரை வழக்கறிஞர்கள் மத்தியில் கூட, எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டால், இதுவரை கடுமையான குற்றப்புகார்களில் கூட, தப்பித்துவிடும் பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிக்கலாகி விடும். 150 ஆண்டு வரலாறு கொண்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில், இப்படி சில மாற்றங்கள் கொண்டு வருவதே கூட, பாலினப் பார்வையில் வந்துள்ள சிறிய மாற்றம்தான்.
இன்னொரு சட்டமுன்வடிவு மத்தியமைச் சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தியக் கல்வி வளாகங்களில், அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வருவதற்கு அனுமதி கொடுப்பது என்ற ஒரு முடிவு, இப்போது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 50 கோடி ரூபாயை முன்பண மாகக் கட்டக்கூடிய, அந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவது, இந்த நாட்டின் கல்வியை எங்கே கொண்டு செல்லும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. கல்வியை வியாபாரமாக்கி தனியாருக்கு விற்றதனால், ஏற்கனவே கிளம்பியுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்விச் சூழலைக் கெடுத்து வருகின்றன. சுயநிதி கல்விச் சாலைகளைச் சார்ந்து இருக்கும் இந்த நாடு, நாட்டு முன்னேற்றத்திற்குக் கல்வியை பயன்படுத்தவிடாமல் தடுக்கின்ற நிலையில் உள்ளது. இந்நேரத்தில் அன்னியப் பல்கலைக் கழகங்கள் நாட்டிற்குள் நுழைந்தால், கல்வி நிலை என்னாகும்? இப்படி எல்லாமே இந்திய நாட்டின் இறையாண்மையை உடைக்கின்ற செயல் திட்டங்களாக வருவதை, பொது மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
சமூக முன்னேற்றத்திற்கான பாலின உரிமைகளுக்கான சட்டமுன்வடிவுகளும், அன்னிய நாட்டு நிறுவனங்களுக்குச் சொந்த நாட்டை அடகு வைக்கும் சட்டமுன் வடிவுகளும் ஒரே நேரத்தில் கொண்டு வரும் கூட்டணி ஆட்சி, இந்திய மக்கள் மீது தந்திரமாக ஒரு தாக்குதலை நடத்துகிறதா என்று கேள்விக் கேட்கத் தோன்றுகிறது.

Tuesday, March 16, 2010

இந்திய வெளிவிவகாரக் கொள்கை ஒரு மாபெரும் தோல்வியா?

இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்ந்து தோல்வி யடைந்து வருவதாக ஒரு கருத்து டெல்லியில் பரவி வருகிறது. குறிப் பாக பாகிஸ்தான் விஷயத்திலும், ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தலைமையமைச்சர் அலுவலகம் எடுக்கின்ற நிலைப்பாடுகள், வெற்றி பெறுவது இல்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையாக இருக்கிறது.
சமீப காலங்களில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கின் சில கருத்துக்களும், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சில அறிக்கைகளும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில அறிவிப்புகளும் செய்து வந்தாலும், அவை சம்மந்தப்பட்ட வெளிநாடுகளில் எடுபட வில்லை. குறிப்பாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இந்த இந்திய தலைவர்களின் முயற்சிகள் எல்லாமே தோற்கடிக்கப்பட்டு வருகின்றன என்பதாக பட்டியல் போடப்படுகிறது. டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல் கலைக்கழகத்திலும், இந்திய வெளி விவகாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்கின்ற ஆய்வுக் குழுக்களிலும் இதுபோன்ற ஒரு விவாதம் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறைகள் அல்லது விருப்பங்கள், தொலைநோக்கு பார்வையில் பலன்களை தராது என்ற நிலை தெரிகிறது. பாகிஸ்தான் விஷ யத்திலும், இந்திய அரசின் அணுகு முறைகள் சிறிதளவு கூட வெற்றிப் பெற்றதாக தெரியவில்லை. குறிப்பாக ஆப்கானிஸ் தானில் நடந்து வருகின்ற அரசியல் நிகழ்வுகளில், இந்திய அரசின் பாத்திரம் என்பது பார்வையாளர் நிலைக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புனரமைப்பு பணிகளை, அதிக ஈடுபாட்டுடன் செய்த இந்தியாவை, ஆப்கான் நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுவதில் அமெரிக்கா ஓரங்கட்டிவிட்டது என்பதுதான் அந்த குற்றச்சாட்டின் முக்கியமான அம்சம். அதே சமயம் பாகிஸ்தான் அரசின் உள்நுழைவை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் தவிர்க்கவிரும்பிய இந்திய அரசின் முயற்சிகள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட்டில் தோல்வியைத் தழுவியுள்ளன. அமெரிக்காவினுடைய தலைமையில் அல்கொய்தாவை எதிர்த்தும், தாலிபன்களை எதிர்த்தும், ஆப்கானிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் போரில், உளப்பூர்வமாக ஆதரவு கொடுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் அரசின் கரங்கள் ஆப்கானிற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் துணையோடு, ஆப்கான் நாட்டில் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் அடக்குவதற்கு, அமெரிக்கா திட்டமிட்டு செயல்படுவதால், அதில் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வை தொலைந்து போனது. ஆப்கான் நாட்டில் இருக்கின்ற பெருவாரியான ஆப்கான் மக்கள், அல்கொய்தாவையும், தாலிபன்களையும், வெறுக்கிறார்கள் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. ஆனால் அமெரிக்க ராணு வமும், நேட்டோ கூட்டமைப்பின் ராணுவமும் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, போரைத் தொடர்ந்து நடத்தியும் அதன் மூலம் ராணுவ ரீதியான வெற்றியை அடைந்தார்களா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. கண்டகரில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதல்கள் சமீபத்தில் கூட, அல்கொய்தாவினுடைய மற்றும் தாலிபன்களுடைய தீவிர செயல்பாடுகளை நிரூபித்த வண்ணமாய் இருக்கிறது.
இந்திய அரசைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அத்தகைய போராளிக்குழுக்களுடன், பாகிஸ்தான் அரசு இணைந்து கொண்டால் அதுவே காஷ்மீர் மாநிலத்திற்குள் போராளிகளின் தாக்குதல் களுக்குப் பின்னணியாக அமைந்து விடும் என்பதுதான் முதல் கவலை. அதனால்தான் அமெரிக்க ராணுவமும், நேட்டோ கூட்டுப்படை ராணுவமும் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறுவதை இந்திய அரசு ரசிக்கவில்லை. அது இந்திய தலைமை அமைச்சரின் ஆலோசனையில் வெளிப்பட்டது. அப்போதும் ஆப்கான் பிரச்சினையில் பாகிஸ்தானை அதிகமாக சார்ந்து இருக்கும் போக்கைத்தான் அமெரிக்காவின் புதிய ஆட்சியாளர்களும் எடுத்துள்ளார்கள். இதுவே இந்திய அரசு ராணுவ ரீதியாக எந்த வீர சாகசத்தையும், ஆப்கானுக்குள் செய்வதைத் தடுக்கிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிலிருந்து திரும்பச் சென்ற பிறகு, இந்திய அரசு பாகிஸ்தான் அரசை காரணம் கூறி, ஆப்கானிற்குள் தலையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணலாம் என்றும் அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.
இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்கள் கடந்த 60 ஆண்டுகளாக முயற்சித்தும் கூட, பாகிஸ்தான் அமெரிக்கா உறவு நெருக்கத்தை குறைப்பதற்கு அரசியல் அரங்கிலும், ராணுவ அரங்கிலும், பொருளாதார மட்டத்திலும் கூட தோற்றுவிட்டார்கள். காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறையை எப்போதுமே ஏற்காத பாகிஸ்தான் அரசின் நிலைப்பாட்டை, அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் எதிர்ப்பதில்லை என்பது கூட, இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற தோல்விதான்.
இந்திய அரசு இன்றைய நிலையில் தனது தேவைக்கு அதிகமாக, அமெரிக்க
சார்பாக நிர்ப்பதனால் மட்டுமே இத்தகைய தோல்விகளைத் தாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீன அரசின் சந்தேகப்பார்வையும், தெற்காசிய களத்தில் இந்தியாவிற்கு போட்டியாகவோ, அல்லது எதிர்ப்பா கவோ சீனாவை நிறுத்துகின்ற செயல் பாடுகளும் நடைபெறுகின்றன. 1962ம் ஆண்டின் இந்திய சீன எல்லை மோதலை ஏற்படுத்தியதற்கு காரணமாக இருந்தது அன்றைய அமெரிக்காதான் என சீன அரசு உறுதியாக நம்புகிறது. மீண்டும் உலக அரங்கில் இன்று பொருளாதார ரீதியாக பலவீனப்பட்ட நிலையில் இருக்கும் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அறுதியிடல் பற்றி அச்சமடைந்துள்ள அமெரிக்கா, சீன இந்திய நட்பை உடைக்கவும், அதே சமயம் சீனாவுக்கு எதிராக இந்திய அரசைப் பயன்படுத்தவும் தயங்காது என்பது சீன அரசின் அனுபவரீதியான மதிப்பீடு. ஆகவே அமெரிக்காவைச் சார்ந்து இந்திய அரசு எடுக்கின்ற முடிவுகளை எல்லாம், தங்களுக்கு எதிராகச் செல்வதற்கே என்று சீன அரசு கருத வாய்ப்பு இருக்கிறது. அதுவே சீன அரசை, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக செயல்படும்படி உந்தித் தள்ளுகிறது. அதனால் தான் நேற்று வரை சீனா தலையிடாமல் இருந்த, காஷ்மீர் விவகாரத்திலும் நேரடியாகத் தலையிடத் துவங்கியுள்ளது. அதற்கு ஒரு சான்றாக காஷ்மீர் பயணிகளுக்கு தனி விசாத் தாள் கொடுப்பதற்கு சீன அரசு முன் வந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அமெரிக்கச் சார்பு இன்றைய காலத்தின் கட்டாயம் கிடையாது. அப்படி இருந்தும் கூட, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம், இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம், அமெரிக்க கடற்படையுடன் இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சி என்பதாக தெற்காசிய வட்டாரத்தில் தொடர்ந்து, தற்போதைய இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் அண்டை நாடுகளில் வலுவாக இருக்கும் சீனாவை எதிராக நிறுத்தி விடுகிறது. அத்தகைய அமெரிக்க ஆதரவு முயற் சிகளினால், இந்தியாவிற்கு எந்த வகை யிலும் அமெரிக்க அரசிடமிருந்து பலன்கள் கிடைத்திடவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் சேவை செய்தற்காக இந்திய வெளிவிவகாரக் கொள்கை இருக்க வேண்டுமே தவிர, அரசு அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற சிலரு டைய விருப்பங் களுக்காகவோ, நலன்களுக்காகவோ இருக்கக்கூடாது என்று சுபாஷ் கபிலா போன்ற ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். ஆப்கானில் அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதரவு கொடுக்கப்போய், தேவையற்று அல்கொய்தாவின் எதிர்ப்பு இலக்காகவும் இந்தியாவை ஆக்கிக்கொள்வது
சாதுர்யமான நிலைப்பாடு அல்ல. மேற்கண்ட இந்திய அரசின் தவறான கொள்கைகள், பொதுமக்கள் மத்தியி லும் பகிரங்கமான விவாதத்திற்கு உள்ளாக்கப் படவேண்டும்.