Tuesday, December 22, 2009

கோபன்ஹெகன்: பணம் கொடுத்து உடன்பாட்டை வாங்கிய வர்த்தகர்கள்?

நேற்று அமெரிக்கா முழுவதும் பனியால் மூடப்பட்டது. வரலாறு காணாத பனி என்பதாக அது வருணிக்கப்பட்டது. நியூயார்க் சாலை முழுவதும் பனி மூடியிருந்தது. கிறிஸ்மஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க முடியாமல் பொதுமக்களும், நிறுவனங்களும் திணறினார்கள். பிரான்சிலிருந்து அமெரிக்காவிற்கு வருகின்ற பாதை முழுவதும் பனிப்படலம் ஸ்பெயின் நாட்டிலும், சீன நாட்டிலும் கூட இதே நிலைமை. அளவுக்கதிகமாக பனிப்படலம் வந்ததற்கு யார் காரணம்? பருவநிலை மாற்றம் கண்டபடி விரைவாக மாறிக்கொண்டேயிருப்பது எதனால்? வழமையாக கட்டுக்கள் இருக்கும் பருவநிலையை, சந்தித்த மக்கள் தங்களது கிறிஸ்மஸ் விழாவை குடும்பத்துடன் ஈடுபாட்டுடன், கொண்டாடுவார்கள். அப்போதெல்லாம் இயற்கை அவர்களை எதிர்த்து சதிசெய்ததில்லை. ஆனால் இப்போது இயற்கை பனிவடிவமெடுத்து தடையாக வந்து நிற்கிறது. மனிதர்களை இயற்கை ஏன் இப்படி வதைக்கிறது? இயற்கையின் விதிகள் வழமைபோல், அதன் போக்கிற்கு முன்சென்று கொண்டிருக்கிறது. மானுடம் இயற்கை விதிகளை புரிந்துகொண்டு, தங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையுடன் கையாள்கிறார்களா? இயற்கையின் விதிகளை புரிந்துகொள்ளாமல், அதன் மீது தாக்குதல் நடத்தினால், இயற்கை பதிலுக்கு தாக்குதல் நடத்தும். அதனால்தான் அமெரிக்காவில், பனிப்பொழிவால் 5பேர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. மானுடத்தை ஒட்டுமொத்தமாக இதற்காக குறைசொல்லலாமா? மானுடத்தின் ஒரு சிறுபகுதி இப்படிப்பட்ட உடைவுக்கு, காரணமாக இருக்கின்றார்களா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகண்டுவிட்ட, உலகநாடுகள் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை காண, டென்மார்க் நாட்டில், கோபன்ஹெகன் நகரில் ஐ.நா.சபையின் ஏற்பாட்டில் கூடினார்கள். கூடி, கூடி பேசினார்கள். 10 நாள் பேசினார்கள். 11ம் நாளும் பேசினார்கள். 12ம் நாள் உலகத்தலைவர்கள் 119 நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் கூடினார்கள். அவர்கள் கூடுவதற்கு முன்னால், முன்வைக்கப்பட்ட வரைவு நகல்கள் விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி வந்தார். 119 நாட்டு தலைவர்கள் கூடி மேசைப் பேச்சு நடத்த முடியாது; தீர்வை விவாதித்து எட்டமுடியாது; ஆகவே தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னாலேயே, அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பேசிமுடிக்க வேண்டும் என்றும், தலைவர்கள் கையெழுத்திட்டு அறிக்கையை அறிவிக்க வேண்டும் என்றும் விளக்கமாக ஜெய்ராம் ரமேஷ் கூறிவந்தார். அதுமட்டுமின்றி கியோடா பிரகடனப்படி, வளர்ந்த நாடுகள் 2012க்குள் தங்களது வாயு வெளியேற்றத்தை, கடுமையாக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வளரும் நாடுகளுக்கு தேவையான நிதியையும், தொழில்நுட்பத்தையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். மேற்கண்ட வலியுறுத்தல்கள் 12ம் நாளுக்குப்பிறகு, தலைகீழாக மாறிவிட்டதா என்று நாம் ஜெய்ராம் ரமேஷை கேட்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏனென்றால், ஜெய்ராம் ரமேஷ் கூறிய 119 நாட்டு தலைவர்கள் கூட அல்ல, வெறும் 4நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபருடன் சேர்ந்து ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி, முந்தைய அறிவிப்புகளுக்கு முரண்பட்டிருக்கிறது என்று அந்த மத்திய அமைச்சருக்கு தெரியுமா என நமக்குத் தெரியாது. அதேபோல 5 தலைவர்களும் சேர்ந்து, 12 நாட்களாக 100க்கும் மேற்பட்ட நாட்டுப் பிரதிநிதிகள் கூடிப் பேசி, முடிவுக்கு வரமுடியாத ஒரு வரைவு நகல் மீது, முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது எப்படிச் சாத்தியம்? அதுபோலவே விடாபிடியாக, இந்தியாவும், சீனாவும், வளரும் நாடுகளும் அழுத்தம் கொடுத்து வந்த, கியோடா பிரகடனம் ஓரங்கட்டப்பட்டு, ஒரு முடிவு உருவாகிறது என்றால், அது அனைத்து நாட்டு அங்கீகாரம் பெற்ற முடிவா? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் எழுந்தாலும் கூட, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷûக்கு எந்த கேள்வியும் எழாமல், வெளியே வந்த அறிக்கையை ஆதரித்து பேச மட்டும் தைரியம் வந்தது எதனால்? ஒபாமாவினுடைய திடீர் பிரவேசம், இப்படியொரு ஏடா கூடமான அறிக்கையை வெளியே கொண்டு வந்திருக்கிறது என்பதை உலக ஊடகங்கள் வேடிக்கையாகப் பார்க்கின்றன. ஐ.நா.வையே தகர்ந்தெறிந்தார் பாரக் ஒபாமா என்று ஒரு தலைப்பு. அதாவது ஐ.நா. ஏற்பாடு செய்து பருவநிலை மாற்றத்திற்கான 15வது மாநாட்டில், தொடக்கத்திலிருந்தே ஐ.நா. முன்வைத்த 1990ன் மட்டத்தில் இருந்த, வாயு வெளியேற்ற அளவை அடிப்படையாகக் கொண்டு, எந்த அளவு ஒவ்வொரு நாடும் வாயு வெளியேற்றத்தை செய்யும் என்று கேட்டு வந்ததை, மறுத்து அமெரிக்கா முன்வைத்த 2005ம் ஆண்டின் மட்டத்தை அடிப்படையாகக் கொள்வது என்பதையே, பலநாடுகளும் பேசி வந்தன. கடைசியாக ஐ.நா. கூட்டிய 119 நாட்டு தலைவர்கள் கூடி முடிவு செய்யாமல் 5 நாட்டு தலைவர்கள் முடிவு செய்தார்கள் என்றால், ஐ.நா.வையே தகர்த்தார் பாரக் ஒபாமா என்ற தலைப்பு பொருத்தமானதே. உலக சமூகம் இரவில் இருட்டில், காணாமல் போனது என்பதாக, ஊடகங்கள் தலைப்பிட்டன. இதுவும் கூட முழு இரவிலும் நடந்த மேசைப் பேச்சில், தூங்கி வழிந்து கொண்டே கலந்து கொண்ட பல நாட்டு தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, 5 நாட்டு தலைவர்கள் முடிவு செய்தார்கள் என்றால், உலக சமூகம் இருட்டில் காணாமல் போனது என்பதாகத் தான் பொருள் கொள்ளமுடியும். மனித உரிமைகள், பெண்களின் பாத்திரம், போலியோ எதிர்ப்பு, அகதிகள் பிரச்சனை ஆகியவற்றைப் பேசும் போது, ஐ.நா. சபையும் பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளை வரவழைத்து, அமரவைத்து பேசி முடிவெடுப்பார்கள். ஆனால் தங்கள் பொருளாதாரத்தின் மையமான, எரிபொருளான பிரச்சனையை பேசும் போது, அந்த ஏழை நாடுகள் பற்றி மறந்து விடுவார்கள். அமெரிக்க பொருளாதாரத்தில் மையமாக 50 ஆண்டுகளாக நிலக்கரி இருக்கிறது. போர் பற்றியும், சமாதானம் பற்றியும் பேசும் போதும், அவர்கள் ஏழை நாடுகளை புறந்தள்ளினார்கள். இப்போது பூமி வெப்பமடைதல் விஷயத்திலும் அதையே செய்கிறார்கள். அப்படியானால் ஐ.நா.சபை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது? தீவிர மாசுபடுத்தும் நாடுகளை ஒரு கூட்டாக அமெரிக்கா சேர்த்து விட்டது. சீனாவும், அமெரிக்காவும், இந்தியாவும் தாங்கள் நிலக்கரியை அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை, நிறைவேற்றி இருக்கிறார்கள். இது நரிகளின் கூட்டணி. இந்த நரிகள் கூட்டுச் சேர்ந்து, கோழிக்குஞ்சு பண்ணையை பாதுகாக்கப் போகின்றனர். அவர்களது இலக்குகள் பலவீனத்தில் தொடங்கி இருப்பற்ற நிலை வரை எட்டுகிறது. ஒபாமாவின் இந்த அறிக்கையை, வருங்காலத்தில் அமெரிக்காவிற்கு வரப்போகிற குடியரசு கட்சியின் அதிபர் ஏற்றுக் கொள்வாரா என்பது இன்னொரு பிரச்சனை. எது எப்படியிருந்தாலும் பாரக் ஒபாமா, ஐரோப்பாவையும், உலகிலுள்ள ஏழை நாடுகளையும் இழுத்துப்போட்டு, தன்னுடைய உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக அறுவடை செய்து விட்டார் என்பது தான் உண்மை. அதில் ஜார்ஜ் புஷ்ஷை விட, ஒபாமா கெட்டிக்காரர் என்பது நிறுவனமாகிறது. ஆனாலும் கூட ஜி77 நாடுகள் இந்த கோபன்ஹெகன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. புஷ்ஷிடமிருந்து, ஒபாமா மாறுபட்டவரல்ல என்பதும் நிருபணமாகியுள்ளது. கோபன்ஹெகன் பூமி வெப்பமடைதல் பற்றியது அல்ல; பணப்பரிமாற்றம் பற்றியது என்பதாக ஒரு செய்தி வெளியாகியது. இந்தியாவிலும், சீனாவிலும் இருக்கின்ற மிகச்சிலர் சேர்ந்து கொண்டு, தங்களது நலனுக்கு எப்படி இந்த உலக நிலைமையை கையாள முடியும் என்று கற்றுவைத்திருக்கிறார்கள். இந்த உலகில் எது வேகமாக வளர்ந்து வரும் சரக்கோ, அதை திரட்டி வைத்துக்கொண்டு விற்பனை செய்கின்ற வர்த்தகர்கள், வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிகளை எட்டுவதற்கு மூலக்காரணமாக, கோபன்ஹெகன் மாநாட்டின் அரசராக, அறிவியல் மேதை என்று வருணிக்கப்பட்ட டாக்டர் ராஜேந்திர பச்சௌரி இருந்தார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அவர் ஒரு முன்னாள் ரயில்வே பொறியியலாளர் என்றும், பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர் என்றும், சுற்றுச்சூழல் அறிவியலாளர் அல்ல என்றும், இப்போது சூழலை மாசுபடுத்தும் வணிகக்குழுமங்களுக்கு விலை போய், உலக மக்கள் விரோத உடன்பாடொன்றை, அறிவிக்க துணைப் போய் விட்டார் என்றும், உலகெங்கிலும் இருந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக சதிக்கு, அமெரிக்காவுடன், இந்திய அரசு கைகோர்த்துக் கொண்டதா? இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்