Monday, December 21, 2009

விவசாயத்துறை அமைச்சர் எதைச் சாதித்தார்?

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இந்த கட்சி, இந்திய தேசிய காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, மத்திய அரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆண்டு கொண்டு வருகிறது. இவர்களது கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பேசும் போது, சரத்பவார் இந்தியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு பற்றி அக்கறையுடன் பேசியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களில் விலை உயர்வு என்பது, சாதாரண மக்களை தாக்கி வருகிறது என்ற உண்மையை அப்போது மொழிந்துள்ளார். இந்த உண்மை நிலவரத்தை மாற்றி அமைப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாடு எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சியை சமாளித்து வருவதாகவும், பெருமையாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அரசு தான் எடுக்கின்ற முன்னேற்றமான நடவடிக்கைகளின் மூலம், பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு குறைத்திருக்கிறோம் என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கட்டாயத்தேவை என்பதை அந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்திருப்பதாகவும், செய்து கொண்டிருப்பதாகவும், மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டியதுதான் பாக்கி என்பதாகவும் அமைச்சர் சரத்பவார் புரிய வைத்துள்ளார். இதுதான் உண்மையா என்பதையும், உண்மை நிலை என்ன என்பதையும் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் நள்ளிரவில் சுதந்திரம் வாங்கிய பிற்பாடு, இந்திய ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன என்பது பார்க்கப்படவேண்டும். விவசாயத்தை வளர்ப்பதற்கான திட்டங்களாக, 5ஆண்டு திட்டங்களும், கட்டப்பட்ட அணைக்கட்டுகளும், அன்றைய கால முயற்சிகளாக இருந்தன. அதன் பிறகு தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அமைச்சர்களும், ஆட்சியாளர்களும், விவசாயத்திற்கு எந்த அளவுக்கு கவனம் செலுத்தினார்கள் என்பதை கணக்கில் கொண்டுதான் விவசாயத்துறை அமைச்சரின் வாதங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளமுடியும். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் என்று அமைச்சர் சரத்பவார் கூறியிருப்பது, சமவெளிப்பகுதிகளில் விவசாயத்தின் மூலம் கிடைக்கின்ற விளை பொருள்களையும், மலைப்பகுதிகளில் இயற்கையாக உருவாகின்ற பழவகைகள் மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்களையும், கடல் பகுதிகளில் கிடைக்கின்ற மீன், நண்டு, மற்ற கடல் வாழ் உயிரினங்களையும் மொத்தமாக குறிக்கிறது. இன்னமும் குறிப்பாக சொல்லப்போனால், கடல் வாழ் உயிரினங்களை பிடித்துக் கொண்டு வருகின்ற மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்ற மீன்வளத்துறையும், இவரது கைகளில் இருக்கின்ற விவசாயத்துறைக்கு உள்ளேதான் அடக்கம். அதாவது மீன்வளத்துறைக்காக மாநிலங்களில் இருப்பது போல, தனியானதொரு அமைச்சகம் மத்திய அரசில் இல்லை. இதன் மூலம் வேறுபட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட, உணவுப் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தியை ஒழுங்குபடுத்த பிரத்யேகமான ஆய்வுடனும், பார்வையுடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டிய பிரத்யேக அமைச்சகத்தை ஏற்படுத்தாமல் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் மத்திய அரசு வைத்திருப்பதனால் கூட, வளர்ச்சிக்கு குந்தகமான நிலைமை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. விலை உயர்வால் அவதிப்படுகின்ற பொதுமக்களைப்பற்றி பவார் கவலைப்பட்டிருக்கிறார். அதுவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு கவலைப் பட்டிருக்கிறார். அப்படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மக்களை சென்றடையாவிட்டால், மக்கள் நிலைமை பட்டினியில் தான் சென்று முடியும். அப்படிப்பட்ட பட்டினி சூழல் எத்தனை மக்களை பாதித்திருக்கிறது என்று பட்டியல் கேட்போம் என்றால், அதற்கும் அரசு ஒரு புள்ளி விவரத்தை தருகிறது. அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான புள்ளி விவரப்படி, இந்தியாவில் இப்போது 35 கோடி மக்கள் வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். வறுமையின் எல்லைக் கோடு என்பதை அரசாங்கம் ஒரு அளவுக்குறியோடு வரையறுத்துள்ளது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.12 வருமானம் பெறக்கூடிய மக்களும், நகர்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.18 வருமானம் பெறக்கூடிய மக்களும், வறுமைக்கோட்டின் எல்லைக்கு கீழ் உள்ளவர்கள் என்பதாக அரசாங்கம் வரையறுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண்களின் மக்கள் தொகையில் 50 விழுக்காடுவே எழுத்தறிவு இன்றி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை அரசாங்கமே தருகிறது. பெண் சிசுக்கள் பல இடங்களில் கொல்லப்படுவதால், பல மாநிலங்களில் ஆண் பெண் விகிதாச்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் பல மாநிலங்களிலிருந்தும், அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருப்பதால், இப்போது அதை தொடர்ந்து சொல்வதற்கே ஆளில்லாமல் ஆகிவிட்டது. பல லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாத நிலையில் வெளியேறி விட்டனர். அதில் பல குழந்தைகள் தெருவோர குழந்தைகள் பட்டியலில் சேர்ந்து விட்டனர். அதில் பலரும் 10 வயதுக்கு முன்பே, கடுமையான உழைப்பில் ஈடுபடுத்த வைக்கப்படுகின்றனர். அதாவது குழந்தைத் தொழிலாளர்களாக நாடெங்கிலும் அவதிப் பட்டுவருகின்றனர். இப்படிப்பட்ட அனைத்துப் பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது வறுமை, வேலையின்மை ஆகியவை. பட்டினி என்பது இந்த நாட்டு மக்களுடைய இணை பிரியா சொத்தாக மாறியிருக்கிறது. அனைத்திற்கும் பொறுப்பெடுக்க அமைச்சர் சரத்பவாரின் விவசாய அமைச்சகம் தயாராக இருக்கிறதா? அமைச்சர் கூறும்போது, இதுவரை இல்லாத அளவு எழுந்துள்ள வறட்சி நிலைமை பற்றிக் கூறுகிறார். அதற்கான காரணத்தை அடுக்கும் போது, மழை பொய்த்துவிட்டதால் நாட்டின் பல்வேறு பாகங்களில் இந்த முறை வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதே கூற்றைத்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், தான் ஆட்சிப் பொறுப்பு எடுத்தவுடனேயே கூறி, அதற்காக பல்வேறு அகில இந்திய மாநாடுகளை நடத்தி, அதெற்கெல்லாம் தீர்வு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்தான் என்று கூறினார். அதன் பெயரையும் கூட, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் என்பதாக பெயர் மாற்றம் செய்து, அதன் மூலம் ஆட்சியாளர்கள் அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படியிருந்தாலும், மக்களின் பிரச்சனை மட்டும் தீரவில்லை என்பதை, அவர்களது உரைகளே அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அமைச்சர் சரத்பவார் பொறுப்பில் உள்ள அமைச்சகத்திலிருக்கும், மீன்வளத்துறை இப்போது மீனவ மக்களுக்கு முன்னால், பெரும் சவாலை வைத்துள்ளது. 2009ம் ஆண்டின் மீன்பிடி தொழில் ஒழுங்கு படுத்தல் மசோதா என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற அந்த துறை, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்களாலும், வெவ்வேறு கட்சிகளாலும், அந்த மசோதாவுக்கு எதிரான கருத்தையும் பெற்றுள்ளது. அப்படி இருந்தும் கூட 12 கடல் மைல்களைத் தாண்டி, பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்ற இந்த புதிய வரைவு மசோதா, நாடெங்கிலும் சீக்கிரத்தில் கலந்துரையாடலுக்கு அனுப்பப்படும் என்ற செய்தியை மௌனமாக மத்திய அரசு தருகின்றது. 12 நாட்டிங்கல் என்ற கடல் மைல்களை தாண்டி உள்ள பகுதியை முழுமையான பொருளாதார மண்டலம் என்பதாக இந்திய அரசு அழைக்கிறது. அப்படிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் மீன் பிடித்தல் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் முன்வைக்கின்ற நகல்தான் அது என்பது அவர்களது விளக்கம். இப்போது எதிர்ப்பு எல்லா திசையிலிருந்தும் எழுந்து வந்ததால், மாநில அரசாங்கங்கள் உட்பட, மீனவ மக்களையும் சேர்த்து, இதன்மீதான கலந்தா லோசனைகளை விரிவாக நடத்தப்போகிறோம் என்றும், அதற்கு பிறகே இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சிக்கு முன்செல்வோம் என்றும், இந்த துறை கூறுகிறது. இந்தியா மீன்களையும், மீன்களிலிருந்து உருவாக்கப்படும் உற்பத்தி பொருள்களையும் ஏற்றுமதி செய்வதில் முதன்மையான நாடாக, உலகத்தில் நிற்கிறது. அதை இறக்குமதி செய்யும் நாடுகளில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட உலகின் பலநாடுகள், சட்ட விரோதமான மீன் பிடித்தல், ஒழுங்கு படுத்தப்படாத மீன் பிடித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒழுங்கு படுத்தலுக்கான ஒரு சட்டத்தை உருவாக்காமல், அத்தகைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற நிலையில், இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பாரம்பரிய மீனவ சமூகத்தை, இத்தகைய மசோதாக்கள் எந்தளவு திவாலா ஆக்கிவிடும் என்ற சமூகப்புரிதல் அரசு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு பொறுப்பு எடுப்பதுதான் முறையே தவிர, மாநில அரசுகள் மீது பொறுப்பை தள்ளி விடும் முறை, ஒரு பொறுப்பற்ற தன்மை கொண்டதே.