Friday, December 18, 2009

இலங்கை அதிபர் தேர்தலும், தமிழர் வாக்குகளும்

இலங்கைத் தீவில் ஒரு காலத்தில் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருந்து வந்தது. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும், தலைமையமைச்சரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களும் நாட்டை ஆண்டுவந்தனர். அத்தகைய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்காக, உறுப்பினர்களை விகிதாச்சார முறை மூலம் பொதுமக்கள் தேர்வு செய்து வந்தனர். விகிதாச்சார முறை என்பது ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வாக்குகள் என்பதாக வாக்களிப்பதும், அதில் கட்சித்தலைமையால் நியமிக்கப்படும் வேட்பாளர்கள் வரிசைப்படி தேர்வு செய்யப்படுவதும் நடைமுறையாகும். இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, இங்கே நடந்துவரும் தேர்தல்முறை வித்தியாசமாகயிருக்கிறது. இந்தியாவில் ஒரு தொகுதியில் இருக்கின்ற 100% வாக்களர்களில், 60% வாக்காளர்கள் பொதுவாக, உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கிறார்கள். 3அல்லது 4 கட்சிகள் அதே தொகுதியில் போட்டிபோடும் போது, பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில், 20% அளவு வாக்குகள் பெற்ற ஒரு வேட்பாளர், அந்தத் தொகுதியிலேயே அதிகமான வாக்குப்பெற்றவராக ஆகமுடியும். அப்போது அவர்தான் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 20% வாக்குகளைப் பெற்ற ஒரு வேட்பாளர், 80% வாக்காளர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்கப்படாத ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கின்ற ஒரு தேர்தல் முறை நமது நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் விகிதாச்சார தேர்தல் முறை என்பது குறைந்தளவு வாக்குகளை பெற்றிருக்கின்ற ஒரு சமூகமோ, அல்லது ஒரு அரசியல்கட்சியோ கூட, தனது பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை இலங்கைத் தீவில், நாடாளுமன்ற பாதையில் இருந்து வருகிறது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் நாடாளுமன்ற முறையில், குடியரசுத் தலைவர் என்ற ஒரு பதவி, நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்படுகிறது. அப்படி தேர்வு செய்யப்படுகின்ற குடியரசுத் தலைவர், அரசியல் சட்டத்தின்படி தீர்மானகரமான முடிவெடுக்கும் இடத்தில் இருந்தாலும் கூட, நாடாளுமன்றத்தின் தலைமையிலிருக்கும் மத்திய அமைச்சரவையில் எடுக்கின்ற முடிவுகளையொட்டி தனது ஒப்புதலை கொடுப்பது என்ற ஒரு அதிகாரத்தைத் தான் அவர் கொண்டிருக்கிறார். அதையே நமது அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் சொல்லப்போனால், குடியரசுத் தலைவர் பொறுப்பை, ரப்பர் ஸ்டாம்பு பொறுப்பு என்ற அழைக்கிறார்கள். தலைமை அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே இந்தியாவில் அதிகமான அதிகாரம் இருக்கிறது. அதேசமயம் அதிபர் ஆட்சிமுறை என்று கூறக்கூடிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் செனட்சபை என்றபெயரிலும், காங்கிரஸ் என்ற பெயரிலும், மேல்சபையும், கீழ்சபையும் இயங்கி வருகின்றன. அங்கே அதிபர் என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை என்று கூறுவதால், அவருக்கு அதிகமான அதிகாரம் என்பதாக ஆகிறது. இந்தியாவில் கூட, அவசரநிலையை இந்திராகாந்தி கொண்டுவந்த நேரத்தில், அனைத்து அதிகாரங்களையும் ஒருவரே கையில் வைத்திருக்கவேண்டிய தேவையை, ஆட்சியில் இருந்தவர்கள் உணர்ந்தபோது, குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையை கொண்டுவரலாமா என்ற விவாதம் பெருமளவு நடத்தப்பட்டது. ஆனாலும் 100 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பரந்த அளவு நிரப்பரப்பில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நாடாளுமன்ற ஆட்சிமுறை தான் ஜனநாயக ரீதியாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்ற ஆரோக்கியமான விவாதம் எழுந்த காரணத்தினால், குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை கொண்டுவரப்படாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் இலங்கைத் தீவின் நிலைமையை வேறுபோலாகிவிட்டது. 1970ன் காலந்தொட்டு, இனவாத அணுகுமுறையை ஆளுகின்ற சிங்கள ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்ததனால், பொருளாதார வளர்ச்சி சீராக அங்கே இல்லாமலிருந்தது. 1980ன் தொடக்கத்தில் நேரடியான ரத்தகளரிகளாக மாறிவிட்ட இனவாத மோதல்கள், ஆள்வோரின் ஆசிபெற்று நடத்தப்பட்டதால், அங்குள்ள பொருளாதாரம் மேலும் சீரழிந்தது. உடைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் தமிழர்களுக்கு சொந்தமானது என்ற காரணத்தினால், சிங்கள காடையரின் கோபத்திற்குள்ளானது. அதன் விளைவாக மூலதனமிட்டு தொழில் செய்தவர்களும் கூட, அந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தனர். இதுவே அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இடியாக அமைந்தது. தமிழர்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் மத்தியில் போராளி குழுக்களை உருவாக்கின. அவற்றைச் சமாளிப்பதற்காக, சிங்களஅரசு ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே அரசுக்கு மேலும் நிதிச்சுமையை அதிகரித்தது. பொருளாதார சிக்கல்களில் சிக்கிவிட்ட சிங்கள அரசு, விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கமுடியவில்லை. அப்படிப்பட்ட சூழல், ஜனத விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி கட்சியை மேலும் வலுவாக்கியது. அவர்கள் ஏற்கனவே 2முறை ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை, அரசுக்கு எதிராக செய்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க, ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சிமுறையை மாற்றியமைக்க எண்ணினார்கள். அப்படிப்பட்ட எண்ணத்தின் தொடர்ச்சிதான், அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து, கடைசியாக சந்திரிகா காலத்தில் கொண்டுவந்தார்கள். அதன்மூலம் அதிபர் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்துக்கொள்பவராக மாறிவிட்டார். இதுவே அதிகார குவிதலை ஒரே இடத்தில் கொண்டுபோய் கொட்டிவிட்டது. அதன்மூலம் மாறுபட்ட கருத்துள்ளவர்கள், அமைச்சரவையில் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. மங்கள சமரவீரா என்ற அமைச்சர், மகிந்த ராஜபக்சேயிடம் மாறுபட்ட கருத்துக் கொண்டு, வெளியேறி விமர்சனங்களை அள்ளி வீசிக்கொண்டு, அரசியல் நடத்திவருவது ஒரு உதாரணம். 3படைகளும் அதிபரின் அதாவது அரசத் தலைவரின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவது என்பது அதனுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சி. நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில், மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி கூட்டணி சார்பாகவும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, பிரபல எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனத விமுக்தி பெரமுனா ஆகியவற்றுடன் சேர்ந்துள்ள 14 கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தும் பொது வேட்பாளராகவும், மனுச் செய்திருக்கிறார்கள். இதுதவிர நீண்ட காலமாக அரசியலிலிருக்கும் லங்கா சமசமாஜ கட்சி என்ற பழம்பெரும் இடதுசாரி கட்சியிடமிருந்து பிரிந்த நவசமசமாஜ கட்சியின் தலைவர் டாக்டர் விக்ரம பாகு கருணாரத்னேயும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். மகிந்தாவிற்கு எதிராக நிற்கின்ற பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளின் அறிவுறுத்தல்படி, அந்த பொதுவேட்பாளர் பொன்சேகா தான் வெற்றி பெற்றால் உடனடியாக அதிபர் ஆட்சிமுறையை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறையை கொண்டுவருவேன் என உறுதி கூறியுள்ளார். அவரை ஆதரிக்கின்ற ஐதேகவும், ஜே.வி.பி.யும், மற்ற 14 கட்சிகளும் இதையே தங்களது தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்துள்ளார்கள்.

பொதுவாக வன்னிப்போரை நடத்தி வெற்றி பெற்றதில், மகிந்தாவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு சிங்கள பெரும்பான்மையிடம் இருக்கிறது. அந்த வரவேற்பை, வாக்குகளாக மாற்றுவதற்கு தான் உடனடியான தேர்தலை அதிபர் பதவிக்கு மகிந்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பது நாடறிந்த செய்தி. அதேபோல வன்னிப்போர் வெற்றியை கணக்கில் கொண்டுதான் தென்னிலங்கையில் பொன்சேகாவும் வாக்குப் பெற போகிறார். அதேசமயம் தமிழர் வாக்குகளுக்காக, பொன்சேகா சில புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அதிபர் தேர்தலில் 50%க்கு மேல் எடுப்பவர் தான் அதிபராக முடியும். இதை 2பெரிய வேட்பாளர்களும் எட்டாமல் இருப்பது, தமிழர் கையில் தான் இருக்கிறது. 2வது சுற்றில்தான் அதிபருக்குத் தேவையான 50% வாக்குகளை பெறமுடியும் என்ற சூழலை தமிழர்கள் நினைத்தால் ஏற்படுத்த முடியும்.