Tuesday, December 29, 2009

இலங்கை அதிபர் தேர்தலை தவிர்க்கக்கூடாதா?

இலங்கைத் தீவில் அரச அதிபருக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றைய அதிபரான மகிந்த ராஜபக்சே ஒரு வேட்பாளர். அவரை எதிர்த்து சிங்கள எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் இருக்கின்ற இரண்டு வேட்பாளரையும், ஈழத்தமிழருக்கு எதிரான போருக்கு காரணமானவர்கள் என்பதாக கூறிக்கொண்டு, போர் எதிர்ப்பாளர்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்ற பரப்புரையை செய்து வரக்கூடிய பிற வேட்பாளர்களில் முக்கியமானவர்கள், இடது முன்னணியைச் சேர்ந்த டாக்டர் விக்கிரம பாகு கருணா ரத்னேயும், இந்நாள் எம்.பி. சிவாஜி லிங்கமும், இன்னொரு இடதுசாரி தலைவர் ஜெயசூர்யாவும் வருகிறார்கள். இவர்களில் முதல் இருவர் இணைந்து பிரச்சாரத்தில் வேறு ஈடுபட்டு வருகிறார்கள். மகிந்தாவை எதிர்க்கக்கூடிய பொன்சேகா பல்வேறு தளங்களில், வாக்கு சேகரிக்க முயன்று வருகிறார். அதில் ஒன்று ஈழத்தமிழர்களில் வாக்குகளை வென்றெடுப்பது. அதற்காக போரில் நடந்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துகின்ற வேலைகளை அவர் தொடங்கி விட்டார். அதன் மூலம் அவருக்கு செல்வாக்கும் கூடி வருகிறது. தென்னிலங்கையில் இருக்கின்ற மலையகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும், கொழும்பு வாழ் தமிழர் மத்தியிலும், மகிந்தா அரசாங்கத்திற்கு செல்வாக்கு குறைந்து வருவது கண்கூடு. உதாரணமாக மகிந்தா அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற சிலோன் தொழிலாளர் காங்கிரசின் தலைவரான ஆறுமுகத் தொண்டைமான் கட்சியும், இன்னொரு அமைச்சரான மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருக்கும் சந்திரசேகரன் கட்சியும், சமீபத்திய மாநில கவுன்சில்களின் தேர்தல்களில் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றன. ஆனால் அதே மாநிலக் கவுன்சில்களின் தேர்தல்களில், கொழும்பு எம்.பி. மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி, வாக்குகளை அதிகமான அளவில் பெற்றது. இந்தக் கட்சி இலங்கையின் எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் இருக்கிறது. மேற்கண்ட வாக்கு எண்ணிக்கைகளை கணக்கெடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியதே, அதிபர் ராஜபக்சேதான். ஏனென்றால் எல்லா மாநில கவுன்சில்களுக்கும், தேர்தல்களை நடத்தி, ஒவ்வொன்றிலும் தனது கட்சி அல்லது தனது கட்சியின் கூட்டணி அதிகமான வாக்குகளை பெற்றதாக பெருமை அடித்துக் கொண்டு, அதனால் மட்டுமே தான் நாடுதழுவிய பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான ஆதரவு தளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துக் கொண்டிருந்த காரணத்தினால், இத்தகைய கணக்குப்பார்த்தல் தேவைப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கான முக்கிய இரண்டு வேட்பாளர்களில், பொன்சேகாவிற்கு ஆதரவு கூடிக்கொண்டிருப்பதாக, மகிந்தாவின் ஆதரவு ஏடுகளே எழுதத்தொடங்கிவிட்டன. பயங்கர வாதத்தை எதிர்த்து போர் நடத்த வேண்டும் .அந்தப் போரில் வெல்ல வேண்டும் என்று கருதுகின்ற சிங்கள மக்கள், அதற்காக வாக்களிக்க விரும்பினால் மகிந்தாவை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் களத்தில் பொன்சேகாவை நிறுத்தி, அதன்மூலம் தான் மகிந்தா அந்தப் போரில் வென்றதாக, மார்தட்டிக் கொள்கிறார். அதனால் சிங்கள மக்களை பொறுத்தவரை, போர் வெற்றிக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் இருவரையுமே பார்க்கிறார்கள். அதனால் அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக, ஒருவருக்கு வாக்களிப்பார்கள் என்று யாரும் கூறமுடியாது. இதிலும் கூட மகிந்தா தனது ஒரே நம்பிக்கை வாக்கான, போர் ஆதரவு வாக்குகளை பெறுகின்ற உத்தரவாதத்தை இழந்து நிற்கின்றார். வெள்ளை வாகன கடத்தல்களும், அதையொட்டிய படுகொலைகளும், கொழும்பு நகரத்தையும், ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரையும், நேரடியாக பாதித்து வரும் நிகழ்வுகள். தங்கள் குடும்பத்திலோ, தங்களுக்கு வேண்டிய குடும்பத்திலோ அல்லது தங்களுக்கு தெரிந்த குடும்பத்திலோ ஒருவர் வெள்ளை வாகனத்தால் கடத்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி, அந்த மக்களை பெரும் பாதிப்புக் குள்ளாக்கியிருக்கிறது. வாய்திறந்து கூறமுடியா விட்டாலும், ஊரறிந்த உண்மையாக கோத்தபாய ராஜபக்சேதான் அந்த வெள்ளை வாகன கடத்தல்களுக்கு, பின்னணியில் இருந்து செயல்படுபவர் அல்லது செயல்பட்டவர் என்பதாக அவர்கள் எண்ணிப்பார்க்கிறார்கள். இதுவும் கூட மகிந்தாவிற்கு எதிராக வாக்குகளை தள்ளிவிடக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. 4,000 பேர்கள் வரை வெள்ளைவாகன கடத்தலால் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டி ருக்கிறார்கள் என்ற செய்தி மனிதாபிமானமுள்ள யாரையும் அசைத்துப்பார்க்கிறது. அதே போல வெள்ளைக் கொடிகளுடன் வன்னிப் போரில் இறுதிக்கட்டத்தில், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிப்படைத் தலைவர்கள் பலரையும் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை, கோத்தபாய ராஜபக்சே அனுப்பினார் என்று பொன்சேகா வெளியிட்ட செய்தி, அங்கே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பெயரில், பொன்சேகா தனது கூற்றை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், அவரை ஆதரித்து பரப்புரை செய்யும் பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே அந்த பிரச்சனையை முக்கியமாக பரப்பி வருகிறார். அதனால் அது மக்களுடைய கவனத்திலிருந்து பிறழமுடியாது. சரணடைந்த எந்தப் போராளியையும் சுட்டுக் கொல்வதை, சிங்கள மக்களும் கூட அங்கீகரிக்கமாட்டார்கள். இதுவும் கூட வாக்கு எண்ணிக்கையை பாதிக்கக்கூடிய செய்திதான். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் ஒரே முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். சிவாஜி லிங்கம் இன்றைய நிலையில் அவர்களிடமிருந்து வேறுபட்டாலும், தமிழ் பேசும் மக்கள் அனைவரும், தமிழ் தேச கூட்டமைப்பின் முடிவுகளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பொன்சேகா அணியினருடன் பேசுவது ஒன்றைத்தான் முதன்மையாக தமிழ் தேச கூட்டமைப்பினரும் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி பெறுமானால், பொன்சேகா அவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுப்பாரானால், பெருவாரியான அல்லது ஒட்டுமொத்த ஈழத்தமிழர் வாக்குகள், மகிந்தாவிற்கு எதிராக விழும் என்பதில் சந்தேகம் இல்லை. டக்ளஸ் தேவானந்தா என்ற இன்றைய அமைச்சரும், கிழக்கு மாகாண முதல்வருமான பிள்ளையனும், நாடாளுமன்ற நியமன உறுப்பினரான கருணாவும், பதவி பொறுப்புகளில் இல்லாமலேயே கொழும்பில் அமர்ந்து கொண்டு மகிந்தா வேட்புமனுவை ஆதரிக்கின்ற பிளாட் தலைவர் சித்தார்த்தனும், பெருவாரியான தமிழர் வாக்குகளை தங்கள் வேட்பாளர் மகிந்தாவிற்கு ஆதரவாக திருப்புவது இயலாத காரியம். வவுனியாவில் இருக்கின்ற கணிசமான பிளாட் வாக்குகள், இந்த முறை சித்தார்த்தன் கூற்றுக்கு ஏற்ப மகிந்தாவிற்கு விழும் என்று உத்தரவாதம் சொல்ல இயலாது. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் காலத்திய பிளாட் அமைப்பும், மாணிக்க வாசன் காலத்திய பிளாட் அமைப்பும், சித்தார்த்தன் கூற்றை கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆகவே தமிழர் வாக்குகள் நிச்சயமாக மகிந்தாவிற்கு எதிராகத்தான் திரும்பும். அதே சமயம் தமிழ் பேசும் முஸ்லிம்களை மீண்டும் யாழ்பாணத்தில் கொண்டு வந்து குடியேற்றுவேன் என்ற திடீர் வசனத்தை மகிந்தா அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் பேசும் முஸ்லிகளது வாக்குகளை ஈர்க்கலாம் என்று அவர் எண்ணினால், அடுத்த நாளே திரிகோண மலை மாவட்டத்தில், முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றிக் கொண்டிருக்கும் அரசின் திட்டங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. ஆகவே முஸ்லிம் வாக்குகளை ஈர்ப்பது என்பதிலும் கூட, மகிந்தாவிற்கு உறுதியில்லை. இத்தகைய சூழலில்தான், மகிந்தா தனது பீதியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முக்கியப் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்ட ராணுவத்தளபதியே தனக்கு எதிராக போய் விட்டார் என்றும், அதனால் நாடே அழியப்போகிறது என்றும் தேர்தல் கணிப்பை முன்கூட்டியே உணர்ந்து புலம்பியுள்ளார். இப்படித்தானே பிரபாகரனிடமிருந்து, கருணாவை பிரித்த ஆட்சியாளர்கள் சதி இப்போது சிங்களர் மத்தியிலேயே நடப்பதனால் திருப்பி அடிக்கிறது என்று கேட்பவர்களும் உண்டு.இந்த நேரத்தில் தேசிய சமாதான கவுன்சில் ஒரு செய்தியை அசை போடுகிறது. அதாவது அதிபர் ஆட்சியை கலைத்துவிட்டு, நாடாளுமன்றப் பாதையில் பிரதமர் ஆட்சியை கொண்டு வருவோம் என சூளுரைக்கும் பொன்சேகா கருத்து எடுபடும் நிலைமையில், இந்த அதிபர் தேர்தல் ஒரு முதிர்ச்சியற்ற பரிசோதனை என்று அது கூறுகிறது. ஆகவே இப்போதும் கூட காலம் இருக்கிறது என்றும், அதிபர் தேர்தலை ரத்து செய்து விட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நாடு திரும்பலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஜனநாயக பார்வையுடன் அதிபர் ஆட்சியையே ரத்து செய்வதும், அதிபர் தேர்தலை நடத்தாமல் இருப்பதும் செய்யலாமே என்று இலங்கை அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருக்கும் இந்திய அரசை நாம் கேட்கலாம்.