Wednesday, December 23, 2009

திருவாதிரைக்கு யாழ்பாண தமிழருக்கு கப்பல் விடுங்கள்

ஈழத்தமிழர்கள் மத்தியில் சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்கள், கத்தோலிக்க நம்பிக்கை கொண்டவர்கள் என மக்கள் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக யாழ்பாண வளைகுடாவில் வாழ்கின்ற மக்கள், சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற அல்லது வாழ்ந்து வந்த பெருவாரியான தமிழ்மக்கள், சைவ சமயம் சார்ந்தவர்களே. இந்து மதத்தில், சைவம், வைணவம் என்ற இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தாலும் கூட, தமிழர்கள் மத்தியில் குறிப்பாக சைவ சமயத்தின் செல்வாக்கு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. சிவன் வழிபாட்டை சார்ந்திருக்கின்ற தமிழ்மக்கள், சிவாச்சாரியார்கள் என்ற முன்னோடிகளை மரியாதைக்கூறியவர்களாக பார்த்து வருபவர்கள். முருகன் வழிபாட்டை வழக்கமாக கொண்டவர்கள், அதில் மிகப்பெரும் பான்மையினராக மூழ்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே எடுத்துக் கொண்டாலும், முருக கடவுள் வழிபாடு என்பது ஒரு முதன்மையான வழிபாடாக இருக்கிறது. முருகக்கடவுளை, தமிழ் கடவுள் என்று அழைக்கும் அளவுக்கு, ஆன்மீகம் இங்கே ஆழவிதை போட்டுள்ளது. மௌரீசியஸ் சென்று வந்த பிறகு, அங்குள்ள தமிழர்கள் பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரையிலே உரையாற்றும் போது, ஆர்.எம்.வீரப்பன் ஒரு செய்தியைக் கூறினார். அதில் தயவு செய்து பகுத்தறிவு பார்வை கொண்டு, தமிழ் இனத்தை, தமிழர்களை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று கூறினர். அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொண்டதுதான் மௌரீசியஸ் நாடு. அங்கே இருக்கின்ற மக்கள் தொகை அனைவரும் தமிழர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியாது. தமிழ் எழுதத்தெரியாது. ஆகவே இங்கிருந்து தமிழாசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவரது அவாவாக இருந்தது. ஆனால் இங்கே இருக்கும் தமிழர்களையும், மௌரீசியஸ் நாட்டின் வாழும் தமிழர்களையும் இணைப்பது ஒன்றே ஒன்றுதான் என்று அவர் கூறினார். அது கடவுள் வழிபாடுதான் என்று விளக்கம் அளித்தார். அங்கேயும் முருக கடவுளைத்தான் வழிபடுகிறார்கள் என்ற செய்தியைக் கூறினார். அதன் மூலம் அவர்களும் தமிழர்கள்தான் என்பதை அறுதியிட்டார். இங்குள்ள தமிழர்களுக்கும், மௌரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலே உள்ள இணைப்பே முருகக்கடவுள்தான் என்று விளக்கினார். மேற்கண்ட ஆர்.எம்.வீரப்பனின் விளக்கம் உண்மையிலேயே சிந்திக்க கூடியதாக இருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையும், இணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுவதற்கு, அல்லது வலுப்படுத்துவதற்கு, பல்வேறு அடையாளக் குறியீடுகள் அவசியமாகிறது. அப்படிப்பட்ட அடையாளக் குறியீடாக, ஆன்மீக சின்னங்கள் ஆண்டுபலவாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. அதுதான் இந்த இடத்தில், தமிழர்கள் மத்தியில் முருகக்கடவுள் என்ற அவதாரமாக காட்சியளிக்கிறது. சைவ சித்தாந்தமும், அதன் இலக்கியங்களும் பழம்பெருமை வாய்ந்தவை. அவை ஆழமாக தமிழர் பெருமையை, தமிழர் பண்பாட்டை பதியவைக்கின்றன. சைவ சித்தாந்த நூல்கள் இன்று வரை, தமிழ் இலக்கியத்தின் வரலாற்று சான்றுகளாக நிற்கின்றன. யாழ்பாணத்தில் மட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில், முருகன் கோவில்கள் பிரபலமானவை. அதே போல புலம் பெயர் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்ற, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும், கோயில்களை தாங்கள் வாழும் இடங்களில் நிறுவுவதும், அவற்றில் தமிழிலேயே பூசைகள் செய்வதும், சைவ சமய பரப்புரைகளை கவனமாக, முறையாக தொடர்ந்து செய்து வருவதும் நாம் அறிந்த செய்தியே. அந்த அளவுக்கு சைவமும்,தமிழும் இரண்டறக் கலந்து நிற்கின்ற ஒரு நிலையை, தமிழ் தேசியத்தின் விடுதலைப்போராட்ட காலமான இன்று, நாம் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் தமிழர் விடுதலைக்கான கருவி ஏந்திய போராட்டத்தை நடத்திய போராளிகள் கூட, தங்களது போர்க்கள வெற்றியை கொண்டாடும் முகத்தோடு, அவ்வப்போது அங்குள்ள முருகன் கோவில்களில், புலால் உண்டு மகிழ்ந்தார்கள் என்பதான செய்திகள் வந்ததுண்டு. அன்று முதல், இன்று வரை இப்போதும் சைவ சமய சிந்தனைகளில் ஊறிப்போன குடும்பங்களாக, தமிழ் குடும்பங்கள் இருந்து வருகின்றன. தங்களது இன அடையாளங்களை, இழப்பதற்கு தயாராய் இல்லாத ஒரு இனம், தங்களது சமயச் சார்பு அடையாளங்களை இழப்பதற்கும் தயாராக இருக்காது. பகுத்தறிவு பார்வையும், பெரியார் சிந்தனையும் கொண்ட தமிழ் மக்களே கூட, தமிழ் தேசிய இனத்தின், சைவச் சமய ஈடுபாட்டையும், பண்பாட்டு பழக்கங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டு உரிமைகளை, அவர்கள் இழப்பதையோ, அவர்களது சமயச்சார்பு செயல்பாடுகள் மறுக்கப்படுவதையோ, சுதந்திர மான ஆன்மீக செயல்பாடுகள் செய்வதற் கான உரிமை பதிக்கப்படுவதையோ, மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதை மனித உரிமை மீறல் என்பதாகவே அழைக்கின்றனர். மதத்தின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்பதுதான் அகிலம் தழுவிய மனித உரிமை பிரகடனம் என்று அழைக்கப்படும், ஐக்கிய நாட்டு சபையின் பிரகடனம் கூறுகிறது. சைவ சமயத்தில் ஊறிப்போன தமிழர்கள், ஒவ்வொரு நாளும் 5 நேரமும் தேவாரம் பாடுவார்கள் என்ற செய்தி, யாழ்பாண தமிழர்கள் பற்றி அநேகமாக தமிழகத்து மக்கள் அறிந்திராத செய்தி. அதுமட்டுமின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவ்வப்போதும் சமீபத்தில் தொடர்ச்சியாகவும், யாழ்பாணத்தில், திரிகோண மலையில், வவுனியாவில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில், மன்னாரில், மட்டக்களப்பில், ஆக்கிரமிப்பாளர்களாக அமர்ந்திருக்கும் இலங்கை ராணுவம், முழுமையாக சிங்களவர்களைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் அனைவரையும் புத்தமத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது வழிபாட்டுக்காக, ஒவ்வொரு ராணுவ முகாம்களுக்கு பின்னாலும், ஒரு புத்த பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் போன்ற பகுதிகளில், இயற்கையாகவே எல்லா இடங்களிலும், அரசமரம் இருக்கிறது. அப்படிப்பட்ட அரசமரங்களின் அடியில், இத்தகைய புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் புத்தர்தான், புத்தமதத்தின் அடையாளக்குறியீடு. அப்படிப்பட்ட பண்பாட்டு குறியீட்டை, பயன்படுத்தி சிங்கள அரசாங்கம் தனது ராணுவத்தினரது மத நம்பிக்கை உணர்வுகளுக்கு உரம் போட்டு விடுகிறார்கள். ராணுவ முகாம்களில் தினசரி அதிகாலை, புத்தபெருமானை எழுப்புகின்ற பாடல்கள் என்ற சுப்ரபாதங்கள் இசைக்கப்படுகின்றன. அருகே இருக்கும் தமிழ்மக்கள் குடியிருப்புகளில், வாழ்ந்து வரும் தமிழ் பெண்களுக்கு, இது ஒரு எரிச்சலூட்டும் செயலாகவும், பண்பாட்டு ஆக்கரமிப்பாகவும் படுகிறது. சைவ சமய நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், கந்தசஷ்டி கவசம் போன்ற பாடல்களை, தொடர்ந்து இசைத்து அதிலேயே லயித்து போய் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சிங்களர்கள் கொடுக்கின்ற புத்திச பரப்புரை பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட பண்பாட்டு சிக்கலிருந்து, நெருக்கடியிலிருந்து, மூச்சு விடுவதற்கான நேரத்தையாவது கொடுப்பதுதான் மனிதப் பண்பு.அப்படிப்பட்ட வாய்ப்பு ஒன்று, இப்போது இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. அதாவது பாரம்பரியமாக தங்களது சைவச் சமய வேர்களை, தமிழ்நாட்டில் தேடிக்கொண்டிருக்கும், யாழ்பாண தமிழர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு அது. அதாவது இந்த மாத இறுதியில் திருவாதிரை திருநாள் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரம் கோயிலில், திருவாதிரைத் திருநாள் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டுடன் நடக்க இருக்கிறது. அதை ஆருத்ர தரிசனம் என்பதாக அழைக்கிறார்கள். அந்த சைவ வழிபாட்டுக்கு, யாழ்பாணத்திலிருக்கின்ற, மற்றும் ஈழத்திலிருக்கின்ற சைவச் சமயச் சார்பு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வந்து, கலந்து கொண்டு, உவகை கொள்வது வழக்கம். பல பத்தாயிரம் மக்கள், ஈழத்திலிருந்து சிதம்பரத்திற்கு வருவார்கள். அவர்கள் தமிழகம் வந்து, சிதம்பரம் கோயிலில் திருவிழாவில் கலந்து கொள்ள உதவிகரமாக, இந்திய அரசு தொடர் கப்பல் போக்குவரத்தை செய்து வந்தது. 30 ஆண்டுகளாக நடந்து வந்த ஈழப்போர் காலத்தில், அப்படிப்பட்ட பயணங்கள் நிறுத்தப்பட்டன. இப்போது அரசு அறிவிப்புப்படி போர் முடிந்து விட்டது. தேர்தல் வரயிருக்கிறது. தமிழ் மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையென, அரசியல்வாதிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்கள், ஆருத்ரா தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கில், சிதம்பரம் வருவதற்கு ஏதுவாக கப்பல் போக்குவரத்தை இந்திய அரசு செய்து கொடுக்குமா? தமிழக அரசு நிர்பந்திக்குமா? தமிழரான உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஈழத்தமிழர்கள் சிதம்பரம் வருவதற்கு வழிவகை செய்வாரா? இந்த கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.