Sunday, December 27, 2009

சுனாமி பேரழிவும், மீனவ மக்களும்...!

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் அதிகாலை அது நிகழ்ந்தது. முதலில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் கடலிலிருந்து பேரலைகள், கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. கடலோரம் வாழ் மீனவ மக்கள் அனைவரும் அடித்துப் புரண்டு கொண்டு, ஓடி வந்தனர். கரையில் ஓடிவந்த பேரலைகள், பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி விட்டு, அமைதியாக கடலுக்குள் தங்கள் கரங்களை இழுத்துக் கொண்டன. அந்த இடைநேரத்தில் ஏற்பட்ட சேதங்கள் தான் பட்டியல் போடப்பட்டன. காட்சி ஊடகங்களில் கடல் சீற்றம் என்று முதலிலும், தண்ணீர் நகருக்குள் வந்தது எனவும் கூறியவர்கள் சுனாமி பேரலை என்ற பெயரை எழுதிக்காட்டினர். அந்தப் பெயர் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் ஊடகங்களுக்கும் கூட புதிய பெயராக இருந்தது. இந்தோனேஷியாவிலும், ஜப்பானிலும் இப்படி சுனாமி பேரலை திடீரென வருவதும், அது பெரும் சேதங்களை ஏற்படுத்துவதும், பலர் உயிர்களை பறித்துக் கொண்டு செல்வதும், அடிக்கடி நிகழும் நிகழ்ச்சிகள். அதனாலேயே அங்கெல்லாம் அட்டை வீடுகளை, மர வீடுகளை கட்டிக்கொள்வதில் கடலோரத்தில் வாழும் மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் சுனாமி பேரலையின் தாக்குதல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் 2004ம் ஆண்டு கடைசியில் வந்த சுனாமி பேரழிவு இலங்கைத் தீவைத் தாக்கியது. அந்தமான் தீவைத் தாக்கியது. தமிழ்நாட்டின் மீது படையெடுத்தது. கேரள கடற்கரையையும் பதம் பார்த்தது. ஆந்திராவின் கடலோரம் வரை அதன் கரங்கள் தீண்டின. தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்புகளை நாகப்பட்டினம் மாவட்டம் எதிர்கொண்டது. அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம். உயிர்ப்பலிகள் இந்த இரண்டு மாவட்டத்திலும் வரிசைக்கிரமமாக அதிகமாக இருந்தது. அதையடுத்து கடலூர் மாவட்டமும் திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தென் சென்னை ஆகிய மாவட்டங்களும் வரிசைப்பட்டியிலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன.சுனாமி பேரழிவு நடைபெற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவையைக் கூட்டி சுனாமி பேரழிவால் மரணமடைந்த மக்களுக்கும், கடலோரம் ஏற்பட்ட சேதங்களுக்கும் உடனடியான நிவாரணப் பணிகளுக்காக, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். அதே போல அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும், உடனடியாக ஹெலிகாப்டரில் சுனாமி பாதிப்பு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தச் சொன்னார். அதேபோல உலக அரங்கில் மேற்கத்திய நாடுகளில் இருக்கின்ற நிதி நிறுவனங்கள் கூட, தங்களது உயர்தொழில் நுட்ப வாய்ப்புகளிலிருந்து, சுனாமி பேரழிவின் பாதிப்புகள் நிகழ்ந்த இடங்களை அடையாளம் கண்டு, தங்கள் தொடர்பிலிருக்கின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, உடனடியாக கடலோரம் சென்று நிவாரண உதவிகளை செய்யுமாறு பணித்தன. நிதிநிறுவன தலைமைகளே நேரடியாக நிவாரணப்பணி செய்யக்கோரியதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இருமடங்கு அக்கறையோடு கடற்கரை ஓரங்களை நோக்கி ஓடிவந்தன. நேற்று வரை கடலோர மக்களது வாழ்நிலைபற்றி நேரடியான அனுபவங்கள் இல்லாத, தொண்டு நிறுவனங்கள் இப்போது கடலோரத்தை நோக்கி விரைந்து வந்தன. தங்கள் கவனத்தை எல்லாம் நிலத்தில் வாழும் தலித் பிரச்சினைக்கும், பெண்கள் பிரச்சினைக்கும், குழந்தைகள் உரிமைகளுக்கும் மட்டுமே, வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பணிசெய்து வந்த தொண்டு நிறுவனங்கள் கூட, முதன் முறையாக கடலோரம் வந்து, மீனவக் குப்பங்களை எட்டிப்பார்த்தனர். நிவாரணப் பணியாக உணவுப் பொட்டலங்கள், பழைய துணிகள் ஆகியவற்றை மீனவ குப்பங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அடுத்த நேர உணவுக்கே வழியில்லாமல், தங்களது படகுகளையும், வலைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் மீனவ மக்களுக்கு, உடனடித் தேவையான உணவு இந்த தொண்டு நிறுவனங்களின் சேவை காரணமாக வந்து சேர்ந்தது. அதே சமயம் தங்கள் சொந்தக்கால்களில் நின்று மட்டுமே, வாழ்ந்து வந்த மீனவ மக்களுக்கு பழைய துணிகளை பயன்படுத்த மனது தயாரில்லை. கடலுக்கு சென்று நேரடியாக மீன்கள் பிடித்து, கொண்டு வந்து விற்பனை செய்வதில், மட்டுமே தங்கள் வாழ்க்கையை நடத்திய, பாரம்பரிய மீனவ மக்கள் சில பண்பாட்டு பழக்கங்களை, தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தனர். அதாவது தங்களது வாழ்க்கைக்காக யாரையுமே சார்ந்து நிற்காத ஒரு பண்பு அவர்களது உற்பத்தி உறவின் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட தன்மையே அவர்களை தங்கள் அடிப்படை தேவைக்களுக்காக, பிறரை எதிர்பார்க்கும் தன்மையிலிருந்து விலக்கி வைத்திருந்தது. ஆனால் வயிற்றுப்பசி முதல் சில நாட்களுக்கு நிவாரண உதவி செய்யவரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்து, மீனவர்களை நிற்க வைத்தது. ஆனாலும் பழம் துணிகள் என்ற விசயத்தில் மீனவ மக்களால் சமரசமாக முடியவில்லை. ஆட்சியாளர்களும், தொண்டு நிறுவனங்களும் கடலோரம் நோக்கி ஓடி வந்த முதல் இரண்டு நாட்களும், இந்த பேரழிவு அதிகாரிகளை குறிப்பாக மீன்வளத்துறை அதிகாரிகளை, கடற்கரையை நோக்கி இழுத்து வர தவறிவிட்டது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுப்பு என்பதால் அதிகாரிகள் திரும்பிப்பார்க்கவில்லை என்று எண்ணமுடிந்தது. ஆனால் மறுநாள் திங்கட்கிழமையும் கூட, அரசு அதிகாரிகள் மீனவக்குப்பங்கள் நோக்கி படை எடுக்கவில்லை. மீன்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கூட, மீனவச் சமூகத்திலிருந்து வந்திருக்கவில்லை. பாரம்பரிய மீனவச்சமூகம், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும், பட்டம் பெற வைப்பதிலும், உயர்கல்வி கொடுப்பதிலும் இன்னமும் முன்னேறாத நிலைமையே நீடிக்கிறது. அதனால் அவர்களுடைய சமூகத்திலிருந்து, அரசு ஊழியர்கள் பணிக்கு ஆட்கள் வருவது அரிதான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த சூழலில் மீன்வளத்துறையில் எப்படி மீனவச் சமூக பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்? மீனவரல்லாத சமூகத்திலிருந்து அரசு ஊழியர்களாக உருவானவர்கள் தான், மீன்வளத்துறை அலுவலகத்திலும் காணப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடலோர மீனவர்களின் தேவைகளையும், வாழ்க்கையையும், அன்றாட பிரச்சினைகளையும், வழமையாக பருவமாற்றங்களில் எழுகின்ற சிக்கல்களையும், எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார்கள் அல்லது உணர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. நடந்து முடிந்த சுனாமி பேரழிவின் விளைவுகளை உடனடியாக உணர்ந்து கொள்வதில், இத்தகைய அதிகாரிகளும், ஊழியர்களும் தேவையான சுறுசுறுப்பைக் காட்டவில்லை என்ற செய்தியே மேற்கண்ட உண்மையை பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செய்யப்பட்ட மறுவாழ்வு பணிகளை அறிவதற்கு, காஞ்சி மாவட்ட சூழலை மட்டும் எடுத்து பார்க்கலாம். காஞ்சி மாவட்டத்தில் கரிக்காட்டுக் குப்பம், உய்யாலிக்குப்பம் ஆகிய இடங்களில் அதிகமான வீடுகள் சேதமும், மரணங்களும் நிகழ்ந்தன. இழந்த படகுகளுக்கும், மீன்பிடி வலைகளுக்கும், மாற்றாக தொண்டு நிறுவனங்கள் நூற்றுக்கணக்காண படகுகளையும், வலைகளையும் அளித்தனர். கோடிக்கணக்கான நிதி தொண்டு நிறுவனங்கள் மூலம் உருண்டோடியதால், அதிகமான அளவு படகுகளை செய்து அதிக நிதியை பெறுவதற்கு விரும்பிய நிறுவனங்கள், கண்ணாடி இழைப்படகுகளை பெரும் எண்ணிக்கையில் இறக்கினர். அதில் பல கடலுக்குள் எடுத்துச் செல்வதற்கே பயன்படாமல் கரையில் நிற்கின்றன. இந்த நிலைமை கரிக்காட்டுக்குப்பம் கடலூர், நெம்மேலி, கடப்பாக்கம், கோவளம், கானத்தூர் ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தமுடியாமல் போடப்பட்டுள்ள படகுகளின் எண்ணிக்கையின் மூலம் தெரியவரும். இப்படியாக மீனவர்களுக்கு வந்தடைந்ததை விட, உதவி செய்ய வந்த அரசு உட்பட்ட நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை அதிகமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதிலும், காஞ்சி மாவட்டத்திலிருக்கும் 44 குப்பங்களில், 32 குப்பங்களிலிருக்கும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்களே கட்டிக்கொடுத்துள்ளன. அராசங்கம் மீதமுள்ள ஊர்களுக்குத்தான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. அராசங்கத்திடம் நிலுவையிலிருக்கும், சுனாமி நிதி சில ஆயிரம் கோடிகள் வரை வெளிப்படையான கணக்கு இல்லாமல் இன்று வரை இருந்து வருகிறது. பாரம்பரிய மீனவ மக்களுக்கு ஏன் இன்னமும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும் போய்ச் சேரவில்லை என்பது விவாதிக்கப்படவேண்டும். ஒரு உண்மை இதன் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. நிலம்சார் உலகம் என்பது வேறு. கடல்சார் உலகம் என்பது வேறு. நிலம்சார் உலகத்தை சேர்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகயியலாளர்கள் ஆகியோருக்கு இயல்பாகவே கடல்சார் உலக மக்களைப்பற்றியும், நிலமைப் பற்றியும் அறிதல் இருப்பதில்லை. நிலம் சார் உலக பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அமர்ந்து கொண்டு, கடல்சார் உலகத்தினர் பற்றிய திட்டங்களை தீட்ட முடியாது. நிலம்சார் உலகத்தின் அதிகாரிகள், கடல்சார் உலகத்தின் நலனுக்காக சிந்திக்க வாய்ப்பில்லை. இத்தகைய சூழலினால் கடல்சார் உலகை சார்ந்த, பாரம்பரிய மீனவர்களான கடல்சார் பழங்குடிமக்கள், அரசாங்க செயல்பாடுகளில் ஓரங்கட்டப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆகவே பழங்குடியினர் பட்டியலில் எப்போது பாரம்பரிய மீனவர்கள் சேர்க்கப்படுகிறார்களோ, அப்போதுதான் அவர்களுக்கே உரிய கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை கிடைக்கமுடியும். ஆகவே உடனடியாக பாரம்பரிய மீனவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய அரசு முயலுமா? என்று நாமும் கேட்க வேண்டியுள்ளது.