Wednesday, December 30, 2009

இலங்கையில் பூசா முகாமில் அடைக்கப்பட்ட 1000 தமிழர்கள் பட்டியல்

1. வெள்ளை வாகன கடத்தலில் பாதிக்கப்பட்ட 4000 தமிழர், முஸ்லீம் பற்றிய ரகசியம் அம்பலம் .

2. கோத்தபாய ராஜபக்சேயின் சதி வெளிப்பட்டது .

3. அதிபர் தேர்தல் களேபரத்தில் உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.


இலங்கைத் தீவில் இனவாத போரை நடத்திய அரசு, அதற்கிடையே அப்பாவிமக்கள் மீது வெள்ளை வாகன கடத்தல் மற்றும் படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தது, உலகறிந்த செய்தி. அப்படி கடத்தப்பட்டவர்களது எண்ணிக்கை 4000 வரை தொட்டது. 4ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு, மலையகம், புத்தளம், கிழக்கு மாவட்டங்கள், வவுனியா, யாழ்பாணம் ஆகியவற்றிலிருந்து கடத்தப்பட்டிருந்த, தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் 1000 பேர், பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி நேற்று கசிந்தது. பூசா முகாம் என்பது தென்னிலங்கையில், சிங்களப் பகுதியில் இருக்கிறது. இதில் 25 பிளாக்குகள் இருக்கின்றன. அதில் முதல் 5 பிளாக்குகளுக்குள் இருக்கின்ற தமிழர்கள் எண்ணிக்கைதான் 1000. இந்த முகாமிலிருந்து தப்பி வெளியே வந்த இளைஞர் ஒருவர் கொடுத்த பட்டியலில் 1000 பேருடைய பெயர்கள் இருக்கின்றன. வெளிவந்துவிட்ட இந்த செய்தியை உறுதிப்படுத்திய அரசுதரப்பு, தனது மனித உரிமை துறையின் மூலம், 1000 பேருடைய குடும்பங்களுக்கும் செய்தி அனுப்பி, அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளது. இது தேர்தல் நேர விளையாட்டு. அதேசமயம் பூசா முகாமில் உள்ளே உள்ள 15 பிளாக்குகளில், மீதம் 3000 கடத்தப்பட்ட, அப்பாவி தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் இப்போது தெரிகிறது

சாண்ட்விச்’ ஆக சிக்கிக்கொண்ட ஆதிவாசிகளும், ஊரக ஏழைகளும்!

டெல்லியில் மாணவர்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள். சத்திஸ்கர் மாநிலம் உட்பட மத்திய இந்தியாவில் நடைபெறும் ரத்தக்களரிகள், டெல்லி மாணவர்களின் உதிரத்தை கொதிக்க வைத்து, உணர்வுகளை எழுப்பியிருக்கிறது. டெல்லியிலிருந்து செல்கின்ற ஊடகயியலாளர்கள், தாங்கள் நேரில் பார்த்து வந்த நிகழ்வுகளை, தலைநகர் டெல்லியில் படம்பிடித்துக் காட்டுகிறார்கள். இவர்களெல்லாம் டெல்லி மாணவர் சமூகத்திலிருந்து வெளியே வந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கண்ட காட்சிகளை, டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பலகலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் உடனடியாக கிரகித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இடையிலே சிக்கிக்கொண்டவர்களாக, அவர்களால் வருணிக்கப்படும் ஆதிவாசிகளும், கிராமப்புற ஏழைகளும் வருணிக்கப்படுகிறார்கள். சத்திஸ்கர் மாநிலத்தில் சல்வா ஜுடும் என்ற கூலிப்படையும், காவல்துறையும் பச்சை வேட்டை நடவடிக்கையும் ஒருபுறம் ஆதிவாசிகளையும் கிராமப்புற ஏழைகளையும் கொடுமைப்படுத்துகிறது என்று சொன்னால், மறுபுறம் ராணுவ மயமாக்கப்பட்ட இந்திய அரசு இயந்திரம், பயங்கரவாதிகளாக வருணிக்கப்பட்ட ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இந்த சண்டைக்கு இடையே சிக்கிக்கொண்ட சாண்ட்விச்களாக அந்த ஏழை மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இத்தகைய விவரிப்புத்தான் இப்போது டெல்லி அறிவுஜீவிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஒருபுறம் துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற கொள்கையை தாங்கி வருகின்ற மாவோயிஸ்டுகள். இன்னொருபுறம் ஆதிவாசிகள் அனுபவித்து வரும் பாரம்பரிய நிலங்களையும், இயற்கை மூலாதாரங்களையும், அவர்களிடமிருந்து பறித்தெடுத்து, வெளிநாட்டு, உள்நாட்டு கார்பரேட்டுகளுக்கு, கொடுக்க எத்தனிக்கும் இந்தியா அரசு. இந்த இரண்டிற்கும் மத்தியில் தான் சிக்கியிருக்கிறார்கள் ஏழை மக்கள். இந்திய அரசியல் சட்டத்தில் மத்திய இந்தியா பற்றி, நாட்டிற்கே பாதுகாவல் தளமாக வருணிக்கப்பட்டிருக்கும் பூமிதான், இன்று சாண்ட்விச் தத்துவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தத்துவத்தை பேசுபவர்கள், இது வன்முறைக்கும், அகிம்சைக்கும் மத்தியிலான பார்வை வேறுபாடு என்பதாக மட்டும் எண்ணுகிறார்கள். விவாதத்திற்கு அதிகமாக வரவிரும்பாமல், வன்முறை வேண்டுமா, அல்லது அகிம்சை வேண்டுமா என்பதாக அவர்கள் சிந்திக்கிறார்கள். இந்த தத்துவம் பேசுபவர்கள் கல்விக் கூடங்களிலும், ஊடகங்களிலும் நிர்வாக நிறுவனங்களிலும் முக்கியமான பொறுப்புகளிலிருக்கிறார்கள். சல்வா ஜுடும் என்ற அரசாங்கம் தயாரித்த கூலிப்படையையும், அரசப்படைகள் செயல்படும் பச்சை வேட்டையையும் இவர்கள் எதிர்த்தாலும், அவர்களது புரிதல் மத்திய இந்தியாவை பிளவுபடுத்திப் பார்க்கிறது. சாண்ட்விச் தத்துவத்திற்கும், ஜனநாயக மதிப்பீடுகளுக்கும் மத்தியிலேயிருக்கின்ற விவாதமாக அவை மாறியுள்ளன. மத்திய இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனநாயகம் என்பது ஒவ்வொரு ஆண், பெண், குழந்தை, நகர்ப்புற அல்லது கிராமப்புற ஏழைகள், ஆகியோரிடையேயும், எந்த சாதியாயிருந்தாலும், தேசிய இனமாகயிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றும் புரியப்பட வேண்டும். தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையை ஜனநாயகம் நம்புகிறது. அதனால் இந்த சாண்ட்விச் தத்துவம் என்ற இடையிலே சிக்கியிருக்கும் தத்துவம் அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய இந்தியாவில் வசிக்கின்ற பெருவாரியான மக்கள், தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பொருளாதார கொள்கைகளினால், ஆதிவாசிகளும், கிராமப்புற ஏழைகளும் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். சாண்ட்விச் தத்துவக்காரர்கள் விளக்கப்படி, அப்படிப்பட்ட ஏழைகளை மாவோயிஸ்டுகள் தங்களது இலக்கிற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான். ஆனாலும் கூட அதில் ஒருபகுதி ஆதிவாசிகளும், கிராமப்புற ஏழைகளும், மாவோயிஸ்டுகளின் பாதையில் செல்வதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். தங்கள் நலனுக்கானதை தேர்வு செய்யவும், தங்கள் நலனுக்காக போராடுபவர்களை அடையாளம் காணவும், அந்த ஆதிவாசிகளுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் அறிவு போதாது என்பது இந்த அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலிருந்தும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்தும், ஐ.ஐ.டி.யிலிருந்தும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்தும், சிவில் சமூகம், ஆகிய பிரிவுகளில் உள்ளவர்கள் பேசுகின்ற அறிவுகூர்ந்த மொழியில் தங்களது அரசியல் வாய்ப்புகளை, இந்த ஆதிவாசிகளும், ஏழை மக்களும் எடுத்து மொழிவதில்லை. அதனால் அவர்கள் சுயநிர்ணய உரிமையில்லாத, அமைதியான பலியாடுகள் என்ற உண்மை அறிவுஜீவிகளுக்கு உறைப்பதில்லை. அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் மத்தியிலே வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட பலியாடுகள் என்று இவர்களை விவரிப்பதன் மூலம், மத்திய இந்தியாவில் அவர்கள் சமத்துவமுள்ள மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும். ஆதிவாசி மக்களையும், கிராமப்புற ஏழைகளையும் குரலற்ற பலியாடுகள் என்பதாக சித்தரிப்பது புதிதல்ல. இந்திய சுதந்திரக் காலத்திலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகப்போருக்குப் பிறகு ஏழ்மை என்பதை தீர்ப்பதற்காக, வளர்ச்சி என்றச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மிகவும் கொடூரமான ஒரு கருத்துக்கோப்பு. அத்தகைய கருத்துக்கோப்பை கண்ணுக்குத் தெரியாத சந்தை என்ற கருத்துக்கோப்பு, விரைந்து முழுங்கிவிட்டது. அதனாலேயே அது சிலரை வசதியுள்ளவர்களாகவும், பெரும்பான்மையை இல்லாதவர்களாகவும் ஆக்கிவிட்டது. ஏழைகள் என்பவர்கள், விளிம்பு நிலைமக்கள் என்பதாக விவரிக்கப்பட தொடங்கினார்கள். மேற்கண்ட விவாதங்களை தன்னுடைய கட்டுரையில் ராதா டிசௌசா எழுதுகிறார். சத்திஸ்கர் மாநிலத்தின் நிலைமை புதியதொரு சூழலை எட்டிக்கொண்டிருக்கிறது. அரசப்படைகளாலும், அவர்களால் உருவாக்கப்பட்ட கூலிப்படையான சல்வா ஜுடுமாலும் தாக்கப்படும், அச்சுறுத்தப்படும், கடத்தப்படும், கொலைசெய்யப்படும் ஆதிவாசி மக்களுக்காகவும், கிராமப்புற ஏழைகளுக்காவும், ஜனநாயக குரல் எழுப்பிவரும் மனித உரிமை ஆர்வலர்களும், காந்தியவாதிகளும் கூட, சமீபத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தங்களுடைய குரலை எழுப்புவதற்காக அவர்கள் ஏற்பாடு செய்யும் குறைந்தபட்ச பரப்புரை பயணங்கள் கூட தடுக்கப்படுகின்றன. அப்படித்தான் ஹிமன்ஷû குமார் என்ற காந்தியவாதி தொடங்கிய பாதயாத்திரையும் தடுக்கப்பட்டது. தெற்கு சத்திஸ்கர் மாநிலத்தில், தண்டவாடா பகுதியில், வனவாசி சேத்னா ஆசிரமம் என்ற காந்தியவாதிகளின் குடிலை, குடியிருப்பு இடமாகக் கொண்டு, இந்த ஹிமன்ஷû குமார் செயல்பட்டு வருகிறார். ஆதிவாசிகள் மீது நடத்தப்படும் தொடர் வன்கொடுமைகளை எதிர்த்து இவர், 900 மக்கள் கையெழுத்திட்ட மனுவுடன், ஒரு ஜனநாயக ரீதியான அகிம்சை வழி பாதயாத்திரையை மேற்கொண்ட போதுதான் நிர்வாகம் அவரைத் தடுத்தது. அதனால் டிசம்பர் 26ம் தேதியிலிருந்து அவர் அதே இடத்தில் பட்டினிப் போராட்டத்தை, சாகும்வரை என அறிவித்து தொடங்கியுள்ளார். அந்த வட்டாரத்தில் ஆதிவாசி மக்கள் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த காந்தியவாதி செயல்பட்டு வருகிறார். பட்டினிப் போராட்டத்திற்கான காரணத்தைக் கூறுகின்ற ஹிமன்ஷû, பல லட்சம் ஆதிவாசி மக்கள் கோரமான வறுமையிலும், பட்டினியிலும் வாழ்கின்ற ஒரு நாட்டில், பட்டினி கிடப்பதும் கூட, ஒரு போராட்ட வடிவம் தான் என்று கூறுகிறார். அவர்களுடைய கஷ்டங்களுடன் நானும் கலந்து கொள்கிறேன் என்று அவர் அறிவித்துள்ளார். அவருக்கு தோழமை காட்ட அதே நாளில் மும்பையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. டெல்லியில் ஒரு மெழுகுவர்த்திப் பேரணி நடந்தது. உலகெங்கிலும் ஆதரவுக் குரல் எழும்பியுள்ளது. சென்னையிலும், 2010ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி தோழமை குரல்கள் எதிரொலிக்கயிருக்கின்றன.17.10.2008ம் ஆண்டின் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெயர்ந்த கிராமத்தவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு கொடுக்கக்கோரியும், கோபா குஞ்சம் மற்றும் சுக்நாத் போன்ற தொண்டர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களை காவலில் அடித்துதைத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட புகார் கொடுக்கும் ஆதிவாசிகளுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகைளை முன்வைத்து இத்தகைய ஜனநாயக குரல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழகத்தின் மனசாட்சியும் இதில் இணைந்து கொள்ளுமா என்பதே கேள்வி.