Sunday, December 20, 2009

காடுகளிலிருந்து தலைநகர் நோக்கி...

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் அவர்கள் கூடினார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் கூடிய அந்த கூட்டத்தில் பெருவாரியானவர்கள் ஆதிவாசிகள். ஒரிசாவிலிருந்து பலர் வந்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து அந்தப் பேரணிக்கு அணி திரண்டவர்கள் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டிலிருந்தும் ஆதிவாசிகள் அணிதிரண்டு வந்தார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. ஜந்தர்மந்தர் மையத்திலேயே வழக்கமாக டெல்லியில் எடுக்கப்படும் பேரணிகள் எல்லாம் தடுக்கப்படுவது போல, அவர்களும் தடுக்கப்பட்டார்கள். அவர்களது பேரணி முக்கியமாக சத்திஸ்கர் மாநிலத்தில், துணை ராணுவமும், காவல்துறையும், சல்வாஜுடும் என்ற காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையும் இணைந்து கொண்டு, ஆதிவாசி மக்களை அடிப்பதையும், உதைப்பதையும், கிராமங்களில் புகுந்து படுகொலை செய்வதையும், முழக்கங்களாகவும், கோரிக்கைகளாகவும் உயர்த்தி பிடித்து, அந்த பேரணி நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பேரணியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும், டெல்லிப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்தும் வந்திருந்த ஆதிவாசி மக்களின் பின்னணி கொண்ட மாணவர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் வினவும் போது, அந்த இரு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்ற காவல்துறையின் அடக்குமுறை பற்றி விரிவாக எடுத்துக்கூறினர். ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த பெண்களை இந்திய அரசப்படையினர் எத்தனை தூரம் பாலியல் பலாத்காரங்கள் செய்து வருகின்றார்கள் என்ற விவரங்களையும் ஊடகயியலாளர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்கள். சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து, 10,000 ஆதிவாசி மக்கள் மூன்று ரயில் வண்டிகளில் முழுமையாக ஏறி, பயணச்சீட்டின்றியே டெல்லி நோக்கி தங்களது ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டு வர இருக்கிறார்கள் என்ற செய்தி, டெல்லி ஊடகயியலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை, ரயில் வண்டியிலே ஏறவிடாமல், ரயில்வே துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், திட்டமிட்டு தடுத்துவிட்டார்கள். இதுதான் ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் வரை வந்து தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, அதன் மூலம் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை வைத்து விட்டதாக திருப்தி அடைகின்ற மக்களுடைய உணர்வுகளுக்கு கிடைக்கின்ற மரியாதை. அதே போல ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதே பேரணிக்கு ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று பேசிய காவல்துறை அதிகாரிகளும், துணை ராணுவப்படையினரும், ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு டெல்லிக்கு பல்லாயிரக்கணக்கில் ஆதிவாசி மக்கள் செல்வார்களானால், வன்முறை வெடிக்கும் என்பதாக எடுத்துச் சொல்லி, அவர்களை பீதியடைய வைத்து, அங்கிருந்தும் டெல்லிப் பேரணிக்கு வரவிடாமல் செய்வதில் அரசு வெற்றியடைந்துள்ளது. டெல்லி பேரணி மூலம் சில ஆயிரங்களில் திரண்ட ஆதிவாசி மக்களின் நலன்களுக்கான கூட்டம், கடைசியாக அரசிடம் ஒப்படைத்த மனுவில் பல்வேறு அமைப்புகள் கையெழுத்திட, அதில் மணிப்பூர் மாணவரமைப்பும், நாகாலாந்து மாணவர் அமைப்பும் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் இத்தகைய அணி திரளலுக்கு காரணமாக இருந்த சூழல், சத்திஸ்கர் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சத்திஸ்கர் மாநிலத்தில் ஆண்டு வருவது பா.ஜ.க. ஆனால் அங்கே ஜனநாயக உரிமைக்குரல் எழுப்புகின்ற ஆதிவாசிகளை, அடக்கிக் கொண்டிருப்பது மத்திய அரசு அனுப்பி வைத்த துணை ராணுவ படையினர். மாநில காவல்துறை காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற ஆதிவாசி மக்களின் நிலங்களையும், வளங்களையும் கொள்ளையடிக்க வருகின்ற, தனியார் லாபநோக்க நிறுவனங்களுக்கு தங்களது நிலத்தில் இருக்கும் கனிம வளங்களை களவாட விடாமல் தடுத்த ஆதிவாசிகளை, போஸ்கோ என்ற ஆலையை நிறுவுவதன் மூலம் பாதிக்கப்படுவோம் என்று போராடும் ஆதிவாசி மக்களை, அடித்து உதைத்து அராஜகம் செய்கின்ற போக்கை எதிர்த்து போராடி வருகிறார்கள். அதே போல ஆந்திராவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் டெல்லி பேரணிக்கு புறப்பட்ட ஆதிவாசி மக்களையும் கூட பல்வேறு முறைகளில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தடுத்து நிறுத்தல்கள், ஜனநாயக ரீதியான போராட்ட வடிவங்கள் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா? ஆயுதம் ஏந்திய பாதையை பரப்புரை செய்யும் மாவோயிஸ்டுகள் பக்கத்தில் அந்த மக்களை தள்ளிவிடுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் மத்திய அரசு இருக்கிறது. ஏனென்றால் வருகிற 25ம் நாள் ஒரு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்க வேண்டிய நிலைமைக்கு, சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கின்ற காந்தியவாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் டிசம்பர் 10ம் நாள், உலகம் மனித உரிமை நாள் நிகழ்ச்சிகளையொட்டி, ஒரு பாத யாத்திரையை திட்டமிட்டார்கள். அந்த பாதை யாத்திரையை தண்டே வாடா என்ற இடத்தில் தொடங்கி, சத்திஸ்கர் மாநில தலைநகர் ரெய்பூர் நோக்கி எடுத்துச் செல்வதாக, காந்தியவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள். தண்டேவாடாவிலுள்ள வனவாசிகள் சேத்னா ஆசிரமம் ஒன்றை காந்தியவாதி ஹிமன்ஷû குமார் நடத்தி வருகிறார். அவர் ஆதிவாசிகள் மக்கள் மீது அனுதாபம் கொண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். அனைத்து விதமான வன்முறைகளையும் அவர் எதிர்த்து வருகிறார். அரசு தரப்பிலிருந்து வன்முறைகள் வந்தாலும், மாவோயிஸ்டு தரப்பிலிருந்து வந்தாலும் அவர் அவற்றை சமரசமற்று எதிர்த்து போராடி வருகிறார். அரசு தரப்பு வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அதனாலேயே அரசு படைகளின் வன்முறைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஆதிவாசிகள் மாவோயிஸ்டு உதவிக்கு செல்வதையும், விளக்கமாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் அவர் விளக்கினார். அப்படிப்பட்ட ஹிமன்ஷû குமார், சந்தீப் பாண்டேயுடன் சேர்ந்து, மனித உரிமை ஆர்வலர்களை அழைத்துக் கொண்டு, சமாதானத்தையும், சகஜநிலையையும் ஏற்படுத்துவதற்காக தண்டே வாடாவிலிருந்து அன்று பாதையாத்திரையை தொடங்கினார். ஆனால் சத்திஸ்கர் மாநில அரசாங்கமும், சல்வாஜுடும் என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய கூலிப்படை அவர்களை தடுத்து நிறுத்தியது. அந்த வட்டாரத்தில் பொதுமக்கள், குறிப்பாக ஆதிவாசி மக்கள், அரசு ஒடுக்குமுறையாலும், ராணுவ மயத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால்தான் அப்படி ஒரு சமாதானத்திற்கான பாத யாத்திரை தேவைப்பட்டது. அந்த மாநிலத்தின் காவல்துறை தலைமை அதிகாரியான டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ஊடகயியலாளர்களிடம் காவல்துறை பாதுகாப்பில் பாத யாத்திரை தொடங்கியுள்ளது என அறிவித்தார். ஆனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பே அரசு சார்பில் வன்முறை சக்திகளால் தடுக்கப்பட்டது என்பதே உண்மை. நாடு தழுவிய அளவிலிருந்து 39 பெண் ஆர்வலர்கள் பாத யாத்திரையில் கலந்து கொள்ள, ரெய்பூர் வந்திறங்கி தண்டேவாடா நோக்கி புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் வரும் வழியிலேயே, காங்கர் என்ற இடத்தில் சல்வாஜுடுமால் தடுக்கப்பட்டு, பேருந்திலிருந்து இறக்கப்பட்டனர். அந்த பெண் ஆர்வலர்களை சித்ரவதை செய்து, ரெய்பூருக்கு கூலிப்படை திருப்பி அனுப்பியது. வருகிற 2010ம் ஆண்டின் ஜனவரி 7ம் நாள் வனவாசி சேத்னா ஆசிரமம் ஏற்பாடு செய்துள்ள புது விசாரணையில் கலந்து கொள்ள, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பில் சல்வாஜுடும் பற்றியும், பச்சை வேட்டை பற்றியும், நீதிக்கான போராட்டம் பற்றியும், அந்த வட்டார ஆதிவாசி மக்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குகின்ற மாநில அரசாங்கம், அப்படிப்பட்ட சந்திப்பை அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் ஹிமன்ஷû குமாரும், மற்றவர்களும் தண்டேவாடாவில் தங்களுடைய உரிமை கோரிக்கைகளுக்காக சத்தியகிரகத்தை தொடங்க இருக்கிறார்கள். உள்துறை அமைச்சரிடம், அவரது வருகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கச் சொல்லி கோரியிருக்கிறார்கள். சத்திஸ்கர் மாநில அரசாங்கம் எந்த சதி செய்தாலும், உள்துறை அமைச்சர் தனது வருகையை ரத்து செய்யக்கூடாது என்றும் கூட கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக பி.யூ.சி.எல். தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரஜிந்தர்சச்சார், மேதாபட்கர், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆதிவாசி மகளிர் சங்க தலைவி மமதா குஜுர், பி.யூ.டி.ஆர். ஆஷிஷ் குப்தா, ஆகியோர் அதே குரலை எதிரொலித்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், இங்கே உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், அவரை நோக்கி இதே குரலை எதிரொலிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.