Thursday, December 31, 2009

கேரள மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க சதியா?

நேற்று எர்ணாகுளம் என்று அழைக்கப்படுகின்ற கொச்சின் நகரில், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் பினராய் விஜயன், தன்மீது சுமத்தப்பட்ட கடுமையான ஊழல் வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான பிணையை பெற்றுள்ளார். அவருடன் நீதிமன்ற வளாகத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் செம்படைத் தொண்டர்கள், பினராய் விஜயனுக்கு ஆதரவாக கோபாவேசமாக திரண்டு இருந்தார்கள். சி.பி.ஐ.யால் போடப்பட்ட ஊழல் வழக்கில், விஜயன் நேற்று பிணை பெற்றார். ஆனாலும் கூட அந்த வழக்கு பினராய் விஜயனுடைய கட்சி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி விட்டது. 1997ம் ஆண்டு இடது முன்னணி ஆட்சி அதிகாரத்திலிருந்த போது, பினராய் விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கேரளாவிலிருக்கும் மூன்று மின் உற்பத்தி திட்டங்களுக்காக, கனடா நாட்டிலுள்ள ஒரு நிறுவனமான எஸ்.என்.சி. லாவலின் உடன் ஒப்பந்தம் பேசப்பட்டது. ஒப்பந்தத்தில் பேரம் நடந்ததாகவும், பேரத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் ரூ.374 கோடி லஞ்சமாக வாங்கப்பட்டதாகவும், அதில் பினராய் விஜயனுக்கு பங்கு உண்டு என்பதாகவும் ஒரு வழக்கு சி.பி.ஐ.யால் போடப்பட்டது. இதற்காக சிறப்பு பிரிவு ஒன்றை சி.பி.ஐ. நிறுவியிருந்தது. இந்த வழக்கில் கேரள மாநில மின்வாரியத்தின் 6 முன்னாள் அதிகாரிகளும், கனடா நாட்டு லாவலின் நிறுவன பொறுப்பாளர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விவகாரமாக காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே, விஜயன் மீதான புகார்களையும், அவதூறுகளையும் அள்ளித்தெளித்து வந்தது. கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் உட்கட்சி சண்டையில், அங்கே இருக்கும் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தத்திற்கும், மாநில கட்சி செயலாளர் பினராய் விஜயனுக்கும் ஒரு பிணக்கு தொடர்ந்து இருந்தது. அந்த பிணக்கின் காரணமாக, திடீரென அச்சுதானந்தன், விஜயன் மீதான வழக்கை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஊழல் எதிர்ப்பில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியது பிரச்சனையை மேலும் பெரிதாக்கியது.மார்க்சிஸ்ட் கட்சி இடது முன்னணிக்கு தலைமை எடுத்து, சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் போதே, இந்த இரண்டு தலைவர்களுக்கும் மத்தியிலுள்ள பிரச்சனை பூதாகர வடிவம் எடுக்கத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில் வழக்கமாக காங்கிரஸ் கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால், அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை மக்கள் இடது முன்னணி கரங்களில் கொடுப்பார்கள். இப்படி ஒரு பழக்கம் கேரள வாக்காளர்களுக்கு இருந்து வரும் சூழ்நிலையில், சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, இடது முன்னணி கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. அப்படி ஆட்சிக்கு வரும்போது, சி.பி.எம். கட்சியை சேர்ந்தவர்தான் முதல்வராக வரமுடியும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. வயதில் மூத்தவரான மற்றும் கட்சியின் பாரம்பரிய தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன் தேர்தலில் நிற்பதற்கு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால், வெற்றி பெற்று முதலமைச்சராக எளிதாக அங்கீகரிக்கப்படுவார் என்று, அவருக்கு எதிர்முகாமின் தலைவராக இருந்த பினராய் விஜயன் எண்ணினார். மாநிலத்தின் கட்சியை தனது கடின உழைப்பின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி எழுப்பி, பினராய் விஜயன் தலைமை தாங்கி வந்தார். மாநில கட்சித்தலைவர்களில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களும் இருந்து வந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுத்தேர்தலில் நிற்பதற்கே, வி.எஸ்.அச்சுதானந்ததிற்கு, பினராய் விஜயன் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதாவது அச்சுதானந்தனை ஒரு வேட்பாளராக அறிவிக்கவில்லை. இந்த செயலை எதிர்த்து அச்சுதனாந்தன், அகில இந்திய கட்சி தலைமையிடம் முறையிட்டார். மாநிலத்தின் கீழே உள்ள பல்வேறு மாவட்ட கிளைகளில் இருந்த செந்தொண்டர்களும், அகில இந்திய தலைமையிடம் முறையிட்டார்கள். உடனடியாக சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு, அச்சுதானந்தத்திற்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கும்படி பணித்தது. வேறு வழியில்லாமல் பினராய் விஜயனும் ஒப்புக் கொண்டார். அச்சுதானந்தன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். கட்சி தலைமை தலையீட்டில், மீண்டும் பினராய் விஜயனின் விருப்பத்திற்கு எதிராக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மீண்டும் இருவருக்கும் இடையிலிருந்த பனிப்போர் தீவிரமானது. மலையோரங்களில் பெரும் மூலதன நிறுவனங்களால் நிலங்கள் அதிகமான அளவில் ஆக்கரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை எல்லாம் மீட்டெடுக்க, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கு, முதல்வர் அச்சுதானந்தன் திட்டமிட்டார். அத்தகைய பணக்கார நிறுவனங்களின் தொடர்பிலிருந்த பினராய் விஜயன் அதை எதிர்த்தார். அச்சுதானந்தன் தான் நினைப்பதை பல இடங்களில் சாதித்துக் கொண்டார். ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்கள் மீட்கப்பட்டன. பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் அச்சுதானந்தன் நேர்மையானவர் என்பதான எண்ணம் உருவானது. பினராய் விஜயனை, நடிகர் மம்முட்டியுடன் இணைத்து, கைராளி தொலைக்காட்சி நிர்வாகத்தை கைப்பற்றியதாக தொண்டர்கள் மத்தியில் முணுமுணுப்பு கூடத் தொடங்கியது. அடுத்ததாக மேலே சொல்லப்பட்ட லாவலின் வழக்கு தொடுக்கப்பட்டது. அது காங்கிரஸ் கட்சி செய்கின்ற சதி என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. அகில இந்திய தலைமையும், பினராய் விஜயனுக்கு ஆதரவாக, காங்கிரஸ் சதி என்பதாகவே அறிவித்தது. ஆனால் கேரள முதல்வர் மட்டும், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறிவந்தார். முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கை பதிவு செய்வதற்கு இந்நாள் அமைச்சரவையின் ஒப்புதலுடன், மாநில ஆளுநரிடம் சி.பி.ஐ. அனுமதி பெற வேண்டியது இருந்தது. இத்தகைய அனுமதிக்கு பச்சைக் கொடி காட்டினார் அச்சுதானந்தன். அதன் விளைவாக ஜுன் மாதத்தில் லாவலின் வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த பிரச்சனை மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு சென்றது. இதற்கிடையே கேரள சி.பி.எம்.மிற்குள் கட்சி தேர்தல் வந்தது. அதில் அச்சுதானந்தன் தொடர்பிலிருந்த ஆலப்புழை, பாலக்காடு, கோழிக்கோடு, ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும், முதல்வர் வி.எஸ்.சின் ஆதரவாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற அனைத்து மாவட்டங்களும், பினராய் விஜயன் பிடிக்குள் சென்றது. இந்த மோதலிலும் விஜயன் வெற்றி பெற்றார். நிறைவாக திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமான ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணியை விஜயன் நடத்திக் காட்டினார். அந்த மேடைக்கு வரமறுத்த வி.எஸ்.ஐ, அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் பிரகாஷ் கரத் வற்புறுத்தி, கூட்டணி கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தலைவர் மூலம், மேடைக்கு அழைத்து வரப்பட்டார். இப்படியாக இருவருக்கும் மத்தியில் உள்ள மோதல் தொடர்ந்து பகிரங்கமாகி வருகிறது.இதே போல அரசியல் அரங்கில் சி.பி.எம். , மக்கள் ஜனநாயக கட்சி என்ற அப்துல் நாசர் மதானியின் அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு காரணமாக இருப்பவர் பினராய் விஜயன். அவர்களது வாக்கு வங்கியை உடைத்தெறிய விரும்பிய காங்கிரஸ் தலைமை, மதானி மீதும் தற்போது மதானி மனைவி சூபியா மீதும் குற்றம் சுமத்தி, தீவிரவாத முத்திரையை வழக்குகளின் மூலம் பரப்பி வருகிறது. இதற்கு துணை போவது போல, முதல்வர் வி.எஸ்.ம், மதானியை தீவிரவாதி என்றும், அவரது கட்சியுடன் சி.பி.எம்.மிற்கு இனி தொடர்பு இருக்காது என்றும் அறிவித்து வருகிறார். மாதனியும், விஜயனும் ஒரே மேடையில் தோன்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான், சி.பி.எம். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோற்றதாக அச்சுதானந்தன் பரப்பி வருகிறார். இதுவே சி.பி.எம். கட்சியின் அடித்தளமான பெரும்பான்மை மதம் சார்ந்த மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே இந்த குழப்பங்களுக்கு காரணமான அச்சுதானந்தத்தை, அரசியல் தலைமைக்குழுவிலிருந்து சி.பி.எம். விலக்கி விட்டது. இப்போது அவரை முதல்வர் பொறுப்பிலிருந்து விலக்க முடியாமல் கட்சித் தலைமை திணறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய சூழலில், வழக்குகள், சி.பி.ஐ. போன்றவற்றின் மூலமே மேலிருந்து அரசியல் செய்து, சி.பி.எம். கட்சியை இரண்டாக உடைத்து, நிரந்தரமாக இடதுகளின் கேரள அடித்தளத்தை நொறுக்கி விடலாம் என்ற கணக்கில் இருக்கிறது. இது எங்கு போய் சேரும் என்பதே இப்போது கேள்வி.